செய்திகள்

பாராலிம்பிக் போட்டி: தமிழக வீரர்கள் 91 பேருக்கு பதக்கம்

சென்னை, மார்ச் 31-

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில் பெங்களூரில் நடைப்பெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் 91 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில்  இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில் 19வது தேசிய அளவிலான மாற்றுத்திறன் வீரர்களுக்கான தடகளப் போட்டி கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறன் வீரர்கள் 171 பேர் பங்கேற்றனர்.

இவர்களில் 12 பேர் தங்கப்பதக்கமும், 18 பேர் வெள்ளிப்பதக்கமும் 11 பேர் வெண்கல பதக்கமும் , நீச்சல் போட்டியில் 17 பேர் தங்க பதக்கமும், 16 பேர் வெள்ளி, 11 பேர் வெண்கல பதக்கமும், பவர்லிப்டிங் போட்டியில் 6 பேர் என மொத்தம் 91 பேர் பதக்கம் வென்றனர்.‌ இந்த போட்டியில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. இதில் கோவை வீரர்கள் 4 பேர் பதக்கம் வென்றனர்.

பெங்களூரில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இவ்விழாவில் சந்திரசேகர் பேசுகையில்,” பாரா ஒலிம்பிக் சங்கம் மாற்றுத்திறன் வீர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உதவிகளையும் செய்து தருகிறது. வீரர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு டோக்கியோவில் நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல முயற்சிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் நடக்கும் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க செய்யும் வகையில் தமிழக பாரா ஒலிம்பிக் சங்கம் செயல்பட்டு வருகிறது,” என்றார்.

இவ்விழாவில் தமிழக பாரா ஒலிம்பிக் சங்க செயலாளர் ஆனந்த ஜோதி, பொருளாளர் விஜயசாரதி, துணைத் தலைவர் கிருபாகர ராஜா, அணி மேலாளர் சார்லஸ்,  பயிற்சியாளர் ரஞ்சித் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *