சிறுகதை

பிரசவ ஆஸ்பத்திரி – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் இருந்தது பிரசவ ஆஸ்பத்திரி. நொடிக்கு இத்தனை ஆயிரம் பேர் பிறக்கிறார்கள். ஒவ்வொரு நொடிக்கும் இத்தனை ஆயிரம் பேர் இறக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அந்த புள்ளி விவரங்களை பொய்யாக்காமல் பிரசவ ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்த நொடிகளில் குழந்தைகள் பிறந்து கொண்டே இருந்தார்கள் .

“சந்தோசம் தான் என் நேரம் ஆனால் எத்தனை பிரச்சனைகளை சுமந்திருக்கும் என்று இந்த பொழுதை பற்றி யாருக்கு தெரியும்”

என்ற கவிதையைப் போலவே பிரசவ ஆஸ்பத்திரி முன்னால் எப்போதும் ஒரு கூட்டம் கூடி நின்று கொண்டிருக்கும். மகளுக்கு மருமகளுக்கு, உறவினர்களுக்கு என்று உறவினர்கள் என்று அடைத்துக் கிடப்பார்கள்.

இந்த ஒரு பிரசவ ஆஸ்பத்திரி எப்படி என்றால், தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பிரசவ ஆஸ்பத்திரிகள் எவ்வளவு குழந்தைகள் பிறப்பார்கள் என்று கணக்கு போட்டுக்கொண்டு கவனமாக பிரசவ ஆஸ்பத்திரி நாேட்டமிட்டு கொண்டிருந்தான் வித்யாசாகர்.

அந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவம் அடைந்து சந்தோசப்படுவர்களும் உண்டு. சிசேரியன் என்ற சிக்கலான பிரசவத்திலும் குழந்தை பெறுபவர்களும் உண்டு .பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது என்ற செய்தியை கேட்டு அழுது புலம்புவர்களும் உண்டு .குழந்தை வயிற்றுக்குள் தலைகீழாக புரண்டு கிடக்கிறது அதை வேறு வழியில் தான் எடுக்க வேண்டும் இல்லையென்றால் தாய்க்கும் சேய்க்கும் பிரச்சனை என்று மருத்துவர்கள் சொல்ல இதனால் சோகமாகி கிடப்பவர்கள் ஒரு பக்கம். பிறந்த குழந்தை பெண் குழந்தையானதால் திட்டிச் செல்பவர்களும் அந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் இருந்தார்கள்.

அத்தனை நிகழ்வுகளையும் வித்யாசாகர் பார்த்துக் கொண்டிருந்தான்.

பிரசவ ஆஸ்பத்திரிக்குள் ஆண்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால் ஆஸ்பத்திரியின் எதிரில் நின்று கொண்டு நடக்கும் ஒவ்வொன்றையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வித்சாகர்.

அந்த அனுபவம் அவனுக்கு அந்நியமாகப்பட்டது. காரணம் திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகியும் கூட வித்யாசாகர் மனைவிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை .

எப்போதாவது பிரசவ ஆஸ்பத்திரியைக் கடக்க நேர்ந்தால் ஆயாசமாக அங்கு நின்று இந்த நிகழ்வுகள் எல்லாம் பார்த்து ஒரு சேரச் சந்தோஷப்பட்டு போவது வித்யாசாகருக்கு சந்தாேஷமாக இருந்தது.

நம்ம மனைவியும் இந்த மாதிரி குழந்தை பெற்று நம்ம வீட்டுக்கு ஒரு வாரிச கொண்டு வந்திருந்தா எப்படி இருந்திருக்கும்? என்று மனதிற்குள் நினைத்தவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

சரி கிளம்பலாம் என்று நினைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்த போது அங்கே அவன் பார்த்த காட்சி அவளை மெய்மறக்கச் செய்தது.

பிரசவ ஆஸ்பத்திரி சுற்றி மூன்று பெண் நாய்கள் தன் குட்டிகளை அங்கு ஈன்றெடுத்தன

ஒரு தாய் நாய் சுவரின் ஓரத்தில் படுத்து கிடந்தது. அப்போதுதான் குட்டிகளை ஈன்ற அந்தத் தாய் நாய் தன் குட்டிகளுக்கு பால் கொடுப்பதற்காக படுத்து கிடந்தது.

இன்னொரு நாய் தன் குட்டிகளோடு அந்தப் பகுதியை சுற்றிக் கொண்டிருந்தது.

இன்னொரு நாய் பிரசவத்திற்கு தயாராக இருந்தது

இதைப் பார்த்த வித்யாசாகருக்கு ஒரு பக்கம் வியப்பாகவும் மறுபக்கம் ஆச்சரியமாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

காரணம் அந்த நாய்களுக்கும் இது பிரசவ ஆஸ்பத்திரி என்று தெரியும் போல .அதுதான் இங்கே வந்து குட்டி போட்டு இருக்குது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

பிரசவத்திற்காகத் துடித்துக் கொண்டிருந்த அந்த நாயின் வயிற்றிலிருந்து குட்டிகள் மள மளவென வெளியே வர ஆரம்பித்தன.

அவைகளுக்கு எந்த மருத்துவரும் செவிலித்தாயோ பிரசவம் பார்க்கவில்லை.

தன் குட்டிகளை ஈன்று தன் நாவால் அத்தனைக்கும் நக்கிக் கொண்டிருந்தது.

ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள் அந்த நொடியில் எத்தனையோ குழந்தைகள் பிறந்து அதன் அழும் சத்தம் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது.

குட்டி ஈன்ற நாயின் உடல் வலிச் சத்தம் .குட்டிகளின் சத்தம் வெளியே கேட்டுக் கொண்டிருந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யாசாகர் எதையோ நினைத்துக்காெண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *