சிறுகதை

பள்ளிக்கூடம் திறந்தாச்சு | ராஜா செல்லமுத்து

Spread the love

இன்று சுறுசுறுப்புச் சிறகைக் கட்டிக்கொண்டது அந்தக் குடும்பம். இதுவரையில் சோம்பல் போர்த்திக் கிடந்த குடும்பம் அது.

சூரியன் வானில் நடுவுக்கு வரும் வரை சுருண்டு கிடக்கும் மாரியின்  படுக்கை – இன்று அதிகாலையிலேயே சுற்றி வைக்கப்பட்டது.

“அடேய்…. மனோஜ்., அடேய் எழுந்திருடா. சூரியன் உதிக்காத அதிகாலையிலேயே மகனை எழுப்பினாள் மாரி.

“ம்ம்” என்ற பெருஞ்சத்ததோடு புரண்டு படுத்தான் மனோஜ்.

“ப்ரியா, பிரியா…. மகளையும் தட்டி எழுப்பினாள்.

இந்தா இன்னும் கொஞ்ச நேரம்மா” ப்ரியாவும் புரண்டு படுத்தாள்.

“எந்திரிங்க” இன்னைக்கிருந்து ஸ்கூல் தெரியுமில்ல” சீக்கிரம்…. சீக்கிரம்…. ’’

மகளையும் மகனையும் எழுப்பிவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள் அம்மா மாரி .

“ரெண்டு மாசம், எப்படிப் போச்சுன்னே தெரியல. கண்ணமூடி, கண்ண தெறக்கிறதுக்குள்ள கொள்ள பட்டுன்னு ஓடிப்போயிருச்சு” என்றவள் சமையலறைக்குள் ஐக்கியமானாள்.

இரண்டு மாதங்கள் வரை லேட்டாக எரியத் தொடங்கிய அடுப்பு. இன்று முதல் தன் சுறுசுறுப்பு ஜுவாலையை ஜோராகப் பற்ற வைத்து “உஷ்” என எரிய ஆரம்பித்த அடுப்பில் முந்தைய நாட்களின் மொத்த சோம்பலும் எரிந்து கொண்டிருந்தது.

“டேய், மனோஜ், மனோஜ், ப்ரியா…. ப்ரியா …. உரக்குக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தால் மாரி.

‘‘இன்னும் கொஞ்ச நேரம்மா” என்று கெஞ்சிய குழந்தைகளை அதற்கு மேல் எழுப்ப மனமில்லாததால் அப்படியே விட்டுவிட்டாள் மாரி.

“இவ்வளவு நாள் படுத்து தூங்குச்சுகல்ல. அதான் அந்த பழக்கம் என்றபடியே புரண்டு படுத்தான் கணவர் சார்லி.

“ம்ம்” சொல்லிட்டே நீங்களும் தூங்குனா எப்படி?

அப்பா எவ்வழியோ புள்ளைகளும் அவ்வழி” என்று மாரி கணவர் சார்லியை எழுப்பினாள்.

“இன்னும் கொஞ்ச நேரம்மா?’’

“ம்” நீங்க எந்திரிச்சா தானே புள்ளைங்களும் எந்திரிக்கும். எந்திரிங்க என்று கணவனை எழுப்பிக்கொண்டே சமையல் வேலைகளில் மும்முரமானாள் மாரி.

“டக் டக்” என்று கடிகார முட்கள், காலத்தைக் கரைத்துக் கொண்டிருந்தது.

மாரியின் கால்கள் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தன பிள்ளைகளின் புத்தகம் நோட்டுகளை எடுத்து வைத்து மதிய சாப்பாட்டையும் கட்டி வைத்தாள்.

“அடேய் நேரமாகுது எந்திரிங்கடா” எல்லோரையும் எழுப்பிக்கொண்டே நேற்றைய அழுக்கைத் துவைக்க ஆரம்பித்தாள்.

“வாவ்…’’ என்று கொட்டாவியை விட்டபடியே எழுந்தான்.

குழந்தைகள் குளிங்க குளிங்க. நேரமாச்சு. இரண்டு பிள்ளைகளையும் எழுப்பி விட்டு குளிக்க வைத்தாள்.

“சீக்கிரம்…. சீக்கிரம்…. நேரமாச்சு கணவனையும் சேர்த்து எழுப்பிவிட்டு மூன்று பேருக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்ய ஆரம்பித்தாள்.

“இதான் உன்னோட புத்தகமா?

“இது உன்னோட நோட்டான்னு பாரு”

எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினாள் .

“ஆமா இது என்னது தான் “அம்மா இது என் நோட்டு” குழந்தைகள் விவாதம் செய்ய ஆரம்பித்தனர்.

“ஏய், ஆரம்பிச்சுட்டீங்களா? சண்ட போடக்கூடாது. நேரமாச்சு கிளம்புங்க” என்று மாரி பிள்ளைகளைக் கிளப்பி விட்டு கொண்டிருந்தாள்,

ஒரே திசையில் இருக்கும் மகளின் பள்ளிக்குச் சென்று அவளை விட்டுவிட்டு இன்னொரு திசையில் இருக்கும் மகனின் பள்ளிக்குச் சென்று அனைவரையும் விட்டு விட்டு, வீடு திரும்பி கணவனையும் கிளப்பி விட்டு “உஷ்” என அவள் உட்காரும் போது மணி பதினொன்றைத் தொட்டு நின்றது.

“என்ன மாரி” எல்லாம் கிளம்பியாச்சா? என்று பக்கத்து வீட்டுக்காரப் பெண் கேட்டபோது …‘‘ஆமாக்கா இப்ப தான் எல்லாம் கிளம்புனாங்க’’

“நீ சாப்பிட்டியா?

” இல்லக்கா”

“இனிமே தான்” என்று பேசிக்கொண்டே பற்பசையை எடுத்து பிரஷ்ஷில் பிதுக்கினாள்

“கொர… கொர… ’’ வென பல் துலக்கி விட்டு அவள் சாப்பிட உட்காரும்போது, மதியம் 12 மணியானது காலை உணவைச் சாப்பிட்டு விட்டு, லேசாக கண்ணசரும் போது ஐயய்யோ , ஸ்கூல் விட்டுருமே” என்று பதறி போய் எழுந்து உட்கார்ந்தாள்.

கடகடவெனக் கிளம்பினாள் . இரண்டு திசைகளிலிருக்கும் இரண்டு பேரைக் கூட்டி வந்து வீட்டில் காபி, ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு மறுபடியும் அவர்களை டியூஷன் அனுப்பி விட்டு இரவு உணவுக்காக தயாரானாள். மறுபடியும் மிஷனாக ஆரம்பித்தாள். டியூஷன் முடிந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வரும் கணவனுக்கும் பணிவிடைகள் செய்து விட்டு

‘‘ யப்பா ’’என்று அவள் படுக்கையில் விழும் போது மணி இரவு ஒன்றைத் தொட்டு நின்றது மறுபடியும் அதிகாலையில் எழுந்தவள்,

சமையல் வேலை முழ்கினாள்.

சூரியன் புலரும் நேரம் அடேய், மனோஜ், ப்ரியா… ப்ரியா… மனோஜ், எந்திரிக்க நேரமாச்சு….ஸ்கூலுக்கு நேரமாச்சு பாருங்க எந்திரிங்க. ஏங்க நீங்களும் சீக்கிரமா எழும்புங்க” என்று உத்தரவு குரலை எழுப்பிவிட்டு மீண்டும் இயந்திரமானாள் மாரி.

“விடுமுறைக்குப் பின் … விடுதலை இல்லை”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *