போஸ்டர் செய்தி

மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆய்வு

Spread the love

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை ரத்து

தடையை மீறி சுற்றிய 1252 பேர் மீது வழக்குப்பதிவு

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு ஏற்பாடு

 

 

சென்னை, மார்ச் 26–

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு அமுல் குறித்து இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் ஆய்வு நடத்தினார்.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறுவோர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தடையை மீறிய 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து அங்கேயே 500 ரூபாய் அபராதம் விதித்தார்கள்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பண்டங்கள், பால் கிடைக்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

முக்கிய சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்களில் யாரும் வந்தால் அவர்களை நிறுத்தி விசாரித்தார்கள். அவசர பணி நிமித்தமோ அல்லது மருத்துவமனைக்கோ செல்வது உறுதிப்பட்டால் அவர்களை மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர்.

சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால் ஜாலியாக சுற்றலாம் என்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவது தெரிய வந்தது. அப்படிப்பட்டவர்களை போலீசார் பிடித்து வழக்கு போட்டார்கள்.

1252 பேர் மீது வழக்கு

நேற்று ஒரே நாளில் மட்டும் தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வதந்தி பரப்பிய 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

சில இடங்களில் உடனடியாக 500 ரூபாய் அபராதம் போட்டார்கள். சில இடங்களில் இதுபோன்று சுற்றி திரிந்தவர்களுக்கு பாடம் புகட்ட சாலைகளில் தோப்பு கரணம் போட சொன்னார்கள்.

எந்தெந்த முறைகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 215 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கலெக்டர்களுடன் எடப்பாடி ஆய்வு

தமிழகம் முழுவதும் ‘கொரோனா’ வைரஸ் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார். மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் உடனுக்குடன் கேட்டறிந்து வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் முக கவசம் அணிந்திருந்தார்கள்.

2வது நாளாக வெறிச்சோடியது

இன்றும் 2வது நாளாக தமிழகம் வெறிச்சோடி காணப்பட்டது. அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் வீதிக்கு வந்து விளையாடாமல் வீட்டுக்குள்ளேயே கிடந்தார்கள்.

மருந்தகங்கள், காய்கறி கடைகள் திறந்திருந்தன. ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கறிகளை விற்று கொண்டிருந்தார்கள். மற்றபடி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பக்கத்தில் உறவினர் வீடுகள் இருந்தும் அங்கே செல்லாமல் அவரவர் வீட்டிலேயே அமர்ந்திருந்தார்கள். அரசின் உத்தரவை ஏற்று அனைவரும் மிக கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள்.

தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் முழு வீச்சில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லா இடத்திலும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னையில் 53 வழக்கு

சென்னை நகரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வருவோர்களை தடுக்க சென்னை மாநகர எல்லை பகுதிகளில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகரில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் முகாமிட்டு கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள். அவ்வப்போது மாவட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். அதிகாரிகளுடன் ஆய்வும் நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *