நாடும் நடப்பும்

பொறியியல் கலந்தாய்வு பெருவிழா


ஆர். முத்துக்குமார்


உலகமே வியந்து பார்க்கும் ஒரு நிகழ்வு தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை முறையாகும். அதன் முதல் கட்டமாக மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிப்பு முடிந்து விட்டது.

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26–-ம் தேதி தொடங்கிய பதிவு தற்போது நிறைவு பெற்றது.

கொரோனா பாதிப்பு காரணமாக 12–-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் பொறியியல் படிப்புகளுக்குக் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, பதிவு தொடங்கிய முதல் நாளில் 25 ஆயிரத்து 874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கடைசி நாளான நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில், 1,38,533 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றியுள்ளனர்.பொறியியல் சேர்க்கையைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி நடப்பாண்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இருந்தபோதிலும் கடந்த ஆண்டு 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர்.

ஆனால் தற்போது அதிக மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றியுள்ளதால் (1.38 லட்சம்) கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு அதிக மாணவர்கள் தகுதிபெற வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 28-–ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்றும் தரவரிசை பட்டியல் செப். 4-ம் தேதியும் வெளியிடப்படும்.

கொரோனா பாதிப்பு நேரத்திலும் சென்ற ஆண்டு முறையாகவே நடந்தது. பெற்ற மார்க் அடிப்படையில் தேதி வாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவழைத்து சமூக இடைவெளியையும் சீராகவே கடைப்பிடித்து சென்ற ஆண்டு நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த அந்தக் கட்டத்தில் விரிவான ஏற்பாடுகள் சிறப்பாகவே செய்யப்பட்டும் இருந்ததை தமிழகம் அறியும்.

இம்முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எந்த தவறும் நடந்து விடாதபடியும் குழப்பம் ஏதுமின்றியும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கலந்தாய்வு நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்து இருப்பார்கள்.

மெல்ல சகஜ நிலைக்கு மாறி வரும் தமிழகத்தில் இப்படி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு ரெயில், பஸ் பயணம் அவசியமாகுவதால் அவர்களின் பாதுகாப்புக்கு விசேஷ கவனமும் அவசியமாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *