செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி, மார்ச்.31-

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதனால், அவர்கள் பெறும் அகவிலைப்படி 34 சதவீதமாக உயருகிறது. கடந்த ஜனவரி 1ந் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.

7-வது சம்பள கமிஷன் தெரிவித்த சிபாரிசுகள் அடிப்படையிலான வழிமுறைப்படி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 544 கோடியே 50 லட்சம் செலவாகும்.

இதனால், 47 லட்சத்து 68 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சத்து 62 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. ரூ.3 ஆயிரத்து 887 கோடி செலவில் இவை வாங்கப்படும். 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்துக்கும் பயன்படுத்தப்படும்.

இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்து வானிலையிலும் செயல்படக்கூடியவை. மீட்பு, தேடுதல் பணிகளிலும், கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலும், எதிரி நாடுகளின் சாதனங்களை அழிப்பதிலும் பயன்படுத்தப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.6 ஆயிரத்து 62 கோடி திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இதில், உலக வங்கி கடன் மூலம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும், மத்திய அரசால் மீதி தொகையும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தால் 6 கோடியே 30 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடையும்.

Leave a Reply

Your email address will not be published.