நாடும் நடப்பும்

பசுமை மய மின்உற்பத்தி: இந்தியாவை பாராட்டும் ஜி–7 நாடுகள்


ஆர். முத்துக்குமார்


சமீபமாக சர்வதேச அமைப்பு மாநாடுகளில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமையே. குவாத், பிரிக்ஸ், எஸ்.சி.ஓ. போன்ற பல்வேறு அமைப்புகளில் இந்தியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்கிறது.

மேலும் கிளாஸ்கோ நகரில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்தியாவின் கருத்துக்கு மதிப்பு தந்து இறுதி அறிக்கையை சில மணி நேரம் தள்ளி வைத்துவிட்டே, எல்லா நாடுகளும் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியது.

அதிகாரத்துடன் பொறுப்பு வருவதை மறந்து விடக்கூடாது. அதிகாரத்தைக் கொண்டு ஆட்டி படைக்கலாம் என்பது வெறும் கானல் நீராகும்! பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்ற உறுதியை பெற்றவர்களுக்கே அதிகாரம் கூடுகிறது.

இன்று உலக நாடுகள் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு கருத்துக்களை சற்றே அச்சத்துடன் உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் பணக்கார நாடுகள் சிறிய நாடுகளை ‘பகடை காய்களாக’ உபயோகித்து தங்களது வளர்ச்சிகளை உருவாக்கி கொள்வார்கள்.

பெருவாரியான சிறிய நாடுகள் இன்று இந்தியாவின் முடிவுகளை எதிர்பார்த்து அதன் அடிச்சுவட்டில் செயல்பட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜி 7 அமைப்பு அதாவது கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கொண்ட அமைப்பு ஜெர்மனியின் தலைமையில் இவ்வாண்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது.

பெரிய நாடுகள் சிறிய நாடுகளுக்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கிளாஸ்கோ மாநாட்டு தீர்மானத்தில் அறிவுரை செய்யப்பட்டு உள்ளது.

இந்த 7 நாடுகளும் தன்னிச்சையாக தங்களது வலிமையை உபயோகித்து பிற நாடுகளின் சுமையை பற்றி கவலையின்றி முடிவு எடுக்கும் நிலை இருந்தாலும் இந்தியாவின் எதிர்ப்பு எழுமே? என்ற அச்சக் கேள்வியால் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா விரும்புவது கரிமக் கரும்புகை வெளியேற்றத்தை படிப்படியாக குறைப்பது அதற்கு உலக நாடுகள் இதர நாடுகளுக்கு உரிய உதவிகளை செய்ய தயங்க கூடாது.

இதை தற்போது ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும் ஜி 7 மாநாட்டில் மிக தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. அதில் இந்தியா ஏற்படுது்தி உள்ள Solar Alliance, மற்றும் மாசு தூசுயில்லா மின்சார உற்பத்தியில் சாதித்து வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும் விவாதித்துள்ளனர்.

நமது கூடங்குளம் அணுமின்நிலையம் பாதுகாப்பான அதிநவீன தொழில்நுட்பத்தால் இயங்கிக் கொண்டிருப்பதுடன் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்தும் வருகிறது. அதற்கு நமது ரஷ்யாவுடனான நட்புக்கு நன்றி கடமைப்பட்டு இருக்கிறோம்.

தற்சமயம் ரஷ்யா பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தாலும் நமது அணு மின் உற்பத்திக்கு தேவையான அணு எரிபொருள் தருவதில் எந்த காலதாமதங்கள் இன்றி தொடர்கிறது.

அது மட்டுமா? கடந்த வாரம் உயர்தர TVS–2M ரக அணு எரிபொருளை தரத் துவங்கி விட்டது?

இதனால் என்ன பயன்? கூடங்குளத்தில் இருக்கும் UVER-1000 அணு மின் உற்பத்தி இயந்திரம் இனி அதே உற்பத்திச் செலவில் கூடுதலாக 8 சதவிகிதம் அதிக மின்சாரத்தை தருமாம்.

மேலும் இதன் விலை மிகக் குறைவாகும். மொத்தத்தில் ரஷ்யா தந்த தொழில் நுட்பத்தால் நாடே மின்சார பற்றாக்குறையின்றி செயல்படுகிறது. மேலும் மலிவான விலையில் கிடைப்பதால் இதுபோன்ற மேலும் ஒரு அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டம் பற்றி யோசிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.

மொத்தத்தில் பசுமை மய மின்சார உற்பத்தியில் அணு மின் மற்றும் சோலார் மின் உற்பத்திகளில் முன்மாதிரி நாடாக இந்தியா உயர்ந்து உலக பணக்கார நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவே உயர்ந்து விட்டோம்.

Leave a Reply

Your email address will not be published.