செய்திகள்

மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்

திருவள்ளூர், மார்ச் 15–

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2019 முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தியும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை 1950 என்ற எண்ணை சந்தேகங்கள் மற்றும் புகார்கள் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலப்போட்டியினை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது. இப்போட்டியில் 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 14 அணிகளில் மொத்தம் 226 மகளிர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் வாக்களிப்பதின் அவசியத்தை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினர், கலெக்டர் முன்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக வாக்காளர் விழிப்பணர்வு குறும்படம் ஔிபரப்பப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நாடாளுமன்ற தேர்தல் 2019 முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட பறக்கும் கண்காணிப்பு குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுக்களும், ஔிப்பதிவு கண்காணிப்பு குழுக்களும் ஆகியவை விழிப்புடன் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்கு பதிவினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் 71 சதவிகிதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது. இதை 100 சதவிகிதம் அடைய செய்ய அனைத்து வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் சி – விஜில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை எழுத்து மற்றும் புகைப்படம் மூலமாக தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வை.ஜெயகுமார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகம்மது ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *