சினிமா செய்திகள்

திரிஷாவின் கலைப் பயணத்தில் ஓர் மைல்கல்; அருண் வசீகரனின் உண்மையின் உரைகல்!

அருண் வசீகரன்: ஆக்சன்- அதிரடி மசாலா- ஃபார்முலா திரைக்கதைக்கு இன்னும் ஒரு புதிய வரவு. கோடிகளைக் கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு, முதலுக்கு மோசம் இல்லாமல், ஓரளவு லாபத்தோடு, வித்தியாச படம் கொடுத்தோம் என்ற ஆத்ம திருப்தியை தரும் புதுமை சிந்தனையாளர். இரு கரம் நீட்டி வரவேற்கலாம்!

அடையாறு தரமணி அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டம் பெற்று இயக்கத்தில் பாதை மாறி பயணித்திருக்கும் இளம் படைப்பாளி.

தேசிய நெடுஞ்சாலை NH 44 –ல் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்து விடும் சாலை விபத்துக்கள், உயிர்ச் சேதம்.

அநியாயமாய் தன் ஆசைக் கணவனையும் (சந்தோஷ் பிரதாப்), அன்பு மகனையும் விபத்தில் பறிகொடுக்கும் நாயகி திரிஷா. விபத்து நடந்த இடத்திற்கு அவர் நேரில் போய் பார்க்கும் போது, ஒவ்வொரு விபத்தில் பின்புலத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக உணர்கிறார்.

நெருங்கிய தோழி, போலீஸ் கான்ஸ்டபிள் எம் எஸ் பாஸ்கர் துணையோடு தானே அந்த மர்ம முடிச்சுக்களை என்னதென்று கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் அறிவுப் பூர்வமாக, துணிச்சலோடு!

ஒவ்வொரு விபத்தும் எப்படி நடக்கிறது, அதன் பின்புலத்தில் யார் யார், அவர்களின் நோக்கம் என்ன, விஞ்ஞான பூர்வமாக திட்டமிட்டு கைவரிசை காட்டும் கும்பலின் தலைவன் யார்… இப்படி அடுக்கடுக்கான சந்தேகக் கேள்விகளுக்கு விடை தருகிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

இடைவேளை வரை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். இடைவேளைக்குப் பின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!

“ முன்வரிசை ”நாயகனுக்கான திரைக்கதை, “தி ரோடு’’. அதை நாயகி திரிஷா தோளில் ஏற்றி வித்தியாசப்படுத்தி இருப்பதில் மாற்றி யோசிக்கும் மூளைக்காரன் அருண் வசீகரன் என்பதை உணர வைத்திருக்கிறது, பாராட்டாமல் இருந்தால் எப்படி?

தேசிய நெடுஞ்சாலையே கதையின் மையப் புள்ளி என்பதால்… எந்த ஒரு மொழிக்கும் ஒத்துப்போகும் விதத்தில் “தி ரோடு” என்று பொது தலைப்பை வைத்திருப்பதையும் வரவேற்கலாம்.

அழகில், ஆற்றலில், அமைதியில், அடக்கமாய் நடக்கும் இயற்கை சுபாவத்தில் வசீகரித்து இருப்பார் திரிஷா, ஏ ஏ ஏ சினிமா பிரைவேட் லிமிடெட் கூட்டணிக் கலைஞர்களை. இல்லாவிட்டால் அருண் வசீகரனின் தலைமையில் இளைஞர் பட்டாளம்

“சவுத் குவீன்” என்று ஒரு டைட்டிலை பெயருக்கு முன்னால் திரிஷாவுக்கு சேர்த்திருப்பார்களா? (நூற்றுக்கு நூறு பொருத்தமான டைட்டில் தான், வாழ்த்துக்கள் அருண் வசீகரன்!)

“தி ரோடு” படத்தின் சம்பவங்களை குறிப்பிடாமல் இருந்தால்தான்… அடுத்து… அடுத்து…அடுத்து… என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் கடைசி நிமிடம் வரைக்கும். இல்லாவிட்டால் அந்த ருசிகரமும், எதிர்பார்ப்பும் ‘பொத்’தென்று விழுந்து விடும்.

நாணயத்தின் இரண்டு பக்கம் மாதிரி திரிஷாவும், “சார் பட்டா பரம்பரை” புகழ் டான்சிங் ரோஸ் சபீரும். திரிஷா- பூ, ஒவ்வொரு காட்சியிலும் மலர்ந்து மணம் வீசுகிறார்.

தலை: கதையின் எதிர்மறை நாயகன் சபீர். “ஐயோ பாவம்” என்று இடைவேளைவரை அனுதாபம் வரவழைக்கும் அப்பாவி. அதற்குப் பின்” கொலைகாரப்பாவி…” என்று சொல்ல வைத்திருக்கிறார்.

தலையும் சரி, பூவும் சரி- எந்த ஒரு ஃபிரேமிலாவது நடித்ததாக தெரிந்ததா? அதுதான் வெற்றி கலைஞர்களுக்கு. திரிஷாவையும், சபீரையும் எதார்த்த நடிப்பில் நடக்க விட்ட பெருமைக்குரியவர் அருண் வசீகரன்.

சந்தோஷ் பிரதாப் : கூட இருந்தே குழி பறிக்கும் நயவஞ்சகன், வேலா ராமமூர்த்தி- குடும்பத்தில் இரண்டாம் தாரத்தின் மகனுக்காகவே வாழ்க்கையை தொலைக்கும் தந்தை, நாயகியோடு துப்பு துலக்குவதில் தோள் கொடுக்கும் எம் எஸ் பாஸ்கர்,

நடுக்காட்டி முழங்கால் வரை புடவையை இழுத்து, இரு கால்களுக்கும் நடுவில் இடுக்கி வைத்துக் கொண்டு, தன் கூட்டத்தில் லாயக்கற்ற ஒரு அடியாளை வயிற்றில் எட்டி உதைத்து, கொடூரமாக தீர்த்துக்கட்டும் அந்தக் கருமை நிறப்பொம்பளை( பயமுறுத்தும் வில்லி)…

இப்படி காமிரா முன் நிறுத்தி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அசை போட வைத்திருக்கும் சாமர்த்தியம் அருண் வசீகரனுக்கு! திரை மறைவில் கைகோர்த்து இருக்கும் உதவி- துணை -இணை இயக்குனர் பட்டாளத்திற்கும்” ஜே ”போடலாம்!

மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவம்- “தி ரோடு” படத்துக்கு உந்துவிசை என்று வாக்குமூலம் தந்திருக்கிறார் அருண் வசீகரன். அது படத்தை இன்னும் சற்று உயர்த்தி பிடித்து இருக்கிறது, அதுவே ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷ், இசையமைப்பாளர் சாம் சி எஸ்: இரு வல்லவர்கள். “தி ரோட்டில்’’ அருண் வசீகரன் தலை தெறிக்கும் வேகத்தில் ஓட்டி இருக்கும் இந்த சொகுசு காரின் ஆக்சிலேட்டர் ஒருவர் என்றால் இன்னொருவர் கிளட்ச். விபத்து இல்லாமல் (கையை கடிக்கும் நஷ்டம் வராமல்) சொகுசுப் பயணம். தயாரிப்பாளர் உயிர் பிழைத்திருக்கிறார்.

ஆரம்பக் காட்சியிலேயே உட்கார வைத்திருக்கிறார்கள். இறுதிக் காட்சியிலோ கைதட்ட வைத்திருக்கிறார்கள்.

(சினிமாடிக் லைசென்சைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பதால் அங்கங்கே ஒரு சில காட்சிகளில் குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் தவிர்ப்பது ஆரோக்கியம்)

இனிமேல், இரவுப் பயணமா …அதுவும் தேசிய நெடுஞ்சாலையில். காரில் பயணிக்க ஆயத்தமாகும் நேரம் குலை நடுங்கும்,“தி ரோடு” பார்த்திருக்கும் அந்தத் திரில் அனுபவத்தில்.

பொழுதுபோக்கும் சித்திரம் தான் என்றாலும் நினைக்கும் அந்த ஒரு நிமிடத்திற்கு உலுக்கி இருக்கிறார் இயக்குனர்.

கோலிவுட் வட்டாரத்தில்

அருண் வசீகரன்

போட்டிருக்கும்

உண்மையின் உரைகல்

“தி ரோடு” :

“சவுத் குவீன்” திரிஷாவின்

கலைப் பயணத்தில்

ஓர் மைல் கல்!


வீ. ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *