ஜப்பானிய விஞ்ஞானிகள், இதுவரை தாவர மரபணுக்களில் செய்ய முடியாத ஒன்றை செய்து காட்டியுள்ளனர். இது குறித்த ஆய்வை, ‘நேச்சர் பிளான்ட்ஸ்’ இதழ் வெளியிட்டு உள்ளது.
தாவரங்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. என்ற மரபணு மிகவும் சிக்கலானவை. எனவே, அவற்றை அண்மைக்காலம் வரை மரபணு திருத்தம் செய்ய முடியாமல் இருந்தது.
ஒரு செல்லின் மைய, டி.என்.ஏ. வைத் தவிர, செல்லுக்கு தெம்பு தரும் ஆற்றல் கருவூலமாக, மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.வும் உள்ளது. விலங்கு செல்களில் இதன் கட்டமைப்பு மிகவும் எளிமையானது. ஆனால், தாவரங்களில் மிகவும் சிக்கலான அமைப்பை கொண்டுள்ளது.
பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள், வறட்சி மற்றும் நோய் எதிர்ப்புள்ள பயிர்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள் மரபணு திருத்தத்தின் மூலம் சாதிக்கின்றனர்.
இத்தனைக்கும் செல்களின் ஒரு பகுதியான மைய, டி.என்.ஏ. க்களை மட்டுமே அவர்களால் கையாள முடிந்துள்ளது. இதனால், மக்காச் சோளம், வாழைப் பழம் போன்ற மரபணு திருத்தப்பட்ட பயிர்கள், திடீரென நோய்களுக்குட்பட்டு அழிந்து போவது அடிக்கடி நடக்கிறது.
இதை தடுக்கவும், பயிர்களின் மரபணு பன்மைதன்மை நீடிக்கவும் மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.வின் கட்டமைப்பை அறிந்து, அதையும் திருத்தவேண்டியது அவசியம் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் தான், டோக்கியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நெல் மற்றும் கடுகு ஆகியவற்றின் மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. க்களை முதல் முறையாக திருத்தம் செய்து வெற்றி கண்டுள்ளனர். இதனால், அப்பயிர்களின் வித்துக்கள் வீரிய முள்ளவையாக ஆகியுள்ளன.