செய்திகள் போஸ்டர் செய்தி

மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல்கள்

* தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி. ஜெயக்குமார்

* தென்மண்டல புதிய ஐ.ஜி.யாக முருகன் நியமனம்

சாத்தான்குளம் சம்பவம்

மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல்கள்

உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

 

சென்னை, ஜூன் 30–

தென்மண்டல புதிய ஐ.ஜி.யாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி புதிய எஸ்.பி. யாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், தென்மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுவதால் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள எஸ். முருகன் தென் மண்டல புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றப்பட்டு, புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் புதிய சப்–இன்ஸ்பெக்டராக டி.மணிமாறன் (கோவில்பட்டி கிழக்கு), எஸ்.முத்துமாரி (புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்), சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக டி.சுயம்புலிங்கம் (தட்டார்மடம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 7 தலைமைக் காவலர்கள், ஒரு பெண் தலைமைக்காவலர், 16 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்களை புதிதாக நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் இன்ஸ்பெக்டரையும் சேர்த்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு மொத்தம் 30 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் மீது வழக்கு பதிவு

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

காவல் அதிகாரிகளை எதுவும் செய்யமுடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று பேரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட்டை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

நேரில் ஆஜர்

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக காவலர் மகாராஜன், ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி, மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி கூறியதாக காவலர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

மூவருக்கும் தனித்தனி வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த, 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒரு நொடி கூட வீணாகக் கூடாது

“இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது.

சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும்.

போலீசார் மீது வழக்கு பதிவு

முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

அதனடிப்படையில் “ஜெயராஜ், பெனிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்தது.

இந்நிலையில், மதியம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நெல்லை சிபிசிஐடி அதிகாரி இன்றே விசாரணை தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடிய விடிய அடித்தனர்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-– விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர். வழக்கு ஆவணங்களை தர மறுத்தனர்.

‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடியை லத்தியால் அடித்துள்ளனர். அவர்களை அடிப்பதற்கு பயன்படுத்திய லத்திகளை கேட்டபோது போலீசார் கொடுக்க மறுத்தனர். காவலர் மகாராஜனிடம் லத்தியை கேட்டபோது அவர் தர மறுத்ததுடன், முன்னுக்குப் பின் முரணாகவும் ஒருமையிலும் பேசினார். மற்றொரு காவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மீண்டும் மீண்டும் கேட்டபிறகே காவலர்கள் லத்தியை கொடுத்தார்கள்.

பெண் காவலரை மிரட்டினர்

இதுதவிர சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் போலீசார் நடந்துகொண்டனர். பெண் காவலர் ரேவதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது அச்சத்துடன் இருந்தார். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தபிறகே அவர் சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டார். லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.

ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது.

விசாரணை நடைபெற்றபோது கூடுதல் எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அந்த இடத்தில் இருந்தபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் விசாரணையை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *