செய்திகள்

நேரடி இந்திய விமானங்களுக்கு இன்று முதல் கனடா அனுமதி

ஒட்டாவா, செப். 27–

இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை 5 மாதங்களுக்கு பிறகு, இன்று முதல் அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

நேரடி விமான தடை காரணமாக, கனடாவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனர். இணைப்பு விமானங்களில் துபாய், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன், மூன்றாவது நாட்டில் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆனது.

அனுமதிக்க முடிவு

இந்த நிலையில், இன்று முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடா போக்குவரத்துத் துறை, பயணிகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பயணிகள் புறப்பட திட்டமிட்ட 18 மணி நேரத்துக்குள், டெல்லி விமான நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜெனஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கனடாவின் இந்த முடிவை இந்திய தூதர் அஜய் பிசாரியா வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *