சிறுகதை

பிச்சை – ஆவடி ரமேஷ்குமார்

வயிற்றில் ஒன்றும் கைகளில் ஒன்றும் சுமந்தபடி பிச்சை கேட்டு வாசலில் நின்றிருந்தவளை ஏற இறங்கப் பார்த்தாள் பத்மா.

“நீயும் மூனு வருஷமா என் வீட்டுக்குப் பிச்சை கேட்டு வர்றே. நானும் சாப்பாடு, துணி, பணம்னு நிறைய கொடுத்திருக்கேன். ஆமா உனக்கு எத்தனை குழந்தைகள்?” ‘‘வயித்துல இருக்கிறதும் சேர்த்து நாலும்மா” என்றாள் அந்தப் பெண்.

‘‘எனக்குப் பத்து வருஷமா குழந்தையில்ல. பார்க்காத டாக்டர் இல்ல. என் வயித்துல ஒரு குழந்தையும் உருவாகமாட்டேங்குது. உன் கைல இருக்கிறதை இந்தப் பாவிக்குப் பிச்சையா நினைச்சு போடச் சொன்னா எனக்கு போடுவியாம்மா நீ? உனக்கு மத்த குழந்தைகளை வளர்க்கிறதுக்குத் தேவையான பணம் ஒரு லட்சம் கொடுக்கிறேன்!” என்றான் பத்மா.

பத்மாவை உற்றுப் பார்த்து விட்டு சில நிமிடங்கள் யோசித்தவள் , “கையை நீட்டுமா” என்று சொல்லி பத்மாவின் கைகளில் தன் குழந்தையைப் பத்திரமாகக் கொடுத்தாள். அதிர்ந்து போன பத்மா, “அய்யய்யோ நீ பெரிய மனசுக்காரினு எனக்கு தெரியாமப்போச்சே! இப்படி சட்டுனு கொடுப்பேன்னு நான் எதிர்பார்க்கலைம்மா… வா..வா… முதல்ல வீட்டுக்குள்ள வா!” என்று அவளை உள்ளேஅழைத்து வந்தாள்.

“இங்க பாரும்மா… உன் புருஷனையும் என் புருஷனையும் வர வச்சு நீங்க எங்களுக்கு ‘தத்து’ கொடுக்கிற மாதிரி எழுதி வாங்கிட்டுப் பணம் முழுதும் கொடுத்திட்டு உங்க குழந்தையை நாங்க வாங்கிக்கிறோம். அது வரைக்கும் நீயே வச்சிரு” என்றபடி குழந்தையை திருப்பிக் கொடுக்க அவளிடம் நீட்டினாள் பத்மா.

வாங்க மறுத்த அவள், “என்ன தாயி இது… என்கிட்ட இல்லாததை நான் உன்கிட்ட கேட்டேன். உன்கிட்ட இல்லாததை நீ என்கிட்ட கேட்ட. என் பிள்ளை உன் வீட்ல வளர்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனும். பணத்தை வாங்கிட்டுப் புள்ளையைக் கொடுத்தா அது புள்ளையை வித்த மாதிரி ஆயிடும். அது எனக்கும் புள்ளைக்கும் பெருமையில்ல. நாளைக்கு என் புருஷனை கூட்டியாரேன். அது வரைக்கும் நீயே புள்ளையை வச்சிரு தாயி. எனக்கு பசியா இருக்குது. வயிறாற துண்ண சோறு போடு தாயி. அது போதும்; காசு பணம் வேண்டா!” என்றாள்.

விக்கித்துப் போன பத்மா குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு சமயலறைக்கு ஓடினாள் சாப்பாடு எடுத்து வர!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *