செய்திகள்

பட்டா பிரச்சினைக்கு தீர்வு- மக்களைத் தேடித்தேடிச் செல்லும் திட்டங்கள்: ஸ்டாலினின் நல்லாட்சி பாரீர்!!


நாடும் நடப்பும்


குடியிருப்பதற்கு சிறு இடம் என்பது மனிதர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது. நகரம், ஊரகப் பகுதி என்றில்லாமல் அனைத்து பகுதிவாழ் மக்களின் உள்ளக்கிடக்கை இது என்றே சொல்லலாம். அப்படியாக வாங்கிய இடத்துக்கு பட்டா வாங்குவது அதில் சிக்கல் இல்லாமல் இருப்பது என்பதெல்லாம் இடம் வாங்குவதை விட பெரிய சவால் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேபோல் பல ஆண்டுகளாக உழவுத் தொழில் செய்து வரும் வேளாண் குடி மக்களின் நிலத்துக்கு பட்டாவே இருக்காது அல்லது பட்டாக்களில் தீர்க்கப்படாத பல்வேறு சிக்கல்கள் இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த நிலம் மாறாத வரையில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. ஒரு தலைமுறை மாறி, அடுத்தடுத்த தலைமுறைகள் அந்த நிலத்தை சொந்தம் கொள்ளும்போதுதான், பட்டாக்களின் அவசியம் புரியும். அப்படி பட்டா சிக்கல்களை தீர்க்க முடிவெடுத்து, வருவாய் துறைக்கு நடையாய் நடக்கும் போதுதான், பட்டா வாங்குவதும் அதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பது என்பதும் எத்தனை பெரிய வேலை என்பதும் விளங்கும்.

மக்களை நாடும் திட்டம்

இதற்கெல்லாம் முடிவுகட்டும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்ளபடியே பட்டா தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு தரும் அருமையான திட்டம் என்று சொல்லலாம்.

புதிதாக அமைந்த தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களைத் தேடி குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காண்பதில் மிகுந்த அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காலத்திலேயே, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்படி மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று அதனை தனிப் பெட்டிகளில் வைத்து மக்களிடம் அதற்கு ரசீதும் வழங்கினார். ஆட்சிக்கு வந்ததும் அந்த மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கைக்கு தனித் துறையையே அமைத்து, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்று பெயர் சூட்டி, மக்களிடம் பெற்ற பல ஆயிரம் மனுக்களுக்கு சில மாதங்களில் தீர்வு கண்டார்.

அதேபோல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், முதியோர்களுக்கு இல்லங்களிலேயே தடுப்பூசி போடும் திட்டம் என மக்களின் சிரமங்களை அறிந்து அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவான சிந்தனையோடும் அக்கறையோடும் இருக்கிறார். அந்த வரிசையில் மற்றொரு முக்கிய திட்டமாக மக்களைத் தேடிச்சென்று பட்டா பிரச்சினைக்கு தீர்வு தரும் புதிய திட்டத்தின் அரசாணையை தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது.

வாரம் 2 நாள் முகாம்

அதன்படி, விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்துக்கு 2 நாளில் இரண்டு வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கான பட்டியலை கலெக்டர்கள் தயாரிக்க வேண்டும். தாலுகாக்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்களை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி, 2022–ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் அனைத்து ஊராட்சி மக்களும் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முகாம்களில் நிலத்தின் சர்வே எண், துணை கோட்ட எண்ணில் தவறான பதிவுகளை நீக்குதல், நீட்டிக்கப்பட்ட திருத்தம், பட்டாதாரரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் தந்தை பெயர், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்திகளில் திருத்தம், பட்டாதாரரின் பகுதி, பெயர் அருகே உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பதை திருத்துதல் உள்ளிட்ட சிறிய அளவிலான பிழைகள் திருத்தம் செய்யப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சிக்கு அடையாளம்

மேலும் இந்த சிறப்பு முகாம்களை கலெக்டர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். மாவட்ட வருவாய் அதிகாரிகள், சிறப்பு முகாம்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதில் இருந்தே பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தமிழ்நாடு அரசின் அக்கறையும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் விளங்குகிறது.

இதன் மூலம் ஒரு நல்லாட்சிக்கான அடையாளங்களை, பார்த்துப் பார்த்து செய்து வரும் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதையேதான் அண்மையில் எடுக்கப்பட்ட “சிஎன்ஓஎஸ் ஒப்பீனியன்” அமைப்பு எடுத்த சர்வே முடிவும் தெரிவித்தது. அதன்படி இந்திய நாட்டிலேயே பொதுமக்களின் செல்வாக்கை பெற்ற சிறந்த ஐந்து முதலமைச்சர்களில் மு.க. ஸ்டாலின் முதலிடத்தை பெற்றுள்ளார். மக்கள் நலன் நாடி, மக்கள் கேட்காமலேயே செய்துதரும் தமிழ்நாடு முதலமைச்சரின் அக்கறையையே இந்த ஆய்வும் வெளிப்படுத்தி இருக்கிறது என்று கொள்ளலாம்.

மக்களைத் தேடித்தேடிச் சென்று மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி பாரீர்!!

அதன் சிறப்பை மனதாரப் பாராட்டுவோம் வாரீர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *