செய்திகள்

மழைக்காலங்களில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

அம்மாவின் அரசு மீண்டும் அமையும்

மழைக்காலங்களில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை

ஜெயங்கொண்டம் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி

அரியலூர், மார்ச் 20–

கைத்தறி நெசவாளர்கள் மழைக்காலங்களில் பணி செய்ய முடியாததால், அவர்களுக்கு அக்காலங்களில் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட கூறினார்.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ஐயா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர். அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆசி பெற்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. கட்சியின் வெற்றி வேட்பாளார் கே. பாலுவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் திறமையானவர், வழக்கறிஞர், உங்களது எண்ணங்களை அரசின் கவனத்திற்கு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான வேட்பாளர். ஜெயங்கொண்டம் தொகுதி ஒரு பின் தங்கிய பகுதி. இந்த பகுதி உள்ள மக்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் கே. பாலு வெற்றி பெற வேண்டும்.

நல்ல எண்ணம் இருந்தால் வாய்ப்பு

இந்தப்பகுதி விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த பகுதி. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை இரு கண்கள் போல பாதுகாத்து வருகிறது அம்மாவிம் அரசு. வறட்சி நிவாரணம் கொடுத்தோம். பயிர் காப்பீட்டுத் தொகையாக ரூ.9,300 கோடி பெற்றுத்தந்த அரசு அம்மாவின் அரசு. அதே போல விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த அரியலூர் பகுதியில் அதிக அளவில் மக்காச்சோளப் பயிர் விளைந்து வருகிறது. கடந்த வருடம் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரணம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. ஏனென்றால் நானும் ஒரு விவசாயி. இன்றைக்கு வேண்டுமானால் நான் உங்கள் முன் முதலமைச்சராக பேசிக் கொண்டிருக்கலாம். தோட்டத்துக்கு சென்றால் சட்டையை கழட்டி விட்டு, நானும் உங்களைப் போல வேலை செய்பவன் தான்.

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் ஸ்டாலின் தன்னை ஒரு ஹீரோ போல நினைத்துக் கொண்டு லைட்டெல்லாம் போட்டு நடந்து வருகிறார். நான் அப்படியெல்லாம் இல்லை. நான் ஒரு சாதாரண விவசாயி. நான் முதலமைச்சராக வருவது ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது நான் இருந்தேன். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் தானே வாய்ப்பு கிடைக்கும். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள் நல்லது செய்யுங்கள் நல்லது நடக்கும் என்று. உங்களுடைய எண்ணம் கெட்ட எண்ணம். அதனால் உங்களால் முதலமைச்சராக வரவே முடியாது. கருணாநிதி இரண்டாண்டு காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் அப்போது கூட ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி கொடுத்தார்களே தவிர தலைவர் பதவி கொடுக்கவில்லை. அவரது தந்தையே அவரை நம்பாதபோது, மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

கல்வித் துறைக்கு அதிக நிதி

ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம். கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போல வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் எங்கள் கூட்டணியின் லட்சியம். ஒரே எண்ணம் உடையவர்களாக நமது கூட்டணித் தலைவர்கள் இருப்பதால் தான் நமது லட்சியம் சிறக்கிறது. ஜெயங்கொண்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்திருக்கிறோம். இப்படி தமிழ்நாடு முழுவதும் அம்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என்று பல்வேறு கல்லூரிகளை தந்திருக்கிறார். அதனால் இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்திருக்கிறது.

அம்மா 2011ம் ஆண்டு பதவியேற்கும் போது 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அம்மா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.

புதிய தொடக்கப் பள்ளிகளை துவங்கி இருக்கிறோம். பள்ளிகளை தரம் உயர்த்தி இருக்கிறோம். இப்படி அதிகமான பள்ளிகளை துவக்கியதால் தமிழ்நாட்டில் கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு பிற துறைகளை காட்டிலும் கல்வித் துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியிலே மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியாது. ஆனால் அம்மா 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படியே செய்து காட்டினார். தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக புதிய புதிய தொழில்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒருசொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்பதற்காக பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் தூர் வாரப்படும் என்று அறிவித்து, குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் பங்களிப்போடு தூர் வாரப்பட்டது. இதுவரை பொதுப்பணித் துறை மூலம் 6000 ஏரிகள் 1300 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டது.

விலையில்லா நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் விலையில்லாமல் 25 கோழி குஞ்சுகளை கொடுத்தோம். அதேபோல வீட்டு காய்கறி தோட்டம் வைக்க விலையில்லாமல் காய்கறி விதைகளை கொடுத்தோம். உங்கள் வீட்டில் எஞ்சிய இருக்கின்ற இடத்தில் காய்கறிகளை பயிரிட்டு வளர்த்தால் நமது வீட்டு உபயோகத்திற்கு தேவையான காய்கறி கிடைக்கும். நான் சேலத்திலும் சென்னையில் உள்ள வீட்டிலும் காய்கறிகளை பயிரிட்டு இருக்கின்றேன். இதை எல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் தலைவாசலில் நமக்கு நாமே திட்டத்திற்கு வருகை தந்த போது நாலடிக்கு கான்கிரீட் ரோடு போட்டு தோட்டத்தை பார்த்தார். அப்படிப்பட்ட தலைவர் தான் ஸ்டாலின். ஆனால் விவசாயிகளுக்கு என்னென்ன வழிகளில் வருமானம் கிடைக்கும் என்பதை திட்டமிட்டு அதனை செயல்படுத்துகின்ற அரசு அம்மாவின் அரசு.

அம்மாவின் அரசு மீண்டும் அமையும்

உங்கள் ஆதரவோடு அம்மாவின் அரசு மீண்டும் அமையும். அப்போது அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த எல்லா குடும்பங்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடுகளைத் தேடி வரும். கேபிள் டிவி இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும். முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய 1 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும். விசைத்தறிக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.

கைத்தறி நெசவாளர்கள் மழைக்காலங்களில் பணி செய்ய முடியாது. அவர்களுக்கு அக்காலங்களில் 5000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு பஞ்சு ஆலைக் கழகம் மூலம் நூல் விலை கட்டுப்படுத்தப்படும். கைத்தறி ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரிகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். நெசவாளர்களுக்கு கட்டுப்படி ஆகும் விலையில் அரசின் மூலம் கொள்முதல் செய்து வழங்கிட ஏற்பாடு செய்யப்படும். கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடரும். ஏற்கனவே நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. வீடில்லாத அனைத்து நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். அனைத்து தரப்பு ஏழை எளிய மக்களுக்கும் அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு ஏற்கனவே கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளில் வசிக்க இயலாத அளவிற்கு பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

நம்முடைய வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலுவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *