சிறுகதை

பெறாத பிள்ளை | ராஜா செல்லமுத்து

இரண்டு மூன்று நாட்களாக சோறு தண்ணியில்லாமல் சாப்பிடாமலே கிடந்தது வளர்ப்பு நாய் . இது பக் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி. அது சாப்பிடாமல் இருந்தது மலருக்கு என்னவோ போலானது.

‘‘போதுமணி.. ஏன்..? இந்த நாய்க்குட்டி இப்பிடி சாப்பிடாம கெடக்குன்னு பாரு..’’ என்று உடனிருக்கும் தோழி போதுமணியிடம் கேட்டாள்.

‘‘அதான்.. அது மேல உண்ணிப்பூச்சி இருக்குல்ல.. அதனால தான் சாப்பிடமாட்டேங்கிது போல..’’ என்றாள் போதுமணி.

‘‘ம்ம்.. இருக்கும் அப்பிடித்தான் இருக்கும். நீ.. என்ன பண்ற போதுமணி.. இந்த பக்க கூட்டிட்டு போயி டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்திரு.. எனக்கு உண்ணின்னாலே ரொம்ப அலர்ஜி..’’ என்று மலர் ஒதுங்கிக் கொண்டாள்.

‘‘எனக்கு மட்டும் உண்ணின்னா.. இனிக்குமா..? எனக்கும் உங்கள மாதிரி உண்ணின்னாலே ஆகாது..’’ என்று போதுமணி சொன்னாள்.

‘‘ஏய்.. ரெண்டு பேரும் இப்பிடி போட்டி போட்டுப் பேசியே..! இந்த பக்க கொன்னுபுடுவோம் போல.. நீ.. இன்னைக்கு கண்டிப்பா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போற சரியா..?’’ என்றாள் மலர் .

‘‘ம்ம்.. இப்பவே நீங்க உண்ணி இருக்கனுன்னு பக்குகிட்ட ரெண்டு மூனு நாளா.. கிட்டயே வரல.. அது பாருங்க உங்க மூஞ்சியவே எப்பிடி பாத்திட்டு இருக்குன்னு.. போங்க போயி.. என்ன வேணும்னு பக்குகிட்ட கேளுங்க..’’ என்று போதுமணி சொன்னாள்.

‘‘ஐயோ.. எனக்கு தான் உண்ணின்னு பேரக்கேட்டாலே.. பிடிக்காதே. பெறகு.. எப்பிடி? இது பக்கத்தில போவேன் நீயே.. என்னன்னு கேளு..’’ என்று மலரும் மறுபடியும் ஒதுங்கிக்கொள்ள வீட்டின் வாசலில் ஆதரவற்று நின்று கொண்டிருந்த பக் பொக்.. பொக்கென தன் உருண்டைக் கண்களை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தது. அதன் ஒரு விழிகளில் நீர் திரண்டதை மலர் பார்க்காமல் இல்லை.

‘‘என்னடா.. ஏன்..? அழுகுற..? அழாதே.. உனக்கு தான் உண்ணி இருக்குல.. உண்ணி எனக்கு பிடிக்காதுன்னு ஒனக்கு தெரியும்ல.. பெறகு எப்பிடி உன்கிட்ட வருவேன் உண்ணியெல்லாம் போகட்டும் அப்பெறமா உன்கிட்ட வாரேன்..’’ என்ற மலர் பக் கைவிட்டு எட்டியே நின்றாள். அதன் அடிவயிறு பசிமூச்சில் உள்ளே வெளியே என்று மேலே போய் கீழே இறங்க அதன் முகம் பசியால் வாடி வதங்கிக் கிடந்தது.

‘‘ஏய் சாப்பிடமாட்டேன்னு.. ஏன் அடம்பிடிக்கிற..? சாப்பிடு.. போதுமணி.. பக்குக்கு சோறு கொண்டு வந்து வையி..’’ என்று அன்புக் கட்டளையிட்டாள் மலர்.

‘‘இந்தா வாரேன்..’’ என்ற போதுமணி ஒரு பீங்கான் கோப்பையில் பக்கிற்கு பிடித்த சிக்கன் கறிக்குழம்புடன் கோப்பை நியை சோற்றைக்கொண்டு வந்து வைத்தாள்.

‘‘ம்ஹூகும்..’’ சிக்கன் நிறைந்த கோப்பையை ஒரு பார்வை பார்த்த பக் அதன் அருகே தன் முகத்தைக் கூட கொண்டு போகவில்லை.

‘‘இந்த நாய்க்குட்டிக்கு எவ்வளவு திமிர் பாருங்க.. இவ்வளவு சுவையா.. சிக்கன் குழம்பு வச்சிருக்கேன்.. மோந்து கூட பாக்க மாட்டேங்குது.. இதோட மணமே என்னோட மூக்கத்தொலைக்குது எனக்கே.. இந்த சிக்கன் குழம்பு சோற சாப்பிடணும் போல இருக்கு.. இது மோந்து கூட பாக்க மாட்டேங்குது பாருங்க..’’ என்றாள் போதுமணி.

‘‘அட விடுங்க.. இது பட்டினியா கெடந்தே சாகட்டும்..’’ என்று பக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள்.

‘‘அடியேய் மெல்ல.. இத டாக்டர் கிட்ட கூட்டி போயி காட்டிட்டு வா..’’ என்றாள் மலர் .

‘சரிக்கா.. இன்னைக்கு கூட்டிட்டு போய்ட்டு வாரேன்..’’ என்ற போதுமணி அன்றே பக்கை கூட்டிட்டுப்போய் டாக்டரிடம் காட்டிட்டு வந்தாள்.

‘‘அக்கா.. நம்ம வீட்டுல.. இருக்கிற மாட்டுக்கிட்ட இருந்த தான் பக்குக்கு இந்த உண்ணி வந்திருக்காம்.. அதுனால கொஞ்ச நாளைக்கு மாட்டுக்கிட்ட பக்க விடவே கூடாதாம்.. டாக்டர் சொல்லிவிட்டாங்க..’’ என்று போதுமணி சொல்ல

‘‘நானா.. அதுகிட்ட போச்சொன்னேன் . அது போயி நோய் இழுத்திட்டு வந்திருக்கு.. நான் என்ன பண்றது..’’ என்ற மலர் அப்போது பக்கிடம் போவதையே தவிர்த்தாள். இரண்டு மூன்று நாட்கள் ஆயின அப்பவும் பக் சாப்பிடவே இல்லை.

‘‘என்ன..? போதுமணி பக் சாப்பிட்டுச்சா..!’’

‘‘இல்லக்கா..’’

‘‘ம்ம்.. அதான் ஹாஸ்பிட்டலும் போயிட்டு வந்திருச்சு. அப்பெறம் சாப்பிடுறதுக்கு என்னவாம்..?’’ என்று மலர் ரொம்பவே கோபமாகக்கேட்டாள்.

பக்..பக்.. என்று மலரைப்பார்த்து விழித்துக்கொண்டிருந்தது பக்.

‘‘ஏய்.. ஏன்..? சாப்பிட மாட்டேங்கிற. இங்க வா..’’ என்ற மலர் தன்னருகே பக்கைக் கூப்பிட்டு தன் அருகே அமர்த்தினாள்.

‘‘சாப்பிடு..’’ என்று தன் கையால் சாப்பாடு கொடுத்தாள்.

என்ன அவசரப் பசியோ ? பாவம் விடு விடுவென்று சாப்பிட ஆரம்பித்தது பக்.

‘‘பார்ரா.. இப்ப மட்டும சாப்பிடுது..’’ என்ற மலர்

‘‘ஏய்.. ஏன்..? இப்ப மட்டும் இப்பிடி சாப்பிட்டுட்டு இருக்க இதுக்கு முன்னாடி ஏன்..? சாப்பிடல..’’ என்ற போது

‘‘அக்கா.. நீ.. எப்பவும் பக்குக்கு உன்னோட கையால தானே சாப்பாடு

குடுப்ப .கொஞ்ச நாளா..அதுக்கு நீ சாப்பாடு குடுக்கலையில்ல.. அதான் சாப்பிடாட்டேங்குது. இன்னைக்கு நீயே.. சாப்பாடு குடுக்கவும் இப்ப எப்படி சாப்பிடுதுன்னு பாருங்க..’’ என்றதும் மலரின் கண்களிலிருந்து பொலப்பொலவென கண்ணீர் கசிந்தது.

‘‘ஏக்கா.. அழுற..’’ என்ற போதுமணி கேட்டாள்.

‘‘இல்ல.. என் கையில சாப்பிட்டு என் வயித்தில வளந்த என்னோட பிள்ளைங்க என்னைய விட்டுட்டு இப்ப எங்கெங்கயோ போய் வாழ்ந்திட்டு இருக்காங்க.. ஆனா..! இந்த நாய் பாரு.. கொஞ்ச நாள் தான் ஆகுது. இந்த நாய் வந்து ஆனா..! என்னோட பாசத்த எம்மேல எவ்வளவு அன்பு வச்சிருக்குன்னு பாரு.. நான் என் கையால சாப்பாடு குடுக்காம சாப்பிடலயே..! இது தான் உண்மையான பாசம் இந்த நாய விட என்னோட பிள்ளைங்க பெருசு இல்ல.. எனக்கு இந்த நாய் தான் பெத்த பிள்ளை..’’ என்று மலர் அழ சாப்பிட்டுக்கொண்டிருந்த பக் பட்டென மலரின் மடியில் ஏறி உட்கார்ந்து மலரின் முகத்தை தன் நாவால் தொட எத்தனித்தது. அதன் வாயிலிருந்து ஏதோ புரியாத மொழியில் முணங்கிக்கொண்டிருந்தது.

பக்கை தன் இரு கைகளாலும் வாஞ்சையோடு தடவிக் கொண்டிருந்தாள் மலர். அது தன் மொழியில் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *