செய்திகள்

பெட்ரோல்,டீசல் வரியை மத்திய அரசு குறைக்க மகாராஷ்டிர துணை முதல்வர் வேண்டுகோள்

புனே, ஜூலை 10–

பெரிய மனதுடன், பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதலமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான அஜித் பவார் கூறியதாவது:–

மத்திய அரசு பெரிய மனதுடன், பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரியைக் குறைத்து, ஏழை, எளிய மக்களின் நிதிச் சுமையை குறைக்க வேண்டும். மாநில அரசு, வரிக்கு வரி விதிப்பதாலேயே, பெட்ரோல், விலை ரூ.105 க்கு விற்கப்படுவதாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருப்பது சுத்தப் பொய்.

மத்திய அரசே உயர்த்தியது

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான மாநில வரியை உயர்த்தவில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையிலும் கூட எந்த வரியையும் மாநில அரசு உயர்த்தவில்லை. தற்போது இங்கே விதிக்கப்படும் வரி அனைத்தும் மத்திய அரசு விதித்திருப்பதே.

வரிகள் மூலம் வரும் வருவாயின் பெரும் பகுதியை மைய அரசே எடுத்துக் கொள்கிறது. எனவே, பெரிய மனது வைத்து, மத்திய அரசுதான் வரியைக் குறைக்க வேண்டுமே தவிர, எங்களது கைகளில் ஒன்றுமே இல்லை என்று துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *