செய்திகள்

நெசவாளர்களின் ரூ.65 கோடி கடன் தள்ளுபடி

கோவை, மே.15–
சிறு, குறு விசைத்தறியாளர்கள் பெற்ற ரூ.65 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு கடன் சங்கத்தில் வீடு கட்ட பெற்ற கடன், வட்டி, அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெசவாளர்களை பாதுகாக்கும் அரசு அம்மாவின் அரசு என்றும் அவர் கூறினார்.
வரும் 19–ந் தேதி அன்று 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். அண்ணா தி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிட்டம்பாளையம் நால்ரோடு, சோமனூர் பவர் அவுஸ், சூலூர் ஆகிய இடங்களில் அண்ணா தி.மு.க. வேட்பாளார் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது :-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும் போது இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன், அதனை தள்ளுபடி செய்வேன் என பொய்யான வாக்குறுதியை அளித்து வருகிறார். இவரால் எப்படி வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்றால் தான் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைக்க முடியும். எனவே, சூலூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இலவச மின்சாரம்
இந்தப் பகுதி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் இன்னல்களை களையும் வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஜி.எஸ்.டி வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜாப் ஒர்க் செய்யும் நெசவுத்தொழில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஜி.எஸ்.டி. வரி பாதிப்புகளில் இருந்து அவர்களைக் காத்திட இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்கள் வாழ்வு சிறக்கவும், பாதுகாக்கவும் எவ்வித இடர்பாடுகளும் இன்றி நெசவுத் தொழில் செய்ய ஏதுவாக கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் அரசு அம்மாவுடைய அரசு.
ரூ. 65 கோடி கடன் தள்ளுபடி
விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் சிறு, குறு விசைத்தறியாளர்கள் 31.03.2017க்கு முன்பு பெறப்பட்ட மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும். அதே போன்று கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வீடு கட்ட பெற்ற கடன் தொகை, வட்டி, அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களை பாதுகாக்கும் அரசு அம்மாவுடைய அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அப்போது மின் தடை அதிகமாக இருந்தது. இதனால் விவசாயிகளும், நெசவாளர்களும், தொழில் செய்வோர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். அம்மா மின்சாரத்துறையில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 3 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது. தி.மு.க. ஆட்சியின் போது 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இன்று 16,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக 6,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து மின்வெட்டே இல்லாத ஒரு மாநிலமாக மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தடுப்பணைகள்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது அதில் 304 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில் தற்போது ரூ.40,000 கோடி அளவுக்கு தொழில் தொடங்க தொழில் நிறுவனத்தினர் முன் வந்துள்ளார்கள். பெய்கின்ற மழை நீரை தடுத்து தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக 4 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் அளிக்கும் ஆய்வின் அடிப்படையில் எந்தெந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமோ, அந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இது வரை 3000 ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும்.
பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடிட வேண்டும் என்பதற்காக ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதே போன்று விவசாய தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்து அந்த திட்டம் என்னால் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து அத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும்.
மானிய விலையில் ஸ்கூட்டர்
அம்மா 2016 சட்டமன்ற தேர்தலின் போது உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். அந்த அடிப்படையில் இது வரை 3.34 லட்சம் மகளிர் பதிவு செய்துள்ளனர். படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும். மேலும், மக்களின் நலன்களை காக்கின்ற வகையில் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவித்தொகை, பயிர்சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு தொகை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம். பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அதிக அளவில் காப்பீட்டுத்தொகை பெற்றுத்தந்த அரசு அம்மாவுடைய அரசு. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியிலும் அதிக அளவு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. சில பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கழக ஆட்சியில் 247 ஆரம்பப்பள்ளிகள் தொடங்க பட்டுள்ளது. 51 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 1,079 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு விருதுகள்
அம்மாவுடைய அரசின் சிறந்த நிர்வாகத்திறமையின் காரணமாக உள்ளாட்சித்துறையில் 20 விருதுகளும், மின்சாரத்துறை, பள்ளி கல்வித்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளில் தேசிய அளவில் விருதுகள் பெற்று முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது தான் இந்த அரசின் லட்சியம். அம்மாவின் வழியில் அம்மா அறிவித்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்படும். கருமத்தம்பட்டி பேரூராட்சியில் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போன்று செம்மாண்டப்பாளையம் ஊராட்சியில் ரூ.5.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.
எனவே, இது போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட கழகத்தின் சார்பில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு எம்.ஜி.ஆர். கண்ட, அம்மாவினால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *