சென்னை, ஜூலை 19
அரிய வகை திருக்கை மீன்கள் இரண்டு மண்டபம் மீன்பிடி தளத்தில் தரை இறங்குவதை சத்யபாமா கடல் உயிரியலாளர்கள் கண்டனர். இது இழுவலை மின்பிடி செயல்பாட்டின் மூலம் தற்செயலாக சிக்கிக் கொண்டிருக்கலாம்.
மன்னார் வளைகுடா கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் சுமார் 40 முதல் 50 மீட்டர் ஆழத்தில் பிடிபட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இந்தத் திருக்கை மீனின் நீளம் 2.45 மீட்டர், 1.97 மீட்டர் அகலமாகும். இந்த 2 மீனும் ச50 முதல் 70 கிலோ எடை கொண்டவையாக இருக்கும். பல ஆயிரம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மீன் வலையில் பிடிபட்டதும் அதன் வாலில் உள்ள விஷத்தன்மை கொண்ட முள் முதலில் நீக்கப்படும்.
இந்த மீனின் முதுகெலும்பு பக்கதில் உள்ள புள்ளிகளை ஒப்பிடும்போது புதிதாக கண்டறியப்பட்ட ‘ஹிமாண்டுறா டுடுள்’ என்ற பெயர் கொண்டவையாக இருக்கலாம். மேலும் விரிவான உருவவியல் பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட டிஎன்எ தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து இதனை உறுதி செய்ய முடியும் என்று ராமேஸ்வரம் சத்யபாமா கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இளம் விஞ்ஞானி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய வகை மீனானது இதுவரை தான்சானியா, லக்கடீவ் கடல் பகுதி, மலேசியா, பாலி, தெற்கு சீனா மற்றும் சுலு கடல் பகுதிகளில் கிடைத்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த அரிய வகை மீன் இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் (கொல்கத்தா) மீன்வள விஞ்ஞானி சுப்ரேந்து சேகர் மிஷ்லா உதவியுடன் அடையாளம் காணப்பட்டது. மேலும் இதுபோன்ற அரிய வகை மீன்களின் பாதுகாப்பு நிலை இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் இது மற்ற திருக்கை மீன்களை போல சில குட்டிகளை மட்டுமே பெற்றெடுக்கும் நீண்ட கர்ப்ப காலம் கொண்ட மீன் இனமாகும் என்று விஞ்ஞானி சுப்ரேந்து சேகர் மிஷ்ரா தெரிவித்தார்.