செய்திகள்

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம்: மாநிலத் திட்டக் குழுவுடன் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

சென்னை, நவ.15–

தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் தலைமையில் “மகளிருக்கான கட்டணமில்லா நகரப் பேருந்து பயணத்திட்டம்” குறித்து மாநிலத் திட்டக் குழு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மகளிருக்கான கட்டணமில்லா நகரப் பேருந்து பயணத்திட்டம் குறித்த முதற்கட்ட ஆய்வு சென்னை மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சரிடம் கடந்த ஜூன் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டம் மீதான இரண்டாம் கட்ட ஆய்வு நாகை மாவட்ட விவசாய பகுதிகள், மதுரை மாவட்ட சுற்றுலா பகுதிகள், திருப்பூர் மாவட்ட தொழிற் பகுதிகள் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு, பெண் பயணிகளின் வயது, சமூகப்பிரிவு, கல்வித் தகுதி, வருவாய், மற்றும் சராசரி சேமிப்பு போன்ற விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ள பெண்கள் பணிப்பங்களிப்பு, சேமிப்பு, பயணத் தேவைகளுக்கு குடும்ப உறுப்பினர்களை அதிகம் சாராதிருத்தல் போன்ற முக்கிய சமூகப் பொருளாதார வெளிப்பாடுகள் விவரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாநிலத் திட்டக் குழு கூடுதல் முழுநேர உறுப்பினர் எம். விஜயபாஸ்கர், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் செயலர் த.சு. ராஜ்சேகர், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர் டி.என். வெங்கடேஷ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ. அன்பு ஆபிரகாம், போக்குவரத்துத் துறை மற்றும் மாநிலத் திட்டக் குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *