செய்திகள் போஸ்டர் செய்தி

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Spread the love

சென்னை, ஜூலை 9–

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு பற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் நிலையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் அதில் என்னென்ன பிரச்சினைகள் எழக்கூடும் என்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, உ.பலராமன், பாரதீய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா வகுத்துதந்த வழிமுறையின்படி தமிழக அரசு தொடர்ந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் கட்டிக் காத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16 ஆகியவற்றிற்கு உரிய திருத்தங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி 12.1.2019 அன்று அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது.

வழிகாட்டி நெறிமுறை

இதனைத் தொடர்ந்து மத்திய சமூகநீதி அமைச்சகம், இந்த இட ஒதுக்கீட்டினை அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருவரின் வருடாந்திர குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளதன் அடிப்படையிலும், அவருடைய குடும்பத்தின் சொத்துக்களின் அடிப்படையிலும், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

அம்மா வழிகாட்டுதலின்படி, தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறை பாதிக்கப்படாமல், இந்த இட ஒதுக்கீட்டினை இந்தக் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு இந்திய மருத்துவக் குழுமம் அனைத்து மாநில அரசுகளிடமிருந்து கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 3500 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 15 விழுக்காடு இடங்கள், அதாவது 525 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்ட பின்பு, எஞ்சியுள்ள 85 விழுக்காடு இடங்கள், அதாவது, 2975 இடங்களில், தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான, இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசு விண்ணப்பித்தால், கூடுதலாக 1000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை பெற வாய்ப்புள்ளது. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 150 இடங்கள் போக தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு 850 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

எனவே, மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3,825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபின், தற்போது நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில், 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும்.

பொதுப்பிரிவுக்கு 10% இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உருவாக்கி, இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விரிவான விளக்கங்களை முதற்கண் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் எடுத்துரைப்பார். அதனைத் தொடர்ந்து இப்பொருள் குறித்து கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களை எடுத்துரைக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 10 சதவீத இடஒதுக்கீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் ஆதரவும், தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எஞ்சிய 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி

கூட்டம் முடிந்ததும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் நல்ல பல கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், சமூக நீதியை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதாவின் கொள்கையின்படி உரிய நல்ல முடிவை அரசு எடுக்கும்.

ஜெயலலிதாவை பொறுத்தவரை திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியாக 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற செய்து ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார். அந்த நிலையில் சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், ஜெயலலிதாவின் சமூகநீதியை காப்பாற்றுவதற்காகவும், அவரின் கொள்கை முடிவின்படியும் தமிழக அரசின் முடிவு இருக்க வேண்டும் என்பதின் அடிப்படையில் தான் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

அந்த அடிப்படையில் மீண்டும் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *