சிறுகதை

மறுபக்கம் – ஆவடி ரமேஷ் குமார்

ஹால் சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்த கணவன் நடேசனுக்கு காபி கொடுக்க போனாள் நிர்மலா.

” என்ன நிர்மல், வேலைக்காரி லட்சுமி ரெண்டு மூனு நாள் வேலைக்கு வரலை போல இருக்கு.உடம்பு கிடம்பு சரியில்லையா..?” கேட்டார் நடேசன்.

” அவள் வேலையை விட்டு நிற்க நீங்க காரணமாயிருந்திட்டு இப்ப ரொம்ப லேட்டா கேட்கிறீங்களே…” என்று சற்று கோபமாக சொன்னாள் நிர்மலா.

அதிர்ந்த நடேசன்,” என்னது, அவள் வேலையை விட்டு நின்னுட்டாளா? அதுக்கு நான் தான் காரணமா…என்ன உளர்றே?”

” இந்த விசயத்தை நான் அன்னிக்கே சொல்லியிருப்பேன்.ஆனா நான் அந்தன்னைக்கு உங்க மேல அவ்வளவு ஆத்திரமா இருந்தேன். நம்ம பொண்ணு வேற அப்ப ஊர்லயிருந்து வந்திருந்தா.அதான் அன்னிக்கு இதப்பத்தி பேசல.இதுக்கெல்லாம் உங்க பாலாப்போன செல்போன் தான் காரணம்!”

” என்னடி உளர்றே? அவள் வேலையை விட்டு நிற்கிறதுக்கும் என் செல்போனுக்கும் என்னடி சம்பந்தம்?”

மூன்று நாட்களாக பொறுமையாய் இருந்த நிர்மலா இப்போது ஆவேசமானாள்.

” போன புதன் கிழமை காலையில உங்களோட மேல்மாடி ரூமுக்கு லட்சுமி கூட்டிப்பெருக்க வந்த போது நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க?”

” நான் அங்க இருக்கும் போது அவள் வந்தாளா? எனக்கு தெரியாதே..!”

” ஆங்..அப்படி அவள் வந்தது கூட தெரியாத அளவுக்கு உங்க செல்லுல இருந்த போட்டோக்களை ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தீங்க.அது தான் வம்பாப்போச்சு?”

” குழப்பாதே நிர்மலா…கொஞ்சம் புரியும்படியா சொல்லு!”

” போன வாரம் நடந்த நம்ம பையனோட பிறந்த நாளுக்கு நீங்க மாங்கு மாங்குனு உங்க செல்லுல நூத்துக்கணக்கான போட்டோக்களை எடுத்தீங்களே…ஞாபகம் இருக்கா?”

” ம்.இருக்கு”

” அதில் எதுக்கு லட்சுமியை அளவுக்கு மீறி போட்டோ எடுத்தீங்க?”

” இதில் என்ன தப்பு இருக்கு? ரெண்டு வருஷமா அவள் இந்த வீட்ல ஒரு வேலைக்காரியா இருக்கா…நம்ம குடும்பத்துல ஒரு உறுப்பினர் மாதிரினு நெனச்சு கொஞ்சம் அதிகமாக எடுத்திருந்தேன்.”

” எடுத்தீங்க சரி.அந்த போட்டோக்களை ஐ மீன் அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்களை போன புதன் கிழமை உங்க மேல் மாடி ரூம்ல நீங்க கட்டில்ல படுத்திட்டு ஜூம் பண்ணி ஜூம் பண்ணி ஏன் பார்த்தீங்க?”

” அது வந்து..”

“ரூமை கூட்டிப்பெருக்க வந்த லட்சுமி உங்களுக்கு பின்னாடி நின்னு பார்த்திருக்கிறாள்.நீங்க ஜூம் பண்ணி பார்க்கிறதை பார்த்தவள் என்கிட்ட ஓடி வந்து நடந்ததை சொன்னாள்.அது தெரியுமா உங்களுக்கு?”

” போட்டோவை ஜூம் பண்ணி பார்க்கிறதெல்லாம் ஒரு தப்பா?”

” தப்பு இல்லை தான்.ஆனால் பாரக்கிற போட்டோ யாரோடங்கிறது முக்கியமாக கவனிக்க வேண்டியிருக்கிறதே…லட்சுமி கல்யாணமானவள்; ரெண்டு குழந்தைகளுக்கு தாய்! அவ போட்டோவை முகம்,வாய், உதடு,கழுத்து,மார்,இடுப்புனு கால் வரைக்கும் ஜூம் பண்ணி ஜூம் பண்ணி நீங்க பார்த்து ரசிச்சதை பார்த்துட்டு லட்சுமி அதிரந்து போய் ‘வேலையை விட்டு நின்னுக்கிறேன்ம்மா’னு சொல்லிட்டு ஓடியே போய்ட்டாள்.”

இப்போது ‘ செய்தி’யின் விஸ்வரூபத்தை உணர்ந்த நடேசன் எதுவும் பேச முடியாமல் இஞ்சி தின்ற’ எதுவோ’ போல் விழிக்க ஆரம்பித்தார்.

நிர்மலா தொடர்ந்தாள்.

” அப்புறம் நான், நீங்க மத்தியானம் சாப்பிட்டுட்டு தூங்கும் நேரமா பார்த்து உங்க செல்போனை எடுத்து அதிலிருந்த ஆயிரக்கணக்கான போட்டோக்களை ஆராய்ந்தேன். என்ன கொடுமைங்க இது! பொண்டாட்டி நான் குத்துக்கல்லாட்டம் நல்லா இருக்கும் போது…கேவலம் ஒரு கல்யாணமான நம்ம வீட்டு வேலைக்காரியை,அதுவும் மகாலட்சுமி மாதிரி இருக்கிற லட்சுமியை…அவ கூட்டும் போது, துணி தோய்க்கும் போது,பாத்திரம் கழுவும் போது,வீட்டுத்தரையை துடைக்கும் போது, தோய்த்த துணிகளை கொடில காயப்போடும் போதுனு அவளுக்கு தெரியாம நூத்துக்கணக்கான போட்டோக்களை எடுத்து வச்சிருக்கீங்க. கடைசில என்னோட போட்டோக்கள் எத்தனை தான் உங்க செல்லுல இருக்குனு சந்தேகம் வந்து எண்ணிப்பார்த்தேன்.இருபது தான் இருக்கு!”

நிர்மலா பேசப்பேச…உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து தன் மறுபக்கத்தை காட்டிவிட்டதை உணர்ந்து அவமானத்தால் பதில் விவாதம் செய்ய முடியாமல் வெட்கி தலை குனிந்தார் நடேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *