செய்திகள்

பிள்ளைகள், பேரக் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை

பிள்ளைகள், பேரக் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை

கொரோனா பரிசோதனையால் பெற்றோர்களின் உடல்களை பார்க்க முடியாமல் மகன்கள் தவிப்பு

சீர்காழி, ஜூலை 3–

சீர்காழி அருகே பிள்ளைகள், பேரக் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் மகன்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டதால் பெற்றோர்களின் உடல்களை பார்க்க முடியாமல் தவித்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீன்வியாபாரி அருள்சாமி (வயது 70), அவரது மனைவி பாக்கியவதி (வயது 65). இவர்களுக்கு இரு மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னையிலும், மகள் திருமணமாகி நெய்தவாசல் உள்ளூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர். வயதான பெற்றோரை அவரது மகள் அவ்வபோது சந்தித்து வந்தார். ரத்தக்கொதிப்பு , நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகளை சென்று பார்க்க முடியாமல் அருள்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியவதி ஆகியோர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் திருவெண்காடு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வயதான தம்பதியரின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் அவர்கள் தற்கொலை செய்த கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில், தாய், -தந்தை இறந்ததை அறிந்து வந்த மகன்களையும் அவர்களது குடும்பத்தாரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அதே மருத்துவமனையில் தனிமைபடுத்தினர். இதனால் இறந்த பெற்றோர்களின் உடல்களை பார்க்க முடியாத நிலை மகன்களுக்கு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *