செய்திகள்

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் பஸ்கள் உரிய முறையில் பராமரிப்பு

Spread the love

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் பஸ்கள் உரிய முறையில் பராமரிப்பு

மேலாண் இயக்குனர் கோ.கணேசன் தகவல்

சென்னை, ஏப்.7–

சென்னையில் 33 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் பஸ்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்டையில், மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றி வரும், அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200–க்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்த 25.3.2020 முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

பராமரிப்பு

இந்நிலையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 33 பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

* கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பேருந்துகளும் உரிய கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* அனைத்துப் பணிமனைகள், தொழிற்கூடங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் உள்ள அறைகள் அனைத்தும் நாள்தோறும் உரிய கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

* அனைத்துப் பேருந்துகளுக்கும் தேவையான என்ஜின் ஆயில் லெவல், ரேடியேட்டர் கூலன்ட் லெவல், ஏர் லீக், டயர்கள் மற்றும் மின்கலன்கள் ஆகியன நாள்தோறும் உரிய தொழில்நுட்பப் பணியாளர்களால் பரிசோதிக்கப்படுகின்றன.

கிருமிநாசினி தெளிப்பு

* மேற்கண்ட இப்பணிகளை கண்காணிக்க பொது மேலாளர், துணை மேலாளர்கள், மற்றும் கிளை அலுவலர்கள் ஆகியோர் பணி நேரம் (ஷிப்ட்) அடிப்படையில் அனைத்துப் பணிமனைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* மேலும், அத்தியாசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற 200–க்கும் மேற்பட்ட பேருந்துகளும் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் அனுமதியும் வழங்கப்பட்ட பின்னரே தடத்தில் இயங்கிட அனுமதிக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை இயக்கிடும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய முகக்கவசங்களும், கிருமி நாசினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

* இத்தகைய பராமரிப்புப் பணிகள் அனைத்தும் உரிய அலுவலர்களின் மேற்பார்வையில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *