செய்திகள்

மத்திய பிரதேசத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்:  முதலமைச்சர் சிவராஜ் சிங் தகவல்

போபால், ஜன 16-

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தார் நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பொதுமக்கள் முன் ஆற்றிய உரையில், அறிவுக்கும், ஆங்கிலத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதனால், மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்பிக்க முடிவு செய்துள்ளேன். இதனால், ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஆங்கிலம் தெரியாதபோதும், திறமைசாலிகளாக உள்ளவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் நிபுணர்களாக வரமுடியும் என பேசியுள்ளார். ஜப்பான், ரஷியா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாய்மொழியில் மருத்துவ கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக எம்.பி.பி.எஸ். பாடங்களை இந்தியில் கற்பிக்கும் முயற்சியில் மத்திய பிரதேச அரசு ஈடுபட்டது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் இருந்து இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தொடங்க மத்திய பிரதேச அரசு புதிய முடிவை எடுத்தது.

இதன்படி முதலில், அனாடமி (உடலியல்), பிசியாலஜி (உடற்கூறியல்) மற்றும் பயோகெமிஸ்ட்ரி (உயிர் வேதியியல்) ஆகிய 3 படிப்புகள் இந்தியில் பயிற்றுவிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளன. எனினும், நிபுணர்கள் மத்தியில் எதிர்ப்பும், வரவேற்பும் கலந்து வந்தன. இந்நிலையில், போபால் நகரில் உள்ள லால் பரேட் மைதானத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான புத்தக வெளியீட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்த புத்தக தயாரிப்பில் 97 நிபுணர்கள் வரை ஈடுபட்டு, 232 நாட்கள் முயன்று பாடபுத்தகங்களை உருவாக்கி உள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு பாடங்களை மொழிபெயர்ப்பு செய்து உள்ளனர். இதுபற்றி சவுகான் பேசும்போது, இந்தியாவில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு இந்தியில் கற்பிப்பது இதுவே முதல் முறை என பெருமிதமுடன் குறிப்பிட்டார். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணம் இதனால் மாறும். இந்தியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணம் சாத்தியப்படுவதற்கு இது ஒரு படி எனவும் கூறினார். ஒருவருடைய தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் எனவும் சவுகான் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *