சிறுகதை

பாசம் – ஆவடி ரமேஷ்குமார்

” அக்கா, உனக்கு விசயம் தெரியுமா?” என்று போனில் புதிருடன் ஆரம்பித்தாள் ரேவதி.

” என்ன விசயம்? ” என்று கேட்டாள் கல்யாணி.

” நம்மப்பா நமக்கு தெரியாம இருபது லட்ச ரூபாய் சீட்டு போட்டிருக்காரு. இப்ப அது டைம் முடிஞ்சு பணம் கைக்கு வந்திடுச்சாம்”

” உண்மையாவா சொல்ற? “

” ஆமாக்கா”

” இதை உனக்கு யார் சொன்னா?”

” அப்பா வீட்டு வேலைக்காரி சரசு தான்!”

” சரசா சொன்னாள்? இதை எனக்குத் தானே முதல்ல சொல்லனும். இந்த மாதிரி விசயங்களை சொல்றதுக்காகவே மாசம் மாசம் நான் 250 ரூபாயை அவளுக்கு கமிஷனா தந்திட்டிருக்கேன். இந்த விசயத்தை ஏன் எனக்கு சொல்லாம விட்டாள்?”

” நான் மாசம் 500 ரூபா கமிஷன் தர்றேன். அதான் எனக்கு முதல் தகவலா சொல்லியிருக்காள்”

” அப்பா சீட்டு போட்ட விசயத்தை அவள் இதுவரை எனக்கு சொல்லவே இல்லையே… இது தெரியாம போன மாசம் நம்ம அப்பா என்கிட்ட இரண்டு லட்ச ரூபாய் கடன் கேட்டாரு. மாமா கூட குடுத்தர்லாம்னாரு. நான் தான் அப்பாகிட்ட பணத்தை திருப்பி கேட்க வேண்டிய சூழ்நிலை வந்தா சங்கடமாகும்னு அவ்வளவு பணம் இல்லைனு பொய் சொல்லிட்டேன். இப்ப போய் அப்பாகிட்ட எப்படி அந்த சீட்டு பணத்தில் நான் பங்கு கேட்க முடியும்?”

” எனக்கு இந்த கவலையில்லக்கா. அப்பா என்கிட்டயும் போன மாசம் ரெண்டு லட்ச ரூபா கடன் கேட்டாரு. எங்க வீட்டுக்காரரு பணம் இல்லைனு பொய் சொல்லச் சொன்னார். ஆனா நான், இது ஏதோ அப்பாவோட டெக்னிக்னு புரிஞ்சிட்டு வேலைக்காரி ஏற்கனவே சொல்லியிருந்த சீட்டு போட்டிருக்கிற விசயத்தை மனசுல வச்சிட்டு ரெண்டு லட்சத்தை நேர்ல கொண்டு போய் கொடுத்தேன். இப்ப அநேகமா ரெண்டு லட்சத்தோட எனக்கு ஏதாவது பங்குத் தொகை கொடுக்க வாய்ப்பிருக்கு”

” சரி சரி…. இனிமேல் நானும் சரசுக்கு மாசம் 500 ரூபா தண்டம் அழறேன்’’. ‘‘இனியாவது புத்திசாலித்தனமா நடந்துக்க…’’

‘‘முயற்சி பண்றேன்”

இருவரும் போனை வைத்தார்கள்.

கல்யாணிக்கு பொறுக்கவில்லை. சரசு மேல் ஆத்திரம் வந்தது. உடனே அவளுக்கு போன் செய்தாள்.

” என்ன சரசு… எங்கப்பா சீட்டு போட்டிருக்கிற விசயத்தை நீ ஏன் எனக்கு சொல்லல. ரேவதி 500 ரூபா குடுக்கிறதால அவளுக்கு மட்டும் சொல்லியிருக்கியே. இது நியாயமா? என்கிட்ட கேட்டிருந்தா நானும் 500 ரூபா கொடுத்திருக்க மாட்டேனா?..”

இதைக் கேட்டுவிட்டு அமைதியாக பதில் சொன்னாள் சரசு.

” அக்கா, உங்களுக்கு இன்னொரு விசயத்தையும் உடைச்சு சொல்லிடறேன். நான் இங்க நடக்கிற விசயத்தை பணத்தை வாங்கிட்டு உங்க ரெண்டு பேருக்கும் சொல்லுகிற விசயத்தை உங்கப்பா மோப்பம் பிடிச்சுட்டார். இப்ப அவர் கட்டுப்பாட்ல தான் இருக்கிறேன். அவர் தான் இப்ப உங்க ரெண்டு பேர்ல யார்கிட்ட எந்த விசயத்தை சொல்லனும்னு திட்டமே போட்டுக் கொடுக்கிறார்”

” என்னடி சொல்ற? நம்பற மாதிரி இல்லையே..!”

” ஆமாக்கா. நம்பித்தான் ஆகனும். உங்க ரெண்டு பேர்ல யார் உண்மையிலேயே புத்திசாலினு தெரிஞ்சுக்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். பணத்தை விட பாசத்துக்கு யார் மதிப்பு கொடுக்கிறாங்கனு டெஸ்ட் பண்ணிட்டிருக்கிறார். இப்ப விழுந்த சீட்டு பணத்துல உங்க தங்கச்சிக்கு அஞ்சு லட்சம் கொடுக்கிறதுனு முடிவு பண்ணி அவங்க கொடுத்த கடனோட சேர்த்து ஏழு லட்சத்தை தனியா எடுத்து வச்சிட்டார்”

” ஏய்… ஏய்… சரசு… இது அநியாயம்டி. நீ இப்படி அப்பாவோட எல்லா விசயத்தையும் சொல்றயே… இது நீ எங்கப்பாவுக்கு செய்யற துரோகம் இல்லையா?”

” இல்லக்கா. உங்கப்பா வலிய வந்து தான் என்கிட்ட இந்த விசயங்களை சொல்றார். என் மேல அவ்வளவு நம்பிக்கை!

15 வருஷமா வேலை பார்க்கிறேனில்ல! அவர், ‘உன் மேல என் பொண்ணுக சந்தேகப்பட்டா நீ உனக்கு தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் என் அனுமதியில்லாம சொல்லிடலாம்’ னு எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்.

சரிக்கா. எனக்கு வேலை நிறைய இருக்கு அப்புறம் பேசறேன்” என்றபடி போனை வைத்து விட்டாள் சரசு.

” ச்சே! நாம இப்படி முட்டாளாகிட்டோமே…” என்று புலம்பிய கல்யாணி, ” ஸாரிப்பா… உங்க பாசத்தோட அருமை தெரியாம தப்பு கணக்கு போட்டுட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *