சந்தடிகள் நிறைந்த நகர வீதியில் மாஸ் ஜூஸ் கார்னர் ரொம்பவே பிரபலம் .
சுவர் முழுவதும் ஓவியங்கள். அழகழகான நாற்காலிகள். அலங்கார விளக்குகள் என்று அந்த ஜூஸ் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக வைத்திருந்தார்கள்.
கடையின் இரண்டு பக்கமும் பழக் கூடைகள் தொங்கிக் கொண்டிருந்தன .வரவேற்பு வாசலில் வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இவைகள் எல்லாம் அந்த ஜூஸ் கார்னருக்குள் நுழைய ஏற்பாடு செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஒரு உத்தியாக இருந்தது .
அன்று மாலை 4:30 மணிக்கு மேல் முத்து நவாஸ் சரவணன் பிரகாஷ் மணி என்று நண்பர்கள் எல்லாம் அந்த ஜூஸ் கடைக்குச் சென்றார்கள்.
மின்விசிறிகள் இருந்தும் அதை ஓட விடாமல் வைத்திருந்தான் கடைக்காரன். அந்தக் கடை முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. இங்கே யாருமே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பாத்தா இருட்டுக்குள்ள ஒரு ஜோடி உக்காந்து இருக்கு அதுக்கு தான் இந்த கடையில இருட்டா வச்சிருக்கானுங்க போல. அப்பத்தான் வியாபாரம் நல்லா நடக்கும் என்று பிரகாஷ் சொல்ல நண்பர்கள் எல்லாம் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.
அப்போது கோபமான நவாஸ் கடைக்காரரைக் கூப்பிட்டு
ஃபேன் போடுங்க எதுக்கு; ஃபேன வச்சிருக்கீங்க? என்று கோபப்பட்டு சொன்னார் .
அதன் பிறகு கடையில் வேலை செய்யும் ஒரு பையன் ஓடிவந்து விளக்கையும் காற்றாடியும் போட்டான் .
அதுவரையில் இருளில் மூழ்கிக் கிடந்த அந்தக் கடை இப்போது வெளிச்சத்திற்கு வந்தது.
அப்போது நவாஸ் தன் எதிரில் இருக்கும் தண்ணீர் ஜக்கை எடுத்து உடனே அதை குடிக்காமல் அதன் மூடியை திறந்து பரிசோதனை செய்ய ஆரம்பித்தார் .
அவர் குறுகுறு என்று பார்ப்பதை கவனித்த முத்து
‘‘என்ன சார் அதில் என்ன இருக்குன்னு அப்படி பாக்குறீங்க?’’ என்று கேட்டபோது
இது உள்ள தூசி கிடக்கு வேண்டாம் என்று சாெல்ல
தூசியா தண்ணிக்குள்ள எப்படி? என்று சொன்ன
முத்து அந்த ஜக்கைக் குறுகுறுவென்று பார்த்தார்.
அப்போது அந்த தூசி நெளிந்து கொண்டிருந்தது.
இதுல புழு கெடக்கு என்று முத்து சொன்னபோது
என்ன சொல்றீங்க என்று பதறிப் போய் கேட்டார் நவாஸ் .
ஆமா சார் இங்க பாருங்க என்று அந்த ஜக்கை முத்து காட்ட
அதைப் பார்த்த நவாசுக்கு தூக்கி வாரிப் போட்டது .
‘‘ஆமா புழு தான் கெடக்கு’’ என்று சொல்ல
அந்தக் கடைக்கு வந்திருந்த நண்பர்கள் அத்தனை பேருக்கும் மூக்கின் மேல் கோபம் வந்தது.
உடனே முத்து அந்த கடைக்காரரை கூப்பிட்டார்.
யார் இந்த கடை ஓனர் வாங்க சாெல்ல
சற்று தாமதமாக வந்த கடை பையனிடம்
என்னது இது புழுவா கெடக்கு. கட மூடணுமா? சீல் வைக்கணுமா? என்று கொஞ்சம் கோபமாக முத்து கேட்க
இல்ல சார் நாங்க தண்ணியை கழுவி தான் வச்சோம். எப்படி வந்துச்சுன்னு தெரியல என்று சமாதானம் சொன்னான் அந்தக் கடைப் பையன் .
ஆனால் முதலாளி யாரும் அங்கே வரவில்லை.இது மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் அந்த பிரச்சனை நவாஸ் முத்து நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது .
அப்போது நண்பர்கள் ஆர்டர் செய்திருந்த பிளாக் டீயும் காபியும் அவர்கள் முன்னால் வந்தது
அப்போது நவாஸிடம் சொன்னான் முத்து.
இப்ப நாம அந்த கடைக்காரன திட்டினோம் .ஏன் தண்ணீரில் புழு இருக்குதுன்னு? அவன் அந்த திட்ட வாங்கிட்டு எதுவும் பேசாம போயிட்டான். ஒருவேளை நம்ம திட்டினதுக்கு கோவம் வந்து நம்ம குடிக்கிற இந்த டீய அந்த புழு தண்ணில பாேட்டிருந்தா என்ன செய்றது
என்று முத்து கேட்டபோது
நீங்க சொல்றது சரி முத்து. ஒரு வேள அப்படி பண்ணுனாலும் பண்ணி இருப்பானுங்க. எல்லாமே இங்க ஈகோ புடிச்ச பசங்க தானே இருக்கானுக. இருந்தாலும் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே அந்த பிளாக் டீயை உறிய ஆரம்பித்தார்கள்.
ஆனால் அவர்கள் இருவரும் மனதிலும் அந்த புழுவும் இருந்தது. டீயைக் குடித்துக் கொண்டே திட்டிய அந்த கடைப்பையனை லேசாக பார்த்தார்கள்.
அவன் இவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தது முத்துவுக்கும் நவாசுக்கும் அடி வயிற்றைக் கலக்கியது.