செய்திகள்

மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை

சென்னை, ஜன.10-

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இன்று நடைபெறுவதாக இருந்த மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிர்வாகம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது. பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் சூழலில் மின்வாரிய ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கியபிறகு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுக்க முடியாது. எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக இருந்தால் 6 வாரங்களுக்கு முன்பாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை’ என்று வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக (நேற்று) காலையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது சட்டவிரோதமானது. இவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அத்தியாவசியப் பணிகள் கடுமையாக பாதிக்கும் என்பதால் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், அதன் முடிவுகளை அறிந்துகொள்ளும் முன்பாக வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது. எனவே, இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *