செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.64 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, மார்ச் 5–-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5 ஆயிரத்து 500 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பை இல்லா பகுதிகள் என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 15 மண்டலங்களில் 18 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறிய வகை குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

66 கிலோ மீட்டர் நீளம் உடைய 18 சாலைகளில், 196 பஸ் நிறுத்தங்கள் குப்பை இல்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பை இல்லாமல் பராமரிக்க 310 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 230 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 61 வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. இதேபோல, சாலைகளில் குப்பை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.64 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, குப்பை இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்ட 18 சாலைகளை பொதுமக்கள் சுத்தமாக வைத்திட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *