சிறுகதை

பக்கத்து வீடு– ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களாகப் பூட்டிக் கிடந்தது பக்கத்து வீடு. அந்த வீட்டிற்கு யாரும் வருவதாகத் தெரிவதில்லை. வருவார்கள்…. பார்ப்பார்கள்…. சென்று விடுவார்கள். பக்கத்து வீட்டுக்கு அருகில் இருந்த எனக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும். யாரும் பேசவில்லை என்றாலும் கூட முகம் பார்த்துக் கொள்ளலாம். மனிதர்களோடு மனிதர்களாக இருக்கும் ஒரு சௌகரியம் இருக்கும் என்று என் மனதில் பட்டது..

ஆனால் அருகில் இருக்கும் வீட்டுக்கு யாரும் வருவதாகத் தெரியவில்லை. பூட்டியே கிடந்தது தரைத்தளம். முதல் மாடி என்று இரண்டும் ஆளரவமற்று பூட்டியே கிடந்தது. ஒவ்வொரு நாளும் வாசல் திறக்கும் போதெல்லாம் யாராவது வர மாட்டார்களா? என்று மனது ஏங்கும். அப்படி யாரும் வரவில்லை.

ஒருநாள் திடீரென்று ஓர் அதிகாலை அருகிருக்கும் வீட்டில் தண்ணீர், பாத்திரம் துலக்குவது போன்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. விழித்துப் பார்த்தபோது அங்கே மங்களகரமான ஒரு பெண் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தாள். அந்த அம்மாவைப் பார்க்கும் போது இரு கைகளையும் எடுத்துக் கும்பிடத் தோன்றியது.

அந்த அம்மாவிற்கு உதவியாக அந்த அம்மாவின் கணவர் ராஜேந்திரன் உதவி செய்து கொண்டிருந்தார். முதலில் பார்ப்பதற்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை. பின்னர் புரிந்தது… கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்கு புலப்பட்டது.

மனைவி துவைக்கும் போது கணவன் அலசிக் கொண்டிருந்தார் . மனைவி பாத்திரம் துலக்கும் போது ராஜேந்திரன் அதைக் கழுவி எடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் சந்திப்பிலேயே பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. அவர்களும் என்னுடன் பேசவில்லை. பரஸ்பரம் கொஞ்சம் தள்ளி இருந்தது. ஒரு நாள், இரண்டு நாள் கூப்பிடும் தூரத்தில் பார்க்கும் பார்வையில் இருக்கும் மனிதர்களிடம் பேசாமல் இருப்பது எப்படி?

இந்த சென்னை மனிதர்களை அப்படித்தான் பழகி வைத்திருக்கிறது. ஆனால் நான் அப்படியல்ல. கிராமத்திலிருந்து வந்தவன். கிராமத்தின் தொப்புள் கொடி அறுத்தவன். மண்ணோடும் மக்களோடும் சொந்தங்களோடும் உறவுகளோடும் உறவாடி வந்த எனக்கு மனிதர்கள் அந்நியமாய் படவில்லை .

நான் ராஜேந்திரன் சாரை அழைத்தேன். ‘சார் உங்க பெயர் என்ன?’ கேட்டேன்.

ராஜேந்திரன்……

ஊர் சார்?

ஸ்ரீரங்கம்

நீங்க?

என் பெயர் சொன்னேன் .

என்ன பண்றீங்க? என்று கேட்டார்.

என் தொழிலையும் சொன்னேன்.

ராஜேந்திரன் சார் சொன்னார் தம்பி நான் ஸ்ரீரங்கத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவன். எனக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. ரெண்டு பேர் இருக்காங்க என்று அவர் சொன்ன போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

என்னது தலைமையாசிரியரா? அவன் அவன் சின்ன வேலை செய்தாலே தலைக்கனம் பிடித்து அலையும் இந்த உலகத்தில் ஒரு தலைமையாசிரியர் தன் மனைவி குழந்தைகள் துணிகளை துவைத்து காயப் போடுகிறார். வீட்டு வேலைகள் செய்கிறார். இவர் சராசரி மனிதர்களை விட சற்று உயர்ந்தவர் என்று நினைக்கத் தோன்றியது .

அது முதலில் அவரைப் பார்த்ததால் எனக்கு நல்லெண்ணம் மேலோங்கி நின்றது. காலையில் நடைப்பயிற்சி செய்யும் போதும் மாலையில் மாடியில் நடைப்பயிற்சி செய்யும் போதும் அவருடன் பேசுவதும் பழகுவதும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாகப்பட்டது.

கிராமத்தின் தொப்புள் கொடி அறுத்து இந்த நகர வீதியில் அலைந்து கொண்டிருக்கும் எனக்கு ராஜேந்திரன் சாரின் நட்பு இன்பமாக இருந்தது. நன்றாக இருந்தது.

நான் குடியிருக்கும் இரண்டாவது மாடியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். நான் கேட்காமலே அவர் வீட்டிலிருந்து தண்ணீர் தருவார். இல்லை என்றால் 39 படிகளையும் ஏறித்தான் நான் கீழ் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டும்.

8 குடம் என்று வைத்துக் கொண்டால் 39×8 கிட்டத்தட்ட 300 படிகள் நான் நடந்தால்தான் 8 குடம் தண்ணீர் பிடிக்க முடியும். அந்த ஈரம் நிறைந்த மனிதன் எனக்கு தண்ணீர் கொடுப்பார். என் பாதங்கள், என் கால்கள் அவரால் கொஞ்சம் சவுகரியம் கண்டன.

அவர் அருகில் இருக்கும் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால் அவ்வளவு அந்நியோன்னியம். அவ்வளவு அன்பு. அவ்வளவு பாசம். நான் கேட்காமலே என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு போக வேண்டும் என்ற பண்பு, பாசம் அவரிடம் துளிர் விட்டிருந்தது.

காலை-மாலை இடைப்பட்ட வேளை எனக்கு நரகமாகக் கழிந்தது. அவர் மாடிக்கு வரும் போது நல்ல விஷயங்களைப் பேசுவார். சில நல்ல விஷயங்களை சொல்லுவார். தலைமையாசிரியர் தமிழ் படித்தவர் என்பதால் அவருடன் பேசுவது எனக்கு ரொம்பவே இனிப்பாக இருந்தது.

அவர் சொல்லில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நான் சிறுகதை எழுதுவதற்கான கருவாக அமைந்தது. அவருடன் உறவாடும் போது நல்ல நல்ல விஷயங்களைச் சொல்லுவார். என் அடி மனதில் அதை பதியம் போட்டுக் கொள்வேன். என் மனதிற்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இவ்வளவு நாள் இந்த சென்னை வாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ் படித்த ஒரு தலைமையாசிரியர் நமக்கு நண்பனாக வாய்த்திருப்பது பெரிய பொக்கிஷம். பெரிய பாக்கியம் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவர் சொல்லுவார், ‘தம்பி நான் ஸ்ரீரங்கத்தை விட்டு வந்ததில் இருந்து ஒரே பிரச்சனை, நோய். இங்கே வந்து ஒன்பது மாசம் ஆச்சு. என்னுடைய பையனுக்காகத் தான் வந்தேன். இங்கே வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா என்னுடைய உடல்நிலை சரியில்லாம போச்சு.

வந்த ஒன்பது மாசத்துல 9 ஆயிரம் தடவை ஆஸ்பத்திரிக்குப் போய் இருப்பேன். நிறைய செலவழிஞ்சு போச்சு. மனசு, உடம்பு ஒத்துக்கல தம்பி. தினமும் ஏதாவது ஒரு வியாதி. தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை. சரியான தூக்கம் இல்லை. மனசு ரொம்ப குழப்பமா இருக்கு. நான் திரும்பவும் எங்க ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்’ என்ற போது எனக்கு தூக்கி வாரி போட்டது.

என்ன சார் சொல்றீங்க ? வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. அதுக்குள்ளேயா என்று நான் கேட்டபோது…. ‘ஆமாம்’ என்று தலையாட்டினார்.

‘தம்பி எனக்கு எங்க ஊரு தான் சரிப்பட்டு வரும் போல…. சென்னை எனக்கு ஒத்து வரல. நான் கிளம்புறேன்’ என்றார் ராஜேந்திரன் சார் .

‘சார் என்ன சொல்றீங்க?’ என்று கேட்டபோது, அவர் கிளம்புவதை ஒரு வாரத்திற்கு முன்பே சொன்னார். எனக்கு அந்த நட்பின் நீளம், நட்பின் தூரம் இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எனக்கு தெரியாது. என் மனமெங்கும் வியாபித்திருந்த மகிழ்ச்சியின் எல்லைக் கோடுகள் சட்டென்று சுருங்கியது.

அவர் புறப்பட வேண்டிய நாளும் வந்தது. அதுவரையில் வெளியில் வராதவர் ‘தம்பி டீ குடிக்க போலாமா?’ என்றார்.

‘போயிட்டு வரலாம் சார்’ என்று இருவரும் காலார நடந்து போனோம். ஊரடங்குச் சட்டம் என்பதால் அங்கங்கே மனிதர்கள் தென்பட்டார்கள். முகக் கவசமிட்டு இருவரும் நடந்து போனோம். காபி குடித்ததற்கும் பில்லை அவரே கொடுத்தார். வீட்டுக்கு வந்தோம்.

நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது அவரின் காதில் விழுந்திருக்கும் போல.

‘தம்பி நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?’ என்றார்.

‘என்ன சொல்லுங்க?’ என்றேன்.

‘கட்டில் இருக்கு. கட்டில் எடுத்துக்குங்க. வண்டியில ஏத்திட்டு போக முடியாது’ என்றார்.

‘வேண்டாம் சார்’ என்றேன்.

‘இல்ல நீங்க எடுத்துக்கங்க. இத கொண்டு போக முடியாது. வண்டியில இடமில்லை’ என்று சொன்னார்.

ஆனால் அவருக்கு ‘நான் ஒரு கட்டில் இருந்தா நல்லா இருக்கும் சார். மாடி மேல பாேட்டு படுத்துகிருவேன்’ என்று சொன்ன வார்த்தைகள் அவர் காதுகளில் தங்கியிருக்க வேண்டும். அத்தனை பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போகும் அந்த வாகனத்தில் கட்டிலுக்கு இடம் இல்லையா? என்ன? அவர் என் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் இந்தக் கட்டிலை கொடுத்து இருக்கிறார் என்று எனக்கு தெரிந்தது.

எப்போதும் எட்டு மணிக்கெல்லாம் மாடியை விட்டு கீழே இறங்கிவிடும் ராஜேந்திரன் சார் வீட்டைக் காலி செய்யும் இரவு பத்தரை மணி வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த தமிழ் படித்த தலைமையாசிரியர் வாழ்த்தி விட்டுச் சொன்னார்.

‘தம்பி நீங்க உயர்ந்த இடத்துக்கு வருவீங்க. என்னுடைய வாக்கு பலிக்கும். நான் போயிட்டு வரேன் தம்பி; அடிக்கடி பேசுவோம். நான் சென்னைக்கு வரணும்னா நீங்க கூப்பிட்டாதான் வருவேன். அதுவும் நீங்க சீக்கிரமே கூப்பிடுங்க. உங்களுக்கு நல்ல குணங்கள் இருக்கு. சீக்கிரமா ஜெயிப்பீங்க’ என்று சொல்லிவிட்டு படிகளில் இறங்கினார் ராஜேந்திரன் சார்.

என் மனதுக்குள் மௌனம் குடி கொண்டது. நல்ல நட்பு. நல்ல உறவை இந்தக் கடவுள் ஏன் சீக்கிரமே முடித்து விடுகிறார். இந்த மாடிக்கு இனி எந்த மாதிரியான மனிதர்கள் இனி வருவார்களோ? என்ற கவலை குடி கொண்டது.

ராஜேந்திரன் சார் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டைக் காலி செய்து விட்டு சென்றார்.

அதிலிருந்து அந்த வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் ராஜேந்திரன் சார் உலவியது, அவர் பேசியது என் மனக்கண் முன்னால் விரிந்து கொண்டே இருக்கும். இந்த பக்கத்து வீட்டிற்கு இனி யார் வருவார்கள் அவரைப்போல் பேசுவார்களா? என்ற சந்தேகம் எனக்குள் எழுந்து நின்றது.

ஒவ்வொரு நாளும் கதவு திறந்து பார்க்கும் போதெல்லாம் பக்கத்து மாடி காலியாக இருக்கும்.

ஆனால் என் மனக்கண்ணில் ராஜேந்திரன் சார் நடந்தது, பேசியது மட்டுமே என்னுள் வந்து வந்து போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *