செய்திகள்

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, நவ.25-

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூயிருப்பதாவது:-

புத்தகங்கள் மீது கருணாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான் 2010ம் ஆண்டில் அண்ணாவின் 102வது பிறந்தநாளன்று சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவின் அதிநவீன மிகப்பெரிய நூலகம் என போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும் இத்தகைய அரிய வாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் கலைஞர் நினைவு நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று கடந்த 3.6.2021 அன்று கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி வழங்குமாறு பொது நூலக இயக்குனர் கோரினார்.

முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பொது நூலக இயக்குனரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் புது நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட முடிவு செய்துள்ளது.

பொதுப் பணித்துறையின் 2021–22ம் ஆண்டுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் கட்டுவதற்கு ரூ.99 கோடியும், நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.114 கோடி செலவினத் தொகையாக நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *