சிறுகதை

படப்பிடிப்பு – ராஜா செல்லமுத்து

ஆனந்தன் இப்போது ஒரு பெரிய இயக்குனர் .

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் என்ற அளவிற்கு அவனுடைய உழைப்பு அவனை உயரத்திற்கு கொண்டு சென்றது . அவன் கால்சீட் கேட்டால் எந்த நடிகர்களும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அந்த அளவிற்கு அவன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமா வரை வளர்ந்திருந்தான்.

ஆனால் அவன் கடந்து வந்த பாதைகள் கரடு முரடான முட்கள் நிறைந்தது. வறுமையின் பிடியிலிருந்து தான் அவன் இந்த வாழ்க்கையை தொடங்கியிருந்தான்.

இன்று படோடோபம், வசதி வாய்ப்புகள் பெயர், புகழ், பெருமை பணம் எல்லாம் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையின் ஆரம்பம் – அடித்தளம் ஏழ்மையில் இருந்து தான் எழுந்தது என்பது அவன் மனதில் எப்போதும் இருக்கும் . அதனால்தான் அவன் எப்போதும் எளிமையை மட்டுமே கடைபிடித்தான். ஆடம்பரத்தை அவன் அண்ட விடுவதில்லை.

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவனது சினிமா வாழ்க்கையில் அவனுடைய புதுப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியிருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்தும் போது அவனுடைய எண்ணம் எங்கோ சென்றது .

நீண்ட நேரம் யோசித்துப் பார்த்த பிறகு பல ஆண்டுகளுக்கு முன்னால் அவன் அங்கே தங்கியிருந்து ஞாபகத்திற்கு வந்தது .

ஆனந்தன், விஜயன் இரண்டு பேரும் ஒரே அறையில் வறுமையின் பிடியில் சிக்கி தத்தளித்து எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அவன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது, விஜயன் ஆனந்த் இருவரும் சாப்பாட்டுக்குக் கூட வெறும் கஞ்சிக்குக் கூட பட்ட கஷ்டங்கள் அவமானங்கள், வெட்கம் அத்தனையும் நினைவில் வந்து போயின.

அந்தப் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் அதே வீதியில் தான் ஒரு வேளை உணவிற்காக அவன் கஷ்டப்பட்டது தெரிந்தது.

இன்று அவன் படப்பிடிப்பு தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் உணவருந்திக் கொண்டு இருந்தார்கள். இதெல்லாம் அவன் கண்முன்னால் வந்து வந்து சென்றன . இந்த இடத்தில்தான் விஜயனும் ஆனந்தனும் இருந்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் விஜயன் தன்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டான். ஏன் என்பது தெரியவில்லை . அவன் ஒரு நடிகனாக வேண்டும் என்ற லட்சியத்தில் தான் இருந்தான். அதில் ஜெயித்தானா?. இல்லையா என்பது தெரியவில்லை .

அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை . இப்போது எங்கே இருக்கிறான் ? என்ன செய்கிறான்? அவன் லட்சியம் என்ன ஆயிற்று ? என்பதெல்லாம் ஆனந்தனுக்கு தெரியாது . ஒருவேளை நடித்திருந்தால் பிரபலமாக இருக்கலாம். அவன் ஆசை, எண்ணம், லட்சியம் எல்லாம் உறைந்து போய் விட்டதா ? என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது

அங்கே ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அவனுடைய காட்சிக்கு அது தேவைப்பட்டது.தன்னுடைய ஒளிப்பதிவாளரிடம் அதை அப்படியே பேன் செய்து அந்த பிணத்தை படம்பிடிக்க செய்தான்.

அந்த ஒரு இடத்தை ஒளிப்பதிவாளரும் படம் பிடித்தான் .

அப்போதுதான் கேட்டான் ஆனந்த்

யார் இறந்ததென்று? அங்கே இருந்த ஒருவர் சொன்னார் .

இறந்தவர் பேரு விஜயன். ரொம்ப வருஷமா இங்கதான் இருக்கார். சினிமா சினிமா அப்படி அலைந்து கொண்டிருந்த மனுஷன் நிக்கமுடியல. ஒரு கட்டத்தில் வறுமை முத்தி போய் சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்டு வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் இறந்துட்டாரு. அவருடைய ஊர்வலம் தான் போயிட்டு இருக்கு. அவருக்கு தெரிந்த நண்பர்கள் கொஞ்சம் பணம் போட்டு இந்த இறுதி ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற போது ஆனந்தனுக்கு சுருக்கென்று வலித்தது . வாய்விட்டு அழுதான்.

அத்தனை பேரும் திரும்பி பார்த்தார்கள். விஜயன் தன் நண்பன் நடிப்பதற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். அதில் அவனால் வெற்றிபெற முடியவில்லை. நான் இயக்குனராகிவிட்டேன். அவன் தன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தெரிந்தது.

அத்தனை செலவையும் ஆனந்தன் எடுத்துக் கொண்டான்.

ஆனால் அவன் அடிமனதில் ஒரு சந்தோசம் இருந்தது. ஆனந்தன் இவ்வளவு காலமாக நடிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவனது லட்சியம் நிறைவேறவில்லை .அவன் இறுதி ஊர்வலத்தில் அது நிறைவேறி இருக்கிறது .அதுவும் என் மூலமாக.

நண்பனின் மூலமாக என்று அவன் நினைத்த போது அவன் பெருமிதம் கொண்டான்.

அவனின் ஆசை கடைசி ஆசையாக நிறைவேறியது.

ஆனந்தனுக்கு அப்படி ஒரு சந்தோசம். அந்த படப்பிடிப்பில் தத்துரூபமாக இருந்ததான் ஆனந்தன். அழுதுக்கொண்டே அவனும் ஊர்வலத்தின் பின்னே நடந்து கொண்டிருந்தான். ‘

விஜயனின் ஆசை, லட்சியம் அவன் இல்லாதபோது நிகழ்ந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *