போஸ்டர் செய்தி

மழைநீரை தேக்கி மக்களுக்கு தங்குதடையில்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை

Spread the love

சென்னை, ஜூன் 26–

மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை தேக்கி, மக்களுக்கு தங்குதடையில்லாமல் தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பொதுப்பணித் துறை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

2018–19ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை என்பது முதன்மையான துறை. இந்தத் துறைக்கு புரட்சித் தலைவி அம்மா இருக்கின்றபொழுதே, அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பருவ காலங்களில் பொழிகின்ற மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருப்பதற்காக தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள், குளங்கள் போன்றவற்றை தூர்வாரி, குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக, முழுக்க, முழுக்க விவசாயிகளை அப்பணிகளில் உட்படுத்தி, அவர்களை ஒரு குழுவாக உருவாக்கி அவர்களிடத்தில் இப்பணிகளை வழங்கி அவர்களாகவே இந்தப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக பரீட்சார்த்த முறையிலே 2017–18ம்ஆண்டு 1511 ஏரிகள் இத்திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1311 ஏரிகள் இன்றைக்கு தூர்வாரப்பட்டுள்ளது. எஞ்சிய ஏரிகளையும் தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள் அவர்களாகவே முன்வந்து அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்களை தூர்வார முன்வருகின்றபொழுது, அதற்குத் தகுந்த தெளிவான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம். இப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க அரசு தயாராக இருக்கின்றது. அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற்று அப்பணிகளை மேற்கொள்ளலாம்.

இன்றைய தினம், 2018–19 மற்றும் முந்தைய ஆண்டு துவங்கிய அணைக்கட்டுகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை கட்டுமானம் செய்தல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் 2017-18ல் 29 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1511 பணிகளில் 1311 பணிகள் முடிக்கப்பட்டதையும், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்கவும், 2018-19ல் 31 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1829 பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

உலக வங்கி நிதிவுதவியுடன் மேற்கொள்ளும் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலமாக 22 மாவட்டங்களில் உள்ள 1325 ஏரிகள் மற்றும் 107 அனைக்கட்டுகள் புனரமைக்க பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டு, மேலும், நடப்பாண்டில் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் 906 ஏரிகள் மற்றும் 183 அணைக்கட்டுகளின் புனரமைப்புப் பணிக்கு மதிப்பீடு தயாரிக்கப்படுவதை துரிதப்படுத்தி விரைந்து ஒப்புதல் வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கதவணை கட்டும் பணி

அதேபோல, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனூர்–குமாரமங்கலம் கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய தலை மதகுகளுடன் கூடிய கதவணை அம்மா இருந்த காலத்திலே அறிவிக்கப்பட்டது. அதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு காலதாமதமான காரணத்தினாலே அப்பணியை நிறைவேற்ற சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அம்மாவின் அரசு அதை விரைந்து செயல்படுத்துவதற்காக, ரூபாய் 428 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அந்தப் பணி தொடங்கப்பட்டு விட்டது. அதேபோல, முக்கொம்பிலும் கதவணை கட்டும் பணிக்கு டெண்டர் போடப்பட்டு ரூபாய் 387 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு விட்டது.

சட்டமன்றத்திலே பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை நடைபெற்ற காலக்கட்டத்தில், பருவ காலங்களில் பொழியும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக, ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் நதிகள், ஓடைகளின் இடையே பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிப்பிற்கிணங்க, அத்திட்டத்திற்காக 56 பணிகள் தொடங்கப்பட்டு, அதில் 17 பணிகள் நிறைவு பெற்றுள்ளது, 39 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அங்கிருக்கின்ற வண்டல் மண்ணை, விவசாயிகள், நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டரும் அள்ளிக்கொள்ளலாம் என அரசே அவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மண்பாண்டம் செய்பவர்களாக இருந்தால், 10 முதல் 20 டிராக்டர் அளவிற்கு, வட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று அள்ளிக்கொள்ளலாம்.

அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை அம்மா இருக்கின்ற காலத்திலே, விவசாயப் பெருங்குடி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக, ரூபாய் 1652 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி இன்றைக்கு அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தேர்வாய் கண்டிகையில் நீர்தேக்கம்

சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்மா இருந்த காலத்திலே வீராணம் ஏரியிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சாதனை படைத்தார். சென்னை மாநகர மக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் புதிதாக ஒரு நீர்தேக்கம் கட்டுவதற்கு 95 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன, எஞ்சிய 5 சதவிகிதப் பணிகள் இரண்டு மாதத்தில் முடிவுற்று, வருகின்ற மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை தேக்கி, மக்களுக்கு தங்குதடையில்லாமல் தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தின் கீழ், பெண்ணையாறு (சாத்தனூர் அணை)–செய்யாறு இணைப்பும் திட்டம், பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு)–பாலாறு இணைப்புத் திட்டம், காவேரி (மேட்டூர் அணை) – சரபங்கா–திருமணிமுத்தாறு–அய்யாறு இணைப்புத் திட்டம், காவேரி–அக்னியாறு–தெற்கு வெள்ளாறு–மணிமுத்தாறு – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை, விரைந்து முடிக்க அம்மாவினுடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து பொதுப்பணித் துறையில் பணிகள் விரைவாக நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடுப்பணைகள் கட்டப்படும்

நீர் மேலாண்மைக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்களை நியமித்து, எங்கெல்லாம் பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றதோ, அந்தப் பகுதிகளையெல்லாம் ஆராய்ந்து, ஆய்வு செய்து, அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீரை மக்களுக்கு சீராக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டம் இந்த அரசின் லட்சியத் திட்டம். இதனை நிறைவேற்றும்பொழுது, டெல்டா பாசன விவசாயிகளுக்கு முழுமையான நீர் கிடைக்க, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். அண்மையில், பிரதமரை நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபொழுது, அவர்களிடத்தில் கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறினேன். அதேபோல, நீர்வளத் துறை அமைச்சரையும் சந்தித்து இக்கருத்தை வலியுறுத்தி சொல்லியிருக்கின்றேன்.

கங்கை நதியை புனிதமாக்குகின்றபொழுது, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள். அதேபோல, காவிரி நதியில் கலக்கின்ற அசுத்த நீரையும் மாசுபடாத காவிரி நதி நீராக உருவாக்க “நடந்தாய் வாழி காவேரி” என்று பெயர் சூட்டப்பட்டு, அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றித்தர பிரதமரிடம் தெரிவித்திருக்கின்றேன். அதை வலியுறுத்தியதன் காரணமாக பிரதமர் குடியரசுத் தலைவர் உரையிலே காவிரியையும் சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்ற நல்ல செய்தியை சொல்லியிருக்கின்றார்.

மழைநீா் சேகரிப்புத் திட்டம்

அம்மா இருக்கின்றபொழுது மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு உன்னதமான திட்டமாக எடுத்து, மக்களுக்கு வலியுறுத்திச் சொல்லி, அந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அம்மாவினுடைய அரசும் இத்திட்டத்தை தொடர்ந்து கடைபிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்குவிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துத் திட்டப் பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *