செய்திகள்

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய பணக்காரராக அதானி முதலிடம்

டெல்லி, நவ. 25–

2015-ம் ஆண்டிலிருந்து ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

புளூம்பர்க் அண்மையில் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 9,100 கோடி டாலராக இருந்தது. அதானியின் சொத்து மதிப்பு 8,880 கோடி டாலராக இருந்தது. இந்நிலையில் நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலைகள் 1.72 சதவீதம் சரிந்தன. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, அதானி முதலிடத்துக்கு முன்னேற வழியேற்படுத்தியது.

அதானி என்டர்பிரைஸஸ் பங்கு விலை 2.34% உயர்ந்தன. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல பங்கு விலை 4% அதிகரித்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி லாபம் ஈட்டியது. அதேநேரம் அதானி டிரான்ஸ்மிஷன் சந்தை மதிப்பு ரூ.2.13 லட்சம் கோடி சரிந்தது. அதேபோல அதானி பவர் சந்தை மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. இதேபோல அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலைகள் 1% சரிந்தன.

கவுதம் அதானியின் சொத்துமதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 5,500 கோடி டாலர் அதிகரித்துள்ளது. அதேநேரம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 1,430 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு உயர்வு, உலகின் மற்ற 10 முன்னணி கோடீஸ்வரர்களை விட அதிகமாகும். கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் சொத்து மதிப்பு 4,720 கோடி டாலரும் செர்கி பிரினின் சொத்து மதிப்பு 4,490 கோடி டாலரும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *