சிறுகதை

போதும் பொண்ணு – ராஜா செல்லமுத்து

போதும் பொண்ணு என்ற பெயரை சொன்னாலே போதும் பொண்ணுக்கு பொசுக்கென்று கோபம் வரும்.

கல்லூரி வகுப்பறையில் அவர் பெயரைச் சொன்னதும் கல்லூரியில் இருப்பவர்கள் எல்லாம் அந்த வகுப்பில் இருப்பவர்கள் என்று சிரிப்பார்கள். அதற்காகவே வருகைப் பதிவேடு எப்போது எடுத்தாலும் போதும் பொண்ணுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

சில நேரங்களில் வருகைப் பதிவேடு எடுத்துக் கொண்டிருக்கும்போதே ஆசிரியரே சிரித்து விடுவார்.

அப்படி ஒருநாள் வருகைப் பதிவேடு எடுத்துக் கொண்டிருக்கும்போது,

‘போதும் பொண்ணு அப்படின்னு எதுக்காக உனக்கு பேர் வச்சாங்க?’ என்று போதும் பெண்ணிடம் கேட்ட போது

அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்தாள் ‘போதும் பொண்ணு, நீ சொல்ல வேண்டாம். வித்தியாசமான பேரா இருக்கே அதுதான் கேட்டேன்’ என்று ஆசிரியர் கேட்ட போது அவளுக்கு கண்களிரண்டும் நிறைந்தன.

‘சாரி …..சாரி…. உன் பேர கேட்டது தப்பு தான். என்ன மன்னிச்சிடு இனிமேல் கேட்க மாட்டேன்’ என்று ஆசிரியர் சொன்னாலும்

மாணவர்கள் பெயரைக் கேட்டு சிரித்தார்கள்.

இதனால் போதும் பொண்ணுக்கு தினமும் தன் பெயரை யார் கூப்பிட்டாலும் ஒருவிதமான வெட்கமும் பதட்டமும் ஏற்படும்.

ஒருநாள் அப்பாவிடம் இந்த பெயருக்காகவே சண்டை போட்டாள்.

‘யப்பா ஊர் உலகத்தில என்னென்ன பேரெல்லாம் வைக்கிறாங்க. எனக்கு போய் நீ போதும் பொண்ணுன்னு பேர் வச்சிருக்கியே? எவ்வளவு பெரிய தப்பு. போதும் பொண்ணு… போதும் பொண்ணுன்னு ஒவ்வொருத்தரும் கூப்பிடும்போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? உசுர புடிங்கிட்டு வருதுப்பா’ என்று அப்பாவிடம் சண்டை போட்டார் போதும்பொண்ணு.

‘இல்லடா உனக்கு அந்தப் பேர் வச்சதுக்கு அப்புறம் தான் நம்ம வீட்டுல பொண்ணுங்க பிறக்கிறது நின்னு இருக்கு. உனக்கு முன்னாடி 5 பொம்பள பிள்ளைங்க. உனக்கே தெரியும் அப்பா அவங்கள எல்லாம் கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? போதும் பொண்ணு அப்படின்னு பேர் வச்சதுனால தான் பொண்ணு பிறப்பது நின்னு இருக்கு. அதுக்கப்புறம் தான் உன் தம்பி. நான் போதும் பொண்ணுன்னு உனக்கு பேர் வைக்கலன்னா அதுக்கப்புறமும் பொண்ணுதான் பிறந்திருக்கும். ஏதோ கடவுள் இட்ட கட்டளை. உனக்கு நான் போதும்பொண்ணுன்னு பேர் வச்சத அடுத்து ஆம்பள புள்ள பிறந்துச்சு. இதுல என்ன தப்பு இருக்கு? நம்ம சொந்தக்காரர் கூட ஒருத்தர் மண்ணாங்கட்டின்னு பேரு வச்சி இருக்காரு. அதுக்காக ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து இறந்து போச்சு. பேர் வச்சு அழகு பார்க்க முடியல. அப்படின்னு அவங்க பிறந்த குழந்தையை மண்ணுல போட்டு புரட்டி எடுத்து அந்தக் குழந்தைக்கு மண்ணாங்கட்டின்னு பேர் வைக்கவும் தான் அது உசுரு புடிச்சு நிக்குது. இந்த அறிவியல் உலகத்துல அது எது சரி எது தவறு என்று நான் சொல்லல. ஆனா மனசு சொல்றது தான் இங்கே இயங்குது. அதனாலதான் நான் போதும் பொண்ணு உனக்கு பேர் வெச்சேன். ஆனா வச்ச பேரு நெலச்சி நிக்குது. இத யாரு கிண்டல் பண்ணாலும் கேலி பண்ணினாலும் அதைப் பற்றி நீ கவலைப்படாதே. உனக்கு போதும் பொண்ணும்தான் பேரு தைரியமா சொல்லு. இந்தக் காரணத்துக்காகத்தான் என் பேரு போதும் பொண்ணுங்க வச்சிருக்காங்கன்னு சாெல்லு. ஒரு ஒரு பொம்பள பிள்ளைய பெத்து கல்யாணம் முடிக்க முடியாமல் கஷ்டப் படுற இந்த உலகத்துல 5 பெண் பிள்ளைகளை எப்படி நான் கட்டிக் கொடுப்பேன்? அதனாலதான் அந்தப் பேரு போதும் பொண்ணு’ என்று போதும் பெண்ணின் அப்பா சொன்னபோது,

அவளுக்கு தன் அப்பாவின் கவலையை விட தனக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள்? என்பது தான் கவலையாக இருந்தது.

ஆனாலும் தன் மனதுக்குள் ஒன்று இறுக்கமாக நினைத்துக் கொண்டாள்.

போதும் பொண்ணு என்று சொன்னதனால் தான் நமக்கு அடுத்து பிறந்து ஆணாக இருக்கிறது. இல்லை என்றால் அதுவும் பெண்ணாகத்தான் பிறந்திருக்கும்.

சரி பரவாயில்லை. நம் பெயரை விட பெற்றவர்களின் வாழ்க்கை தான் முக்கியம். அவர்கள் சந்தோஷம் முக்கியம்.

யார் என்ன பேசினால் என்ன? கிண்டல் செய்தால் என்ன?

என் பெயர் போதும் பெண்தான் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டே …

மறுநாள் காலை கம்பீரமாக கல்லூரிக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள் போதும் பொண்ணு.

Leave a Reply

Your email address will not be published.