சிறுகதை

பொறுப்பு! – இரா.இரவிக்குமார்

“பெரியவரே, நேத்து வேலை செய்யும்போது திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திட்டீங்களே… இன்னிக்கும் வேலைக்கு வந்திருக்கீங்களே! ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?”

“தம்பி, பையனை விபத்தில பறி கொடுத்தப் பிறகு தினமும் நான் வாங்குற கூலிக்காசு குடும்பத்தைக் காப்பாத்த ரொம்பத் தேவைப்படுது. மருமக, ரெண்டு பேரப்பிள்ளைகளக் காப்பாத்தி ஆகணும்.”

பெரியவரின் நிலைமை எனக்குப் புரிந்தது. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் கட்டடம் பழசாகிவிட்டதால் மராமத்து வேலைகளை மேற்கொண்டிருந்தோம். இங்கு நடக்கும் பழுது பார்க்கும் வேலைகளை இந்தக் குடியிருப்பின் சொந்தக்காரர்களில் ஒருவன் என்ற வகையில் கூலியாட்கள், மேஸ்திரி போன்றவர்களுடன் சேர்த்து அவ்வப்போது கண்காணித்து வந்தேன் நான். இங்கு வேலை செய்வதற்காக மேஸ்திரி அழைத்து வந்த கூலியாட்களில் ஒருவர்தான் இந்தப் பெரியவர்.

“நேத்து மயக்கம் போட்டதுக்கு அடிக்கிற கத்திரி வெயில்தான் காரணமா?”

“இல்ல தம்பி, அதுக்கெல்லாம் உடம்பு பழகிட்டுது. நேத்து அமாவாசைங்கறதால காலமான அப்பா, அம்மாவுக்காக ஒரு பொழுது விரதம் காலையில சாப்பிடாம இருந்தேன். வயசாயிட்டதால… அத உடம்பு தாங்கல!”

பெரியவர் சொன்னது என்னைச் சாட்டையால் அடித்தது போலிருந்தது! இறந்த பெற்றோர்களுக்காக இந்த வயதிலும் விரதம் இருக்கும் இவர் எங்கே… நான் எங்கே?

இன்றுவரை பொறுப்புடன் தன் பராமரிப்பில் வைத்திருந்த அம்மாவை, அண்ணன் தனது வெளிநாட்டுப் பணியிட மாற்றத்தால் என்னிடம் அனுப்பவா என்று கேட்டிருந்தான். நான் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடு என்று அவனிடம் கூறலாம் என்றிருந்தேன் . இப்போதுவரை அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்த நான் அம்மாவை என்னிடம் அழைத்து வைத்துக்கொள்ள முடிவு செய்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *