செய்திகள்

பால் பாக்கெட் எடை குறைவு: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை, ஆக. 2–

ஜூலை 30–ந்தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் பால் பாக்கெட்டை எடையில் முறைகேடு நடப்பதாகவும், அரை லிட்டர் பால் பாக்கெட்டின் எடை சுமார் 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 30–ந்தேதி விற்பனை செய்யப்பட்ட ஒரு பால் பாக்கெட்டின் எடை வெறும் 430 கிராம் மட்டுமே இருந்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவானது.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆவின் நிர்வாகம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபடுவதாகவும் நாள்தோறும் ரூ.2 கோடி அளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

ஆவின் பால் உரிய எடையில் மக்களுக்குக் கிடைப்பதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:–

பால்‌ பாக்கெட்டுகள்‌ தயாரிக்கப்படும்‌ போது பால்‌ பாக்கெட்டுகளின்‌ எடை மற்றும்‌ பால்‌ பாக்கெட்டுகளின்‌ தரம்‌ தரக்கட்டுபாடு அலுவலர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களால்‌ மணிக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்படுகிறது. சரியாக இருக்கும்‌ பால்‌ பாக்கெட்டுக்கள்‌ மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும்‌. பாலின்‌ எடை மற்றும்‌ தரம்‌ உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

ஆனால், ஜூலை 30-–ம் தேதியன்று விநியோகம்‌ செய்யப்பட்ட ஆவின்‌ பால்‌ பாக்கெட்டில்‌ குறைவான எடையில்‌ பால்‌ பாக்கெட்‌ விநியோகிக்கப்பட்டதாக புகார் வெளியானது.

இந்தப் புகாரின்‌ அடிப்படையில்‌ மத்திய பால்பண்ணையின்‌ உதவி பொது மேலாளர்‌ (பொறியியல்‌), உதவி பொது மேலாளர்‌ (தரக்கட்டுபாடு), துணை மேலாளர்‌ (விற்பனை பிரிவு) ஆகியோர்‌ என்ஆர்ஓசி425-ன்‌ பொறுப்பாளர்‌ தசரதன்‌, அவர்களை நேரில்‌ சென்று விசாரித்தனர்‌. அப்போது அவர்‌ கூறியதன்படி, 30.7.2022 அன்று 672 எப்சிஎம் பால்‌ பாக்கெட்டுகள்‌ விநியோகிக்கப்பட்டதாகவும்‌ அதில்‌ ஒரு பாக்கெட்‌ மட்டும்‌ எடை குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்‌. அதற்கு பதிலாக வாடிக்கையாளருக்கு உடனடியாக மாற்று பாக்கெட்‌ கொடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்களின்‌ நலன்‌ பேணும்‌ வகையில்‌ அனைத்து தரம் மற்றும்‌ அளவுகள்‌, உணவு பாதுகாப்பு மற்றும்‌ தர நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித வேறுபாடுமின்றி பால்‌ விநியோகம்‌ செய்வதில்‌ ஆவின்‌ நிறுவனம்‌ உறுதியாக உள்ளது.

இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும்‌ அளவு குறை இருப்பின்‌ உடனடியாக நுகர்வோர்களுக்கு அதற்குரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்று பால்‌ பாக்கெட்டுகள்‌ வழங்கப்படும்‌.

நுகர்வோருக்கு ஏதேனும்‌ குறைகள்‌ இருப்பின்‌ 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணான 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.comல் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *