சிறுகதை

மடிப்பிச்சை … ராஜா செல்லமுத்து

பிரதான கோயிலின் வாசலில் பக்தர்கள் கூடி நின்றார்கள். எப்போதும் போல பிச்சைக்காரர்கள் பக்தர்கள் கோயிலுக்குள் விடாமல் அடைத்து நின்று கொண்டு,

‘‘அம்மா பிச்சை போடுங்க…..

ஐயா பிச்சை போடுங்க ; ஐயா தர்மம் பண்ணுங்க…. ஐயா’’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இது பக்தர்களுக்கு ஒருபக்கம் எரிச்சலாக இருந்தாலும் அவர்களை திட்ட முடியாத நிலைமையில் இருந்தார்கள்.

பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் கையேந்துவது, கௌரவ குறைச்சலாக நினைக்கவில்லை; அவர்கள் கையேந்திக் கொண்டு இருந்தார்கள்

இந்தப் பிச்சைக்காரர்களுக்கு நடுவில் ஒரு பெண் தன் முந்தானையை எடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பார்த்து நீட்டிக் கொண்டிருந்தாள்.

ஐயா மடிப்பிச்சை போடுங்க; மடிப்பிச்சை போடுங்க என்று அவள் பக்தர்களை பார்த்து கேட்டுக்கொண்டிருந்தார் .

பிச்சைக்கும் மடிப்பிச்சைக்கும் என்ன வித்தியாசம்? என்பதை அங்கு இருக்கும் பக்தர்கள் தான் உணர வேண்டும்

தட்டில் போடும் பிச்சைக்கும் ஒரு பெண்ணின் சேலை முந்தானையில் போடும் பிச்சைக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறியாத மகேஷ்

தன் அம்மாவிடம் கேட்டான்:

அம்மா எல்லாரும் பிச்சை கேட்கிறார்கள்;

இந்த பெண் மட்டும் ஏன்? மடிப்பிச்சை அப்படின்னு கேட்கிறா? அப்படின்னா என்ன அர்த்தம்? தட்டுல போடுற பிச்சை ; மடிப்பிச்சை ; இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா? என்று ஒரு கேள்வி கேட்டான் மகேஷ்.

மகனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத அம்மா

பிச்சை, மடிப்பிச்சை விளக்கத்தை சொன்னாள் .

அம்மாவின் பதிலுக்காக காத்திருந்த மகேஷ்

அம்மா என்ன சொல்லப் போகிறாளோ ?என்று எதிர்பார்த்து நின்றான்.

அங்கிருந்த அத்தனை பேர்களுக்கும் பிச்சை போட்ட அம்மா

அவர்கள் விட்டு தள்ளி நின்ற அந்த பெண்மணிக்கும் மடிப்பிச்சை பணத்தைப் போட்டு திரும்பினார்.

அந்த இடத்தில் அதற்கான விளக்கத்தை சொல்லக்கூடாது என்பதை அறிந்த அம்மா

கொஞ்சம் தள்ளி வந்து மடிபிச்சை என்றால் என்ன?என்று விளக்க ஆரம்பித்தார்.

மகேஷ் அங்கு இருக்கிற பிச்சைக்காரன் எல்லாம் தன்னுடைய தேவைக்கு ஏதோ ஒரு வகையில உணவு பொருளை வாங்குவதற்கு அவங்க பிச்சை எடுக்கிறார்கள்.. அவங்க தட்டில் வாங்கலாம்… இல்ல கையில வாங்கலாம்.

ஆனா மடிபிச்சை அப்படிங்கறது அந்த முந்தானை சேலை விரிச்சி இருக்கிற அந்த பெண்ணோட குழந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கிறா நோய்வாய்ப்பட்ட அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என் பிள்ளை நோய்வாய்ப்பட்டு இருக்கா அதைக் காப்பாற்றுவதற்கு என் குழந்தையை காப்பாற்றுவதற்கு என்கிட்ட பணம் இல்ல .நீங்க போடுற இந்த மடிபிச்சை என் குழந்தையைக் காப்பாற்றும் அப்படிங்

கறதுக்காகத் தான். அந்தத் தாய் தனக்காக இல்லாமல் தன் குடும்பத்துக்காக தெய்வ சந்நிதியில் நின்று தெய்வத்திற்கு கேட்கிறது மாதிரி , மடிய விரிச்சு கேட்கிறா அதுக்கு பேருதான் மடிப்பிச்சை என்று மகேஷ்டம் சொன்னாள்.

அப்படின்னா அந்த அம்மா அவங்க குழந்தையைக் காப்பாற்றுவதற்கு தான், அங்க மடிப்பிச்சை கேட்டு நிற்கிறாங்களா அம்மா என்று மகேஷ் கேட்டான்.

அம்மா தலையாட்டினாள். தன் அம்மாவின் கையிலிருந்த பர்சை வெடுக்கென பிடுங்கிய மகேஷ்

வேகமாக மடிப்பிச்சை கேட்டு நின்ற அந்த அம்மாவை நோக்கி ஓடினான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அம்மா

எதற்காக மகேஷ் தன் பர்சைப் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான் என்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்

அம்மாவின் பர்சைத் திறந்த மகேஷ் அத்தனை பணத்தையும் முந்திச் சேலையை விரித்து நின்று கொண்டிருந்த அந்த அம்மாவின் சேலைத் தலைப்பில் கொட்டி,

உங்க குழந்தை நல்லா இருக்கணும். நல்லா இருக்கும். நீங்க வேற யாரையும் பணம் கேட்க வேண்டாம். குழந்தைய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க என்று சொல்லி மொத்த பணத்தையும் அந்த தாயின் மடியில் போட்டுவிட்டு ஓடினான்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மடிபிச்சை கேட்டுக் கொண்டிருந்தவள்.. கோவிலை பார்த்தார்.

சாமியே வரம் தந்ததாக நினைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

சுற்றியிருந்த பிச்சைக்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம்

என்ன இது ?நாம காலையிலிருந்து உட்கார்ந்து இருக்கிறோம்… யாரும் நம்ம தட்டில பணம் போடல. மடிப்பிச்சை போட்டு கேட்ட அந்த பொண்ணுக்கு பணம் போட்டாங்களே. நாமளும் நாளைக்கு இருந்து மடிப்பிச்சை கேட்க வேண்டியதுதான் என்று நினைத்த பெண்கள்

மறுநாள் காலையில் ஆளுக்கு ஒரு பக்கம் முந்தியை விரித்து நின்று கொண்டு இருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *