செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி குழு தலைவர்கள்

புதுடெல்லி, டிச.6–

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இதையொட்டி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

நாளை (புதன்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 29–ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் விடுமுறை நாட்கள் தவிர 17 நாட்கள் நடக்கும் தொடரில் 16 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது.

குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய சட்டசபை தேர்தல் முடிவுகள் 8-ந் தேதி வெளியாகின்றன. அதற்கு முந்தைய நாளில், கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் ஆதிர் ரஞ்சன், தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த பிரச்சினைகள் மீது எந்தெந்த கட்சிகள் விவாதம் நடத்துவது என்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளது. பொருளாதாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பொருளாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. முதலில் அதற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தற்போது இந்த இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

போதைப்பொருள் பிடிபடும் சம்பவங்கள், டிரோன் மூலம் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் ஆகியவை நடந்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் பின்னணியில், நாளை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *