சினிமா செய்திகள்

படத்தயாரிப்பாளர் * கதை – வசனகர்த்தா * பாடலாசிரியர் அமரர் பஞ்சு அருணாசலம் 80வது பிறந்த நாள்

ஆகஸ்ட் மாதம் சென்னையில் நட்சத்திரத் திருவிழா; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

பஞ்சு சுப்பு, விக்னேஷ், அரவிந்த் ஏற்பாடு

சென்னை, ஜூன்.13–

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் – இருவரின் கலைப் பயணத்தில் வணிக ரீதியிலான படங்களின் அபாரமான வெற்றிக்கு அச்சாணியாக இருந்திருக்கும் பிரபல பட அதிபர் – கதை வசனகர்த்தா – பாடலாசிரியர் – இயக்குனர் என்று பன்முகம் காட்டியிருப்பவர் மறைந்த பஞ்சு அருணாசலம். இவரது மகன் நடிகர் – தயாரிப்பாளர் சுப்பு பஞ்சுவும், பிளாக் ஷீப் நிறுவனத்தின் விக்னேஷ் – அரவிந்த் இரட்டையர்களும் இணைந்து சென்னையில் பஞ்சு அருணாசலத்தின் 80வது பிறந்த நாள் விழாவை மிகப்பெரிய அளவில் ஆகஸ்ட் மாதம் கொண்டாட இருக்கிறார்கள்.

இதையொட்டி விழாவுக்கான ‘லோகோ’வை அண்ணாசாலையில் உள்ள ‘பார்க்’ நட்சத்திர ஓட்டலில் தமிழ் சினிமா பிபலங்களுக்கு நடுவில் அறிமுகப்படுத்தினார்கள்.

பத்திரிகையாளராக இருந்து சினிமாவில் பஞ்சு பிரபலமானார் என்பதால், அவரது நினைவாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் இருந்து வரும் மூத்தவர்கள் ‘கலைப்பூங்கா’ டி.என்.ராவணன், தேவி மணி, ஜெயச்சந்திரன், தேவராஜ் ஆகியோருக்கு பாராட்டுப் பத்திரம், வெள்ளிப் பதக்கம் அணிவித்து கவுரவித்தனர்.

ஒவ்வொரு பத்திரிகையாளரின் அனுபவம் குறித்து ஒரு நிமிடம் ஓடும் ஒளி – ஒலிக் காட்சியை தயாரித்திருந்ததும், திரை ‘மை’யாளர் இவர் என்று விழாவுக்கு வந்த அனைத்துப் பத்திரிகையாளரையும் தனித்தனியாகப் படம் எடுத்து, அப்படத்தை விழா முடிவதற்குள் கொடுத்ததும் விக்னேஷ் – அரவிந்த் கூட்டணயின் செயல்பாடு – திறமையைப் பலரும் பாராட்டினர்.

72 ஆண்டுகளாய் இன்றும் எழுதிக் கொண்டிருக்கும் 90 வயது பத்திரிகையாளர் ‘கலைப்பூங்கா’ டி.என்.ராவணனின் அனுபவத்தை பாராட்டி அனைத்து முக்கிய பிரமுகர்களும் எழுந்து நின்று அவரின் சாதனைக்கு கை தட்டி பாராட்டி சிறப்பித்தனர்.பாரதிராஜா, இசையமைப்பாளர், பாடலாசிரியர் கங்கை அமரன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா லட்சுமணன், டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு விநியோகஸ்தர சங்கத் தலைவர் அன்புச் செழியன், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம், ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சினிமா ஆய்வறிஞர் – தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் சுரேஷ் காமாட்சி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கார், காட்ரகாட் பிரசாத், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று விழா சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான ‘‘A CREATOR WITH MIDAS TOUCH’’ என்னும் படத்தின் இயக்குநர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர்களான லலிதா ஜெயானந்த், உமாமகேசுவரி சத்யகுமார் ஆகியோரும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியை ப்ளாக் ஷிப் விக்னேஷ், அரவிந்த் தொகுத்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.