சிறுகதை

பேய் – ராஜா செல்லமுத்து

சுயம்பு, மோகன், கரிகாலன், குமார் நான்கு நண்பர்களும் விடுமுறைக்காக கொடைக்கானல் செல்லத் திட்டம் தீட்டினார்கள். வெந்து கொண்டிருக்கும் இந்த வெயில் வேளையில் அவர்களுக்கு குளிர்ச்சியான இடத்திற்கு சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. அதனால் நான்கு பேரும் கொடைக்கானல் போய் ஒரு வாரம் ஜாலியாக இருந்து விட்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்.

குமார் டிரெயின்ல போலாமா? பஸ்ல போலாமா? என்று கேட்க,

சுயம்பு ,கொடைரோடு வரைக்கும் டிரெயின்ல போயிட்டு அதுக்கப்புறம் நம்ம கார்ல போகலாம் என்று சொன்னான்.

அதுவும் சரிதான் என்று நண்பர்கள் முடிவு செய்தார்கள் .ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு அன்று இரவு ரயிலில் பயணமானார்கள்.

அதிகாலை கொடைரோட்டில் இருந்து கார் புக் செய்து கொடைக்கானல் போய்ச் சேர்த்தார்கள்.

ரோட்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் வரையில் ‘ S ’ வளைவுகளும் அபாயகரமான பாலங்களும் கொண்டை ஊசி வளைவுகளும் குறுக்கிட்டன.அவற்றைக் கடந்து செல்லும்போது அவர்களுக்கு பயம் அடிவயிற்றை கிள்ளியது.

ஒரு நாள் வர்றதுக்கே நமக்கு இவ்வளவு பயமா இருக்கு. எப்படி தினந்தோறும் இந்த ரோடு வழியா போறாங்க என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

ஒருவழியாக கொடைக்கானல் வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு தங்க விடுதி கிடைக்கவில்லை.

ஒரு ஹோட்டலில் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து காலை உணவு அருந்திவிட்டு சில இடங்களை சுற்றிப் பார்த்தார்கள்.

அதற்குள் இரண்டு வழிகாட்டிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு விடுதி இருப்பதாகச் சொல்லி கூப்பிட்டு போனார்கள்.

அப்போது போகும்போது அவர்கள் இரவு மணி பத்தைக் கடந்து இருந்தது.

வரவேற்பறையில் அந்த வழிகாட்டி ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு விடுதிக்கு நான்கு பேரையும் கூட்டிச்சென்றான்.

அந்த விடுதி பார்ப்பதற்கு மிகவும் பழமையான விடுதியாயிருந்தது.

இது கிடைத்தாலே போதும் என்று அவர்களுக்கு அப்போது தோன்றியது .

அந்த வழிகாட்டி நான்கு பேரையும் வரவேற்பறையில் அமர வைத்துவிட்டு, எந்த அறை காலியாக இருக்கிறது? என்று வரவேற்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

இரண்டு அறைகள் காலி ஆவதற்கு இன்னும் அரை மணி நேரம்

இருக்கிறது என்று அவன் சொல்ல நான்கு பேர்களும் ஏதாவது பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது சுயம்புவை யாரோ தோளில் தட்டுவது போல் இருந்தது. சுயம்பு திரும்பிப்பார்த்தான். ஒரு பெரியவர் சிம்புவிடம் சிகரெட், கேட்டார். சுயம்பு சிகரெட் கொடுத்தான். தீப்பெட்டியும் கேட்டார் தீப்பெட்டியும் கொடுத்தான். வாங்கி சிகரெட் பற்ற வைத்து விட்டு போய்விட்டார்.

அதற்குள் அந்த அரை மணி நேரம் கடந்து விட்டது. அறை எண் 340,341 என்று இரண்டு அறைகள் கிடைத்தன.

நான்கு பேர்களும் இரண்டு அறைகளில் தங்கினார்கள்.

கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியில் உடம்பு ரொம்ப அசதியாக இருக்க படுத்தவுடன் தூங்கிப் போனார்கள்.

மறுநாள் காலை எழுந்து கொடைக்கானலின் அழகை அள்ளிப் பருக வேண்டும் என்று அதிகாலையிலேயே கிளம்பினார்கள். நான்கு பேருடைய அறையை விட்டு வெளியேறி வரவேற்பறைக்கு வந்தார்கள். நல்ல ஹோட்டல் ; நல்ல சாப்பாடு; நல்ல டிபன் எங்கு கிடைக்கும் என்று விசாரித்துவிட்டு சாவியைக் கொடுத்துவிட்டு நால்வரும் வெளியே வந்தார்கள்.

அப்போது சுயம்புக்கு சட்டென்று ஒரு நினைவு வந்தது.

தன்னிடம் இரவு சிகரெட் தீப்பெட்டி கேட்ட நபர் இவரா? என்று குழம்பினான் சுயம்பு . எஸ் அவரேதான் என்று தீர்மானமாக முடிவு செய்தான்.

ஆனால், அவர் அங்கு உயிரோடு இல்லை .வரவேற்பறையில் இருந்த சுவரில் புகைப்படமாக இருந்தார். அதில் மாலை போட்டு இருந்தது . அதிர்ந்துபோன சுயம்பு அப்படியே உறைந்து நின்றான்.

அவன் விழிபிதுங்கி நிற்பதை பார்த்த அந்த வரவேற்பாளர்.

என்ன சார்? ஷாக்காகி நிக்கிறீங்க? என்று கேட்க சுயம்பு சொல்ல முடியாமல் திணறினான்.

அந்த வரவேற்பாளர் வாய் திறந்தான்.

என்ன சார். எங்க அப்பா உங்ககிட்ட ராத்திரி வந்து சிகரெட், தீப்பெட்டி கேட்டாரா? என்று சொல்ல அவனுக்கு தூக்கி வாரி போட்டது.

என்ன சார் இவ்வளவு கரெக்டா சொல்றீங்க? என்றான் சுயம்பு.

ஆமா சார், எங்க அப்பா இறக்கல. இங்கதான் இருக்கார். இங்க வர்ற ஆள் கிட்ட தீப்பெட்டி சிகரெட் கேட்டதா சொல்லுவாங்க . உங்க விஷயத்துல அது நடந்துருக்கு. ஒன்னும் பயப்படாதீங்க . எங்க அப்பா உங்கள ஒன்னும் செய்ய மாட்டார் . தெய்வமா தான் இங்க வீட்டில் இருக்கிறார் என்று அந்த வரவேற்பாளர் சொன்னபோது,

இதைக்கேட்ட நால்வருக்கும் கை கால் நடுங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *