செய்திகள்

பல்வேறு துறைகளில் தமிழகம் சாதனை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சென்னை, ஜன.8–

தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது; இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

கவர்னர் 2.1.2019 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இலை ஆட்சி ஒன்றுதான் தொலை நோக்குத் திட்டங்களை அளிக்கும் என்று மக்கள் மலை போல நம்புகிறார்கள்.

வணங்க வந்தோர் பசி போக்க –அன்னதானத் திட்டம், குறைந்த விலையில் தரமான உணவிற்கு – அம்மா உணவகம், கருவில் இருக்கும் சிசுவிற்கு – ஊட்டச்சத்து, பிறக்கும் குழந்தைக்கு – அம்மா பரிசுப் பெட்டகம்,

பிறந்த குழந்தைக்கு – தாய்ப்பால் வங்கி, தலைமுறையை உருவாக்கும் தாய்மார்களுக்கு – அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், மக்கள் நல்வாழ்வுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு பலவகை கலவைச் சாதம், 14 வகையான கல்வி உபகரணங்கள்,

பால்வாடியிலிருந்து பல்கலைக் கழகம் வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு ஏற்றமிகு திட்டங்கள்,

இரண்டாம் பசுமைப் புரட்சி இதனால் 5 முறை கிருஷி கர்மான் விருதுகள்,

வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம்,

வீடு இல்லாதோருக்கு – பசுமை வீடுகள், ஆதரவற்றோருக்கு நான் இருக்கிறேன் தாயாக – என்று நம்பிக்கை அளித்த அம்மா ஆட்சியில் இன்னும் ஏராளமான திட்டங்கள்.

கர்நாடகம் அடைத்து வைத்திருந்த – காவேரித் தாயை மீட்டு – விவசாயத்திற்கு புத்துயிர் கொடுத்ததும், கடலோர மீனவர்களின் கண்ணீர் துடைத்து – உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்ததும், மின்சாரப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து – தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதும்,

நிலத்தடி நீரை நிரந்தரமாய் உயர்த்தி, அடி பம்புகளிலும் அருவி போல் நீர் கொட்ட, மழைநீர் சேகரிப்பு திட்டம் வழங்கியதும், ஊரக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தாய்த் திட்டம் செயல்படுத்தியதையும்,

அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் என்று அடுக்கடுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியதையும் – யாரும், எங்கேயும், எந்தக் காலத்திலும் மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அம்மாவின் ஆத்மா

அம்மாவின் அரசியல் பாசறையிலும், ஆட்சிப் பணிகளிலும் பயிற்சி பெற்றவர்கள் நாங்கள் என்பதால் அம்மா வழியில் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். நாங்கள் வகுக்கும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலும் அம்மாவின் ஆத்மா இருக்கிறது.

அதனால் தான், அகிலமே நமது திட்டங்களை முன்னோடித் திட்டங்களாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் இந்த மாமன்றத்தில் 2.1.2019 அன்று ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமனால் முன்மொழியப்பட்டு, உறுப்பினர் பி.எம்.நரசிம்மனால் வழிமொழியப்பட்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அரிய கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார்கள். பாராட்டியும், குறை கூறியும் பேசிய உறுப்பினர்கள் என அனைத்து உறுப்பினர்களுக்கும் முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை” அதாவது,

குற்றத்தை ஆராய்ந்து, யார் பக்கமும் சாயாமல், நடுநிலையில் நின்று, குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை நல்லறிஞர்களோடு ஆலோசித்துத் தருவதே நல்ல நீதிமுறையாகும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, மாநிலத்தில், சட்ட ஒழுங்கு காக்கும் வகையில், நற்பணி செய்து மக்களை அச்சமின்றி வாழ வைக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

காவல்துறை நவீனமயம்

காவல் துறையை நவீனப்படுத்தியும், அவர்களது திறனை மேம்படுத்தியும், அவர்களுக்கு நவீன சாதனங்கள் வழங்கியும், அவர்களது மன வலிமை மேம்பட பயிற்சிகள் வழங்கியும் வருவதால், சாதிக் கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், அடிப்படைவாதம், தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை பெருமளவில் குறைந்துள்ளன.

காவல் துறையை நவீனப்படுத்துவதன் ஒரு பகுதியாக எம்.பாஸ்போர்ட் செயலி, சிசிடிஎன்எஸ் திட்டம், நவீன தொழில்நுட்பத்துடன் மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் புத்துணர்வு பயிற்சி அளிக்கும் திட்டம், உட்சுற்று தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்தும் திட்டம் போன்ற திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

கேமிராக்கள் பொருத்துவதில் தமிழகம் முன்னோடி

குறிப்பாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கண்காணிப்பதற்காக உட்சுற்று தொலைக்காட்சி கேமராக்கள் பொருத்துவதில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், சமீபத்தில் நடந்த பெரும்பாலான குற்றங்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னையில், செயல்பாட்டில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேலான கேமராக்கள் அதிக அளவிலான குற்றங்களை மிக விரைவில் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன.

திருக்கோயில்களில் உள்ள தொன்மை வாய்ந்த உலோகத் திருமேனிகள் மற்றும் கற்சிலைகளை பாதுகாக்க, 308.70 கோடி ரூபாய் செலவில் ஒரு திருக்கோயிலுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 3,087 திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக காவல் துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க நிம்ஹான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காவலர் நிறைவாழ்வு பயிற்சி என்ற உளவியல் ரீதியான பயிற்சித் திட்டத்தை அம்மாவின் அரசு அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இப்பயிற்சியினை வழங்க 254 காவல் அதிகாரிகளும், 208 மனநல ஆலோசகர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்தப்படும் இப்பயிற்சியில், இதுவரை 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும், அவர்களது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சுமார் 9 ஆயிரம் நபர்களும் பங்கு கொண்டு பயனடைந்துள்ளனர்.

காவல் ஆளிநர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையே, இப்பயிற்சி பரஸ்பர நல்லுணர்வு மற்றும் பணியிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 511 உதவி ஆய்வாளர்களும், 6 ஆயிரத்து 140 காவல் ஆளிநர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 651 நபர்கள் சீருடைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த காவல்படை

தமிழ்நாடு காவல் துறை நாட்டிலேயே சிறந்த படை என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இதற்குச் சான்றாக, அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை, – சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் – தமிழ்நாடு – என்பதற்காகவும், குறுகிய காலத்தில் இந்த சாதனை செய்ததற்காகவும் தனித்தனியாக 2 விருதுகள் வழங்கியுள்ளது.

சிறந்த மனித வளத்தினையும், தடையில்லா மின்சாரம் மற்றும் வலிமையான உட்கட்டமைப்புகளையும் நமது மாநிலம் கொண்டுள்ளதால், முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கின்றது. நாட்டிலேயே அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டும், தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில் முதலாவது மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

2018–ம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம், முதலீட்டை செய்ய வரும் நிறுவனங்களுக்கு 30 நாட்களுக்குள் ஒற்றைச் சாளர முறையில் அவர்களுக்கு வேண்டிய அனுமதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், 30 நாட்களுக்கு மேலாகும் பட்சத்தில், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் ஷரத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், இது வரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 28 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும், மீதமுள்ளவற்றில், 3 விண்ணப்பங்களுக்கு கூடுதல் விவரங்கள் கோரப்பட்டும், இதர விண்ணப்பங்கள் பரிசீலனையிலும் இருந்து வருகின்றன.

முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு–2015ன் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடு–2019 ஜனவரியில் இம்மாதம் நடைபெற உள்ளது.

27 தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கான முதலீடுகளை செய்வதற்கு இதுவரை அம்மாவின் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் சுமார் 50 ஆயிரத்து 444 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் செய்யவிருப்பதால், சுமார் 50 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

மெட்ரோ ரெயில்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்–1ல் 35 கி.மீ. நீளத்திலான வழித்தடங்களில் பயணிகள் சேவை நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள ஏஜி– டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் முடிவடைந்து விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது. திருவொற்றியூர் –விம்கோ நகர் வரையிலான நீட்டிப்புப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. மக்கள் நலன் கருதி, மெட்ரோ ரயில் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2ல் மாதவரம் முதல் ஓ.எம்.ஆர். சாலை சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் என 3 புதிய வழித்தடப் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோவைக்கும் மெட்ரோ ரெயில்

இந்த கட்டம்–2ல், 52 கி.மீ. நீளத்திலான முன்னுரிமை வழித்தடப் பகுதிகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்குகிறது. இப்பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. கோயம்புத்தூர் நகருக்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அம்மாவின் அரசு, புதிய சுற்றுச்சூழல் கொள்கை, மின் ஆளுமைக் கொள்கை, சூழியல் சுற்றுலாக் கொள்கை, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை, மாநில வனக் கொள்கை, உணவு பதப்படுத்துதல் கொள்கை என பல்வேறு கொள்கைகளை இந்த நிதியாண்டில் வகுத்து, நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீடுகளுக்கு தகுந்த சூழ்நிலைகளை மேம்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வதை எளிதாக்கவும், அதற்கென்று இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில், தனியே ஒரு இணையதள ஒற்றைச் சாளரத் தகவு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் புதிய முதலீடுகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் இசைவு வழங்கப்படுகிறது.

30 நாட்களுக்குள் அனுமதி

இதுவரை 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 230 விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டும், இதர விண்ணப்பங்கள் பரிசீலனையிலும் இருந்து வருகின்றன. இதனால், 15 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டின் ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும் ஒற்றைச் சாளர அமைப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்க உத்தரவிடப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

சுற்றுலாவில் முதலிடம்

‘‘Enchanting Tamilnadu’ என்ற தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தாரக மந்திரம், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும், பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்ததன் காரணமாக, நாட்டிலேயே அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்த முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதனால் தான், இந்தியா டுடே பத்திரிக்கை சுற்றுலாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதும், பழமை வாய்ந்த கோவில்களும், புராதனத் தலங்களும், தமிழ்நாட்டின் கலாச்சாரமும் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாடு திருக்கோயில்கள், வழிபாட்டிற்கு மட்டுமல்ல, கலை மற்றும் கலாச்சாரக் கருவூலங்களாகவும் திகழ்கின்றன. திருக்கோயில்களை பாதுகாக்கும் மகத்தான கடமையை உணர்ந்த அம்மாவின் அரசு திருக்கோயில்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பல்வேறு திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில், சென்ற 2017–18–ம் ஆண்டில் 765 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதே போன்று இந்த ஆண்டும் தொடர்ந்து குடமுழுக்குகள் நடத்தப்படும்.

இவ்வாறு பல்வேறு திருப்பணிகள் செய்து வருவதனாலும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை நமது மாநிலம் அதிக அளவில் ஈர்த்துள்ளது.

6,200 மெகாவாட் மின் திட்டம்

ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்” அதாவது,

தன்னால் முடிந்த இடத்தில் எல்லாம் சிறப்பாகவே செயல்பட வேண்டும். இயலாத இடத்திலும் வேறு வழிகளை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, இருண்ட தமிழகமாக இருந்த நம் மாநிலத்தை, மின்மிகை மாநிலமாக மாற்றியே தீருவேன் என்ற உறுதியோடு செயல்பட்ட புரட்சித் தலைவி அம்மாவால், தமிழ்நாடு இன்று மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து, சிறப்பான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலை தொடர்வதற்கு ஏற்ற வகையில், புரட்சித் தலைவி அம்மா ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இது வரையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் திட்டம், வட சென்னை அனல் மின் திட்டம் நிலை –3, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், உப்பூர் அனல் மின் திட்டம், உடன்குடி அனல் மின் திட்டம் நிலை –1, குந்தா நீரேற்று மின் திட்டம் என மொத்தம் 6,200 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது மட்டுமன்றி, பசுமை எரிசக்தி முயற்சியில் 11,750 மெகாவாட் எரிசக்தி மின் நிறுவு திறனுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண் பெருமக்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, பருவமழை பொய்த்து, மேட்டூர் அணை திறந்துவிட தாமதம் ஏற்படும் போதெல்லாம், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகள் பயன் பெறும் வகையில், குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தொகுப்புத் திட்டத்தை அறிவித்து வருகிறது.

அது மட்டுமன்றி, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டிலே மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2016–17–ம் ஆண்டில் அதிக அளவிலான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றது. அதாவது, கடந்த 2016–17ஆம் ஆண்டில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து 3 ஆயிரத்து 526 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை ஒப்பளிக்கப்பட்டு, வேளாண் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காப்பீட்டு திட்டத்தில் அதிக விவசாயிகள் யபன்

அது போல, 2017–18ஆம் ஆண்டில் ஆயிரத்து 8 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை இது வரை ஒப்பளிக்கப்பட்டு உள்ளது. 2018–19–ம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதல் இந்த ஆண்டு பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பெரிய மற்றும் மிகப்பெரிய உணவுப் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை ஒன்றினை அம்மாவின் அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. இது மட்டுமன்றி, கிராம அளவில் குறிப்பிட்ட விளைபொருட்களுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

உணவு உற்பத்தியில் சாதனை

இவ்வாறான பல்வேறு முயற்சிகளினால், தமிழ்நாடு இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன்னைக் கடந்து சாதனை புரிந்து, இந்திய அரசின் உயர் விருதான கிருஷி கர்மான் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் உணவு வழங்கி வருவது நமது டெல்டா மாவட்டங்கள் தான். அந்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரத்தை பெறுவதற்கு புரட்சித் தலைவி அம்மா காவேரி பிரச்சினையில் நடத்திய சட்டப் போராட்டத்தில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அத்தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இது டெல்டா விவசாயிகளின் நிலம் மட்டுமல்ல, மனதையும் குளிரச் செய்தது என்றால் அது மிகையாகாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, காவேரியில் உள்ள தமிழ்நாட்டின் உரிமை இதன் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணை 4 முறை தன்னுடைய முழு கொள்ளளவினை எட்டியதுடன், 23.4.2018 முதல் 6.9.2018 வரையிலான காலத்தில், 30 நாட்கள் முழு கொள்ளளவிலேயே இருந்துள்ளது. காவேரி நீரினை முறையாக டெல்டா மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்துவதை கண்காணிக்க ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு –அவிநாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நீர்தேக்கங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை –ராஜநேரி தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டம், பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே புதிய நீர்த்தேக்கம் ஆகிய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இது தவிர, பல்வேறு அணைகளில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அணைகளின் கொள்ளளவினை மீளப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏரிகள் மற்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண், விவசாயிகளுக்கு தங்கள் மண் வளத்தினை பெருக்கிக் கொள்ள விலை இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவில், 2018–ம் ஆண்டில் மிக அதிகமாக, அதாவது 30 நாட்கள் காவேரியில் வெள்ள நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, 182 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் அணைக்கட்டின் மதகுகள் சேதமடைந்தன. சேதமடைந்த கொள்ளிடம் கதவணையை 24.8.2018 அன்று சக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

காவேரி ஆற்றில் பாசனத்திற்கான நீர் வெளியேற்றத்தை மீளப்பெற கொள்ளிடம் ஆற்றில் மேலணையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு காவேரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டது. மேலும், புதிய கதவணையின் கட்டுமானத்திற்கு 2 ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், தற்போதுள்ள நீரொழுங்கியினை பலப்படுத்த சுமார் 39 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, 387.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீரொழுங்கி அமைக்கவும் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பணைகள்

மூன்றாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டுவது என 2017–18–ம் ஆண்டு என்னால் அறிவிக்கப்பட்டது. இதில் 2017–18–ம் ஆண்டில் 12 தடுப்பணைகள் 51.51 கோடி ரூபாய் மதிப்பிலும், 2018–19–ம் ஆண்டில் இதுவரை 59 தடுப்பணைகள் 244.89 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவி பெற்று பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களைத் தயாரித்து நீர் வள ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்த, ‘‘தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைத்தல் கழகம்” என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கழகத்திற்கு அரசு முதன்மைச் செயலாளர் நிலையில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரிப்பு

மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு மசோதாவினை மத்திய அரசு திரும்பப் பெற்று தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட உத்தேசித்துள்ள திட்டத்தை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டிற்கான உரிமை நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மேகதாதுவில் அணைகட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அம்மாவின் அரசு கொடுத்த திடமான மற்றும் தொடர் அழுத்தங்களின் காரணமாக, மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல், மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

அம்மாவின் அரசு, முல்லை பெரியாறு மற்றும் மேகதாது ஆகிய பிரச்சனைகளில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டும், சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *