செய்திகள்

மீன் கடைகளை விரிவுபடுத்த பூட்டிய வீடுகளில் திருட்டு : 2 பேர் கைது

மதுரை,நவ.8–

மதுரையில் மீன் கடைகளை விரிவுபடுத்துவதற்காக பூட்டிய வீடுகளில் குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மீன்கடை உரிமையாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 336 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை நகரில் பூட்டிய வீடுகளை குறி வைத்து திருடும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தான். இதில் திருட்டு நடந்த வீடுகளில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் பதிவான நபர் தொடர் திருட்டில் ஈடுபடுவது தெரிந்தது. இந்நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த நபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் தோற்றத்தை ஒத்திருந்ததால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிவராஜன் (வயது 41) என்பதும் 60–க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் மதுரையில் தற்போது 5 இடங்களில் மீன் விற்பனைகள் கடைகளை சிவராஜன் நடத்தி வந்த நிலையில் தொழிலலை விரிவுபடுத்துவதற்காக வில்லாபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி (வயது 58) என்பவருடன் சேர்ந்து பூட்டிய வீடுகளை குறிவைத்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவராஜன், புல்லட் ரவி இருவரையும் கைது செய்து 7 வழக்குகளில் தொடர்புடைய 336 பவுன் நகைகள், இருசக்கர வாகனம், 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *