பெங்களூரு, மார்ச் 10–
காங்கிரஸ் ஆட்சியில் முறையான மின்சாரம் கிடைக்காததே, மக்கள்தொகை இந்தளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தார்.
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது.
மத்திய அமைச்சரின் கண்டுபிடிப்பு
இதுகுறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, காங்கிரஸ் இலவசமாக மின்சாரம் தருவதாக சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது. காங்கிரஸ் ஆட்சியில் முறையான மின்சாரம் கிடைக்காததே, மக்கள்தொகை இந்தளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் எப்போது முறையாக மின்சாரம் தந்திருக்கிறது? மோடியின் பாஜக ஆட்சி மலர்ந்த பின் தான் ஒழுங்காக மின்சாரம் கிடைத்து வருகிறது. குக்கிராமங்களில் கூட மின்சாரம் கிடைக்க மோடி வழி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.