செய்திகள்

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானதே: சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Spread the love

சென்னை, பிப். 19–

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளிவிரம் சரியானது என்று சட்டசபைியல் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது குளித்தலை தொகுதி உறுப்பினர் ராமர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

குளித்தலை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை குளித்தலை தொகுதி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் போத்துராவுத்தன்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளி நிறைவு செய்யாததால், அப்பள்ளியை தரம் உயர்த்த வழிவகை இல்லை என்றார்.

அதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.

தமிழக பள்ளிகளில் 9ம், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் என்பது 2016–17ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்தது என்றும், 2018ம் ஆண்டில் 14 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் என்பது 2017–18ம் ஆண்டில் 3.6 சதவீதமாக உள்ளது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அமைச்சரோ 14 சதவீதம் என்கிறார். மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர் கூறியதற்கு வித்தியாசம் உள்ளது. இதற்கு என்ன காரணம்? மத்திய அரசின் புள்ளிவிவரம் தவறு என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இடைநிற்றலில் மட்டும் புள்ளிவிவரம் எப்படி தவறாக இருக்க முடியும் என்றார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, மத்திய அரசுக்கு நாம் தான் புள்ளி விவரங்களை வழங்கி வந்தோம். ஆசிரியர்கள் மூலம் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆன்லைனில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இடைநிற்றல் குறைவாகும். தமிழகத்தில் தற்போது இடைநிற்றல் 3.7 சதவீதமாக உள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். நமது புள்ளிவிவரங்கள் சரியானது ஆகும்.

பீகார் மாநிலத்தில் இடைநிற்றல் 39.6 சதவீதமாக உள்ளது. இடைநிற்றலில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. எனவே இடைநிற்றல் குறித்த தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானதே என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *