நாடும் நடப்பும்

பங்கு மார்க்கெட்டில் எழுச்சி தரும் பொருளாதார வளர்ச்சிகள்


ஆர். முத்துக்குமார்


பங்கு முதலீடுகளுக்கு இது உரிய நேரமா? இந்தக் கேள்விக்கு பதில் தேடுவது, பல ஆண்டுகளாகவே நம்மில் பலருக்கு இருக்கும் சந்தேகக் கேள்வியாகும்! இப்படி கேட்டுக் கொண்டிருக்கையில் கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீடு 58,000 புள்ளிகளை தாண்டி 58,700 என்று சற்றே சறுக்கி இன்றும் 58,200 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

விரைவில் 60,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்று நிபுணர்கள் கூற ஆரம்பித்து விட்டாலும் இந்த புது உச்சத்தில் பங்கு முதலீடுகள் செய்வது நல்லதா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

‘‘ரிஸ்க்’’ எடுக்கும் முதலீட்டாளர்கள் அன்றாட ஏற்ற இறக்கங்களை மனதில் கொண்டு வர்த்தகம் புரிகிறார்கள். நம்மிடம் இருக்கும் கையிருப்பை முதலீடுகள் செய்யும் முன் நன்கு யோசித்து முதலீடு செய்வதே உரிய லாபம் தரும்.

பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை பாரபட்சமின்றி பார்த்து, அலசி ஆராய்ந்து விட்டு முதலீடு செய்ய முன் வருபவர்கள் கையை சுட்டுக்கொள்ள மாட்டார்கள்.

காரணம் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்திலும் நமது பொருளாதாரம் ஓரளவு சமாளித்து விட்டது.

பொருளாதார வளர்ச்சி குறியீடுகளும் சாதகமாகவே இருக்கிறது. வங்கி வட்டி விகிதமும் கடந்த ஒரு வருடமாகவே குறைந்தும் இருக்கிறது.

சாமானியன் எதிர்பார்ப்பது வைப்பு தொகைக்கு அதிக வட்டி, ஆனால் அதற்கான சாத்தியக்கூறு அறவே கிடையாது. மேலும் கடன் வட்டிகளின் சதவிகிதமும் மிக குறைவாகவே இருக்கிறது. 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி கவர்னர் சக மூத்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே அடுத்த ஏற்றம் பற்றி முடிவெடுக்கிறார்கள். ஆனால் இம்முறையும் வட்டி விகிதம் ஏற்றப்பட வில்லை. இப்படி ஸ்திரமாக பல மாதங்களாக வைத்திருப்பது நல்ல செய்தி தான்.

இந்த ‘இரு மாதம் ஒரு முறை’ சக மூத்த அறிவாளிகளை கலந்தாலோசித்தப் பிறகே வட்டி விகித மாற்ற நடவடிக்கைகள் இருக்கும்.

இந்த 2 மாத இடைவெளிக்கு முன்பே திடீரென வட்டி விகிதம் உயரத்தில் இருக்காது என்றும் வங்கி கவர்னர் சுட்டிக்காட்டி வட்டி உயர்வு இருக்காது என்று உத்தரவாதம் தந்தும் இருக்கிறார்.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார்.

இதற்கு பொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு, உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பு, வழக்கமான மற்றும் தொடர்பு ரீதியான சேவை துறை தொய்வு ஆகியவை காரணிகளாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தின் இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் மிகச் சிறிய அளவில் நிகர வளர்ச்சி தெரிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது 2019–-20-ல் எட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் 2021–-22-ல் சற்று அதிகமாக இருக்கும்.

கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு வளர்ச்சியை எட்டுவது அதை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தக்க வைத்துக் கொள்வது ஆகியவைதான் பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்த சூழலில் இத்தகைய வளர்ச்சி பாராட்டக்குரியது என்றார்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 24.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக கடினமான காலக்கட்டத்திலும் நமது பொருளாதாரம் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது கடந்த 10 மாதங்களில் நமது பங்குச் சந்தை குறியீடு10 ஆயிரம் புள்ளிகள் உயர காரணம் புரிகிறது.

உலக முதலீட்டாளர்களின் பார்வையில் நமது பொருளாதார வளர்ச்சிகளின் சிறப்பை கண்டு வியந்தே முதலீடுகளை அதிகரித்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் பங்கு விலைகள் ஏற்றம் எதிர்பார்க்கப்படுவது சரிதான். ஆனால் திடீர் இறக்கமும் ஏற்படும் அபாயமும் இருக்கிறது! உச்சத்தில் இருந்து கீழே விழும் போது தலை தப்புமா? என்ற பயமும் எழுகிறது.

ஆகவே முதலீடுகள் செய்ய நிபுணத்துவம் கொண்ட ஆலோசனைகள் மிக அவசியமாகுகிறது. அந்த வகையில் மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது நிச்சயம் லாபகரமானது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *