செய்திகள்

மஹோதய தீர்த்தவாரி உற்சவம்; கருடசேவையில் ஸ்ரீதலசயன பெருமாள்

காஞ்சீபுரம்,பிப்.5-–

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மஹோதய தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கருடசேவையில் அருள்பாலித்த ஸ்ரீதலசயன பெருமாளை வணங்கிவிட்டு மாமல்லபுரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள 108 வைணவ ஸ்தலங்களில் 63வது ஸ்தலமாக உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருமாள் கடற்கரையில் எழுந்தருளும் மஹோற்சவ புனித நீராடல் விழா நடந்தது.

இந்த ஆண்டு புனித நீராடல் விழா திருவோணம் நட்சத்திரத்தில் வந்ததால் இந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கடலில் நீராடினால் நோய்கள் தீர்ந்து, நன்மைகள் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அங்கு கருட சேவையில் அருள்பாலித்த ஸ்ரீதலசயன பெருமாள், ஆதிவராக பெருமாள், பூதத்தாழ்வாரை வணங்கினர். பிறகு சக்கரத்தாழ்வாருக்கு கடல் நீரால் அபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர்.

இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுக்கு இந்த ஆண்டில் நன்மைகள் பிறக்க வேண்டி கடலில் குளித்து சாமி தரிசனம் செய்தனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸபெக்டர் ரவிக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், கோயில் செயல் அலுவலர்கள் வெங்கடேசன், குமரன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.சங்கர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *