சிறுகதை

மாறியது நெஞ்சம் – எம்.பாலகிருஷ்ணன்

பரமசிவம் ஒரு கல்யாண புரோக்கர். இவர் ஏராளமான திருமணங்களை நடத்திவைத்து இருப்பவர். அந்தத் தெருப்பகுதியில் இவரை தெரியாதவர்களே இல்லை. அப்படி பிரபலமான திருமண புரோக்கர்.

பலர் இவரை நாடி நாள்தோறும் வரன் தேடி வந்து போவார்கள். ஜோதிடம் பார்க்க எப்படி கூட்டம் வருமோ, அதே போல் இவரைப் பார்க்க சிலர் வீட்டு வாசலில் குழுமியிருப்பார்கள். நல்ல ராசியான புரோக்கர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

அன்று காலை பத்து மணியளவில் இவர் வீட்டுக்கு தங்கள் பையனுக்கு பெண் பார்க்க பையனின் போட்டோ, ஜாதகத்துடன் நான்கு பேர் வந்தனர், பையனின் அப்பா, அம்மா மற்றும் உறவினரோடு அவர் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, பரமசிவம் ஐயா!” என்று குரல் கொடுத்தனர். பரமசிவம் வெளியே செல்வதற்கு தயாராயிருந்தவர், இவர்களின் குரல் கேட்டு வெளியே வந்தார்.

அவர்களைப் பார்த்ததும் வாங்கம்மா, வாங்கய்யா உள்ள வாங்க என்று அவர்களை அழைத்து திண்ணையில் உட்கார வைத்தார், பெண்ணுக்கா, பையனுக்காக வரன் பார்க்க! என்று கேட்க, எங்க வீட்டு பையனுக்கு பொண்ணு வேணும்; ஜாதகம் பார்க்க வந்தோம் ஐயா என்று கையிலிருந்த பையனின் போட்டோவையும் ஜாதகத்தையும் நீட்டினர்,

பரமசிவம் புரோக்கர் அவற்றை வாங்கி, பையனின் படிப்பு, வேலை, பெயர், இருக்கும் ஊர் போன்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டு, சரிங்க, நீங்க எந்த ஊர் பெண்ண பாக்கனும் உள்ளூரா? வெளியூர் பெண்ணா? என்று கேட்டார்.

எங்களுக்கு உள்ளூர் பெண்ணே போதும் என்றார் பையனின் தந்தை.

இந்தாங்க. இதுல உங்களுக்கு பிடிச்சப் பெண்ணப் பார்த்து சொல்லுங்க. நான் விபரம் சொல்றேன். இப்படி ஒவ்வொரு போட்டோவை பார்த்துக் கொண்டு இருந்தனர். பையன் வீட்டார் கேட்கும் கேள்விக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார் பரமசிவம். பத்து பெண் போட்டோவை பார்த்தும் அவர்களுக்கு திருப்தி இல்லாமலிருந்தது.

வேற பெண் போட்டோ இருந்தா கொடுங்கய்யா என்று கேட்டனர் அவர்கள்.

கடைசியாக ஒரு பெண் போட்டோவை காட்டி, இந்தாங்கம்மா இந்த போடடோவை பாருங்க; பிடிச்சிருந்தா சொல்லுங்க” என்று போட்டோவையும் ஜாதகத்தையும் காண்பித்தார் பரமசிவம்.

அவர் போட்டோவை காண்பித்ததும் பையன் வீட்டார் ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்து முகம் மலர்ந்து, ஐயா, இந்த பெண் நல்ல அழகா இலட்சணமா இருக்குங்க. இதை பேசுங்க என்றனர்.

பரமசிவம் புரோக்கர் அந்தப் பெண்ணின் பயோ டேட்டாவை பற்றி விரிவ விளக்கலானார்.

இந்தப் பொண்ணு, நல்ல பெண்ணுமா; நல்லா படிச்சிருக்கு. ஒரு பிரைவேட் கம்ப்யூட்டர் சென்டர்ல பகுதி நேரமாக வேலைக்கு போயிட்டு வருது. ஆனா இந்தப் பெண்ணுக்கு அம்மா-அப்பா இல்ல. சின்ன வயசில ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. சித்தி, சித்தப்பா பராமரிப்பில இருக்கு. சொந்த பொண்ணு மாதிரி வளர்த்திருக்காங்க, கல்யாண பொறுப்பு, மற்ற எல்லா விசேஷத்தையும் சித்தி-சித்தப்பா பாத்துக்குவாங்க. என்ன சம்பந்தமா? இதை பேசலாமா? என்றார்.

பரமசிவம் கூறி முடிந்ததும் பையனின் அம்மா-அப்பா, ஐயா, பெண்ண எங்களுக்கு பிடிச்சி இருக்கு. , ஆனா…. இதுக்கு அப்பா-அம்மா இல்லையின்னு சொல்றீங்க; அதனால… இந்தப் பெண்ணு வேண்டாங்கய்யா. அப்பா-அம்மாவோட இருக்குற பெண்ண பாத்து சொல்லுங்கய்யா என்றனர்.

இதைக்கேட்ட பரமசிவம் புரோக்கருக்கு சுள்ளென்று கோபம் வந்தவராய், ஏம்மா பெண்ணுக்கு சித்தி-சித்தப்பா இருக்காங்களே! அவங்களே எல்லாத்தையும் பார்த்துக்குவாங்கன்னு சொல்றேன். பெண்ணுக்கு அம்மா-அப்பா இருந்தா தான் கட்டுவீங்களா, பெண்ணுக்கு என்ன குறையக் கண்டுட்டீங்க! இவ்வளவு இலட்சணமான பெண்ணு கிடைக்குமா? என்று கோபம் கொந்தளிக்க பேசினார். இதை எதிர்பார்க்காத பையன் வீட்டார் ஐயா, நாங்க சொல்றோம்னு கோவிச்சிடாதீங்க!

நாளைக்கு எல்லா விசேத்திலயும் அம்மா-அப்பா இருந்தா தான் நல்லா இருக்கும். என்ன தான் சித்தி-சித்தப்பா இருந்தாலும் பெத்தவங்க மாதிரி வருமா? எவ்வளவு நாளைக்குத்தான் சித்தி-சித்தப்பா பாப்பாங்க. அதனால் இது எங்களுக்கு சரிபடலைங்கய்யா, வேற போட்டோ இருந்தா காண்பிங்க. இல்லைன்னா இன்னொரு நாளைக்கு வர்றோம்” என்று அவர்கள் கூறிவிட்டு, பரமசிவம் புரோக்கரின் பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று எழுந்து வெளியே சென்றனர். பரமசிவம் அதிர்ச்சி அடைந்தார்.

மறுநாள் இரவு. பரமசிவம் புரோக்கர் வெளியே சென்றுவிட்டு வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வீட்டினுள் சென்று நாற்காலியில் அமர்ந்து டைரியை எடுத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்தில் மனைவி நின்று கொண்டிருந்ததைக் கவனித்து, என்ன லீலா? உட்காரு என்றார். அவர் மனைவி லீலா அவர் அருகில் அமர்ந்து கொண்டு ஏங்க ஒரு முக்கியமான விஷயம், உங்ககிட்ட பேசனும்.

பேசு லீலா! என்று அனுமதி அளித்தார் பரமசிவம்.

ஊருக்கெல்லாம் எவ்வளவோ கல்யாணம் செஞ்சி வக்கிறீங்க., நம்ம மகனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் முடிச்சா. ஒரு கடமை முடிஞ்சிடும். அவனுக்கும் கல்யாணம் வயது வந்துவிட்டதே என்றாள்.

யாரு இல்லைன்னு சொன்னா. நானும் நம்ம சொந்தபந்தமெல்லாம் விசாரிச்சுட்டு தான் இருக்கேன். ஒன்னும் அமைய மாட்டேங்குது. இனிமே அந்நியத்துல தான் பார்க்கனும்.

நீங்க எங்கேயும் பாக்க வேணாங்க. நம்ம தூரத்து உறவுல ஒரு பொண்ணு இருக்கு. அதை பேசி முடிச்சிடலாமா? என்று மனைவி லீலா கூறியதும்

பரமசிவம் ஆர்வமாக, அது யாரு நமம் தூர சொந்தம், யாரு வீட்டு பொண்ணு, விபரமா சொல்லும்மா” என்று கேட்டார்.

நம்ம மானாமதுரை மகாலிங்கம் பொண்ணுங்க” என்று அவள் பேசிமுடிக்கும் முன்,

மகாலிங்கம் பொண்ணா, அவன் இறந்துட்டானே. அவன் சம்சாரமும் இறந்திடுச்சே, அவங்க பொண்ணுனு சொல்ற”.

ஆமாம்ங்க அந்தப் பொண்ணோட அப்பா-அம்மா இறந்துட்டாங்க. சித்தி-சித்தப்பா தான் அந்த பொண்ண பாத்துக்குறாங்க. போன வாரம் தான் என்கிட்ட அவங்க பேசினாங்க என்று கூறியதும் புரோக்கருக்கு கோபம் பொங்கியது.

ஏம்மா லீலா, நீ யோசிச்சுதான் பேசுறியா? அந்த பெண்ணுக்கு அம்மா-அப்பா இல்ல, சித்தி-சித்தப்பா தான் இருக்காங்க. அந்த பெண்ண நம்ம மகனுக்கு எப்படி கல்யாணம் முடிக்கறது?

மனைவி லீலாவும் அவரின் கோபத்தை பொருட்படுத்தாமல், ஏங்க முடியாது? நேத்து நம்ம வீட்டுக்கு பெண் வரன் கேட்டு, ஜாதகம் கொடுக்க வந்தவங்ககிட்ட நீங்க தானே சொன்னீங்க. பெண்ணுக்கு அம்மா-அப்பா இல்லாட்டி என்ன, சித்தி-சித்தப்பா இருக்காங்கன்னு அந்தப் பெண்ண முடிக்கச்சொல்லி நீங்க கட்டாயப்படுத்தினீங்களே…

அது, என் தொழிலுக்காக அப்படி பேசுனேன். அதுவேற, இது வேற” என்று மனைவிக்கு பதில் கொடுத்தார்.

ஏங்க ஒரு பெண்ணோட வாழ்க்கையை தொழிலா பாக்காதீங்க. வாழ்க்கையா பாருங்க, பெண்ணோட அம்மா-அப்பா இருக்குறப்ப அவங்க பெண்ண நினைச்சி, நாம சாகப் போறோமே, நம்ம பொண்ணு நிலைமை என்னாகும்? அவள கரை சேக்காம சாகப்போறமே. அவளோட வாழ்க்கை என்னாகுமோன்னு எவ்வளவு ஏக்கத்தோட இறந்து இருப்பாங்க. அதை நினைச்சிப் பாருங்க”.

நேத்து நீங்க பெண்ணோட ஜாதகம் பாக்க வந்தவங்ககிட்ட சித்தி-சித்தப்பா வளர்க்குற பெண்ண கல்யாணம் முடிச்சா என்னன்னு கேட்டதையே நானும் கேட்குறேன். நல்ல குடும்பமா, நல்ல குணமான பெண்ணா, அத மட்டும் பாருங்க. ஊருக்கு தான் உபதேசம். ஆனா அது உங்ககிட்ட இல்லையா? என்று லீலா உருக்கமாக பேசவும்

பரமசிவம் புரோக்கர் அமைதியாக மனைவி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.

இதை மனைவி லீலா அவரின் முகத்தைப் பார்த்து, ஏங்க நான் ஏதாவது தவறா பேசிட்டேனா? உங்களுக்கு சம்மதமா? என்று கேட்க

அவரும் சரி என்று ஆமோதித்தார். மாறியது அவர் நெஞ்சம்.

லீலா மகிழ்ந்து போனாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *