சிறுகதை

புரிதலில் முதிர்ச்சியின்மை- மு.வெ.சம்பத்

ரோசி – மைக்கேல் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் தங்கள் படிப்பிற்கேற்ற வேலையில் அமர்ந்தனர். இரு வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டி விடவே இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு ஆகாயம் தான் எல்லை.

நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வரும் போது அங்குள்ள தெரிந்தவர்கள் எல்லாம் எப்போது உங்கள் திருமணம் என கேட்க ஆரம்பித்தனர்.

மைக்கேல் வெகு சீக்கிரம் என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவான்.

அன்று மைக்கேலின் அப்பா, ரோசி அப்பாவை சந்தித்து பல விஷயங்களைப் பேசி விட்டு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள் மைக்கேல் மற்றும் ரோசி திருமணம் முடித்து விடலாம் என்றதும் ரோசி அப்பா பலமாக தலையாட்டி சம்மதம் தெரிவித்தார்.

மெல்ல மெல்ல திருமண ஏற்பாடுகளை ரோசி அப்பா செய்யத் துவங்கினார். தனது சுற்றங்களுக்கு வாய்மொழியாக ரோசி மைக்கேல் திருமணம் பற்றிக் கூறி விட்டு திருமண நாள் மற்றும் விவரங்களை பின்னர் தெரிவிப்பதாகக் கூறினார்.

திருமணம் சிறப்பாக முடிந்த பின் ரோசி மற்றும் மைக்கேல் இருவரும் ஒரு மலை வாழ் உறைவிடத்திற்கு செல்வதென முடிவு செய்து புறப்பட்டனர். இருவரும் அந்த மலைக்கு வந்து தாங்கள் புக் செய்திருந்த ஓட்டலில் வந்து தங்கினார்கள். சற்று ஓய்வெடுத்த பிறகு, என்ன என்ன இடங்களுக்கு செல்வதென முடிவு செய்தனர்.

நிறைய இடங்களை நிதானமாக சுற்றிப் பார்த்து அனுபவித்த அவர்களுக்கு பாம்புகள் நடமாடும் மலையைப் பார்க்க மிகவும் ஆசை உண்டானது. அங்கு செல்ல இவர்கள் சிறப்பு அனுமதியையும் பெற்று விட்டனர்.

கடைசியாக பாம்புகள் உயிருடன் உலாவும் இடத்திற்குச் சென்றனர். முதலில் மைக்கேல் கையைப் பிடித்துக் கொண்டு வந்த ரோசி சற்று தூரம் வந்ததும் தானே நடப்பதாகக் கூறி நடந்தாள். சற்று முன்னே சென்ற மைக்கேல் சிறிய வளைவில் சென்று நிற்க அவன் எதிர்பாராத வண்ணம் இரண்டு பாம்புகள் சீறி வந்தன. இதை அவளுக்கு தெரிவித்தால் பயப்படுவாள் என்றெண்ணியவன் அங்கேயே இரு என்று சைகை மூலம் காட்ட, இதற்குள் ரோசி நின்றிருந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து சீற, பயந்த ரோசி வாய் விட்டு கத்தி, பின் அந்த பாம்பை நோக்கி ஏதாவது எறியலாம் என்றால் சிறு கற்கள்கூட தென்படவில்லை அவளுக்கு பயத்துடன் நடுங்கிய அவள் மைக்கேலைப் பார்க்க அவன் இன்னும் கையாட்டிக் கொண்டே இருந்தான். எரிச்சலில் தனது செயினைக் கழற்றி பாம்பின் மேல் ரோசி வீச, அது அதன் வாயில் போய் மாட்டிக் கொண்டது.

சப்தம் மற்றும் ஒரு கனமான பேப்பர் சுற்றிய கற்றை வந்த திசை நோக்கி வந்த அதிகாரிகள்,மைக்கேலை முதலில் பத்திரமாக மீட்டனர். பின் ரோசி பக்கம் வந்து அந்தப் பாம்பைப் பிடித்து அந்தச் செயினை அதனிடமிருந்து எடுத்து ரோசி வசம் தந்தனர்.

அப்போது ரோசி மைக்கேலைப் பார்த்து நான் ஆபத்திலிருக்கும் போது கையை கையை ஆட்டி கிண்டல் செய்கிறாயா என்று கத்த, அந்த அதிகாரி ரோசி வசம் நீங்கள் ஒரு பாம்பிடம் மாட்டிக் கொண்டீர்கள்; அவர் இரண்டு பாம்பிடம் மாட்டிக் கொண்டார்.

இருந்தாலும் அவர் இந்த காகித்தில் எனது மனைவியை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று எழுதியிருந்தார் என்று கூறி விட்டு நீங்கள் புரிதலில் இன்னும் முதிர்ச்சியடையவில்லையெனக் கூறி, இருவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.