சிறுகதை

பிரதர்ஸ் -.. ராஜா செல்லமுத்து

விக்கி, சிவன் இரண்டு பேரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்; விக்கி மூத்தவன்; சிவன் இளையவன்.

விக்கி விளையாட்டில் கெட்டிக்காரன்.சிவன் படிப்பில் கட்டிக்காரன்.

விக்கி விட சிவனை வீட்டிலுள்ளவர்கள் ரொம்ப பாசமாக பார்ப்பார்கள். சிவன் சின்னவன் என்பதால், அவனுக்கு அதிகச் செல்லம். கூடவே நன்றாகப் படிப்பவனும் கூட என்று வீட்டில் அதிகப்படியான அன்பு . இது விக்கிக்கு அறவே பிடிக்கவில்லை. இது நாளுக்கு நாள் அதிகமாக அண்ணன், தம்பி உறவுக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கியது

அது என்ன? ரெண்டு பேரு பிறந்திருக்கோம். ஒருத்தருக்கு ஒரு மாதிரி. எனக்கு ஒரு மாதிரி. நான் என்ன இவங்க பெறக்காத பிள்ளையா? என்னைய தவிட்டுக்கு எதுவும் வாங்குனாங்களா? என்று விக்கி தன் பெற்றோர் மீது ரொம்பவே எரிச்சல் பட்டான். அதை ஒரு நாள் வெளிப்படுத்தியே விட்டான்

அம்மா, நீங்க செய்றது சரியில்ல; ஒற்றை வார்த்தையில் பேசினான்

ஏன்? நாங்க என்ன பண்ணோம். அம்மாவின் பதிலில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது

இல்ல, நீங்க ரொம்பவே ஓர வஞ்சனை பண்றீங்க. எனக்குப் பிடிக்கல. விக்கியின் பதில் ஏக்கம் தெரிந்தது.

என்னடா சொல்ற? அம்மா இப்போது முன்னை விட, கொஞ்சம் ஈரமாகவே கேட்டாள்.

நானும் சிவனும் ஒண்ணாத்தானே பெறந்தோம்.

ஆமா, இதுல என்ன ஒனக்கு சந்தேகம். அம்மாவின் பேச்சில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.

அப்பிடியா நீங்க, நடந்துக்கிறீங்க. என்ன ஒரு மாதிரியா பாக்குறீங்க. சிவன ஒரு மாதிரியா பாக்குறிங்க. எனக்குப் பிடிக்கல அப்படிச் சொல்லும் போது விக்கியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது

டேய் விக்கி, இதுக்குப் போயி, அழுதிட்டு, விடுடா…சிவன் ஒன்ன விட அஞ்சு வயசு சின்னவன். நீ பெரிய பையன் தானே, ஏன் அவன பாத்து ஒனக்கு கோவம் வருது. நீ தம்பி தானே அப்பிடின்னு ஏன் ஒனக்கு தெரியல. அவன் சின்னப் பையன்டா…நீ தான் புரிஞ்சுக்கிரனும். விடு விடு-இத எதுவும் பெருசா நெனைக்காதே”அம்மா ஆறுதல் சொன்னாள்.

அம்மா , இனிமே நான் நல்லா படிப்பேன். விளையாட மாட்டேன். தம்பி மாதிரியே படிச்சு பெருசா வருவேன்மா என்று விக்கி அழுத போது,

அட லூசுப் பயலே சிவன் நல்லா படிக்கிறான்றதுக்காக, அவன நாங்க பாக்கல. அவன் ஒன்ன விட சின்னப்பையன் அவ்வளவு தான். படிப்பு அப்பிடி இப்பிடின்னு எதுவும் இல்ல. ஒனக்கு எது வருதோ அதச் செய் . ஒன்னையும் இனி சரியா பாத்துக்கிறேன் என்று அம்மா சொன்னதோடு மட்டுமல்லாமல்,அடுத்த நாளிலிருந்து அதை நிறைவேற்றியும் காட்டினாள்.

அன்றிலிருந்து விக்கியும் சிவனும் ரொம்பவே பாசமாகப் பழகத் துவங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *